தேடுதல்

இந்தியாவைவிட்டு வெளியேறும் இஸ்பானிய அருள்சகோதரி Enedina இந்தியாவைவிட்டு வெளியேறும் இஸ்பானிய அருள்சகோதரி Enedina  

54 ஆண்டு சேவைக்குப் பரிசு, வெளியேற்றம்

பழங்குடியினரிடையே சேவையாற்றிய இஸ்பானிய அருள்சகோதரியை 10 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டது இந்திய அரசு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

50 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் ஏழைகளிடையே பணியாற்றி வந்த 86 வயது நிரம்பிய இஸ்பானிய அருள்சகோதரி ஒருவரின் தங்கும் அனுமதியை இந்திய அரசு புதுப்பிக்க மறுத்ததைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 20, இச்செவ்வாயன்று நாட்டிலிருந்து வெளியேறினார் அவர்.

புனித வின்சென்ட் தெ பவுலின் வாழ்வுமுறைகளைப் பின்பற்றும் பிறரன்பின் புதல்வியர் சபையைச் சேர்ந்த 86 வயது நிரம்பிய அருள்சகோதரி Enedina அவர்கள், 1959ம் ஆண்டு மருத்துவப் படிப்பை இஸ்பெயினில் முடித்து, 1965ம் ஆண்டு இந்தியா வந்து, பழங்குடியினர் மற்றும் தலித் மக்களிடையே சேவையாற்றத் துவங்கினார். 

கடந்த 54 ஆண்டுகளாக ஏழை மக்களிடையில் மருத்துவப்பணிகளையும் கல்விப்பணிகளையும் ஆற்றிவந்த அருள்சகோதரி Enedina அவர்கள், ஒவ்வொரு முறையும் தன் தங்கும் அனுமதியை தவறாமல் புதுப்பித்து வந்தாலும், இந்திய அரசு இவ்வாண்டில் எவ்வித காரணமும் கூறாமல், புதுப்பிக்க மறுத்ததுடன், 10 நாட்களுக்குள் வெளியேறுமாறு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இசெவ்வாயன்று, நாட்டை விட்டு வெளியேறி இஸ்பெயினுக்குப் பயணமானார்.

வட இந்தியாவின் Berhampur பகுதியில் சேவையாற்றிவந்த அருள்சகோதரி Enedina அவர்கள், நாட்டைவிட்டு வெளியேற கட்டளை இடப்பட்டது மிகவும் வருத்தம் தரும் செய்தியாக உள்ளது என்ற கவலையை வெளியிட்ட Berhampur ஆயர் Sarat Chandra Nayak அவர்கள், மருத்துவக் கல்வி பயின்ற அருள்சகோதரிகள், தங்கள் பகுதியில் இல்லாத நிலையில், இந்த சகோதரி வெளியேற்றப்பட்டுள்ளது, பூர்வீகக்குடியினருக்கும் தலித் மக்களுக்கும் பெரிய இழப்பாக உள்ளது என்றார்.

அருள்சகோதரி Enedina அவர்கள் சார்ந்திருக்கும் பிறரன்பின் புதல்வியர் துறவு சபை, 1633ம் ஆண்டு பிரான்சில் துவக்கப்பட்டு, 16,179 அங்கத்தினர்களுடன் 90 நாடுகளில் பணியாற்றி வருகிறது. 1940ம் ஆண்டு இந்தியாவில் சேவையாற்ற வந்த இத்துறவு சபை, 14 மறைமாவட்டங்களில் 42 இல்லங்களைக் கொண்டு சேவையாற்றி வருகிறது. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 August 2019, 15:07