தேடுதல்

Vatican News
இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்களின் மறைவிற்கு இரங்கல் இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்களின் மறைவிற்கு இரங்கல்  (AFP or licensors)

சுஷ்மா சுவராஜ் அவர்களின் மறைவிற்கு கத்தோலிக்கர் இரங்கல்

சுஷ்மா சுவராஜ் அவர்கள், கடத்தப்பட்ட கத்தோலிக்க இரு அருள்பணியாளர்கள், போர் நெருக்கடியில் சிக்கியிருந்த செவிலியர்கள் விடுதலை பெற உதவியவர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்களின் மறைவிற்கு, இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள் உட்பட, தலத்திருஅவைத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இஸ்லாம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இரு கத்தோலிக்க அருள்பணியாளர்கள் விடுவிக்கப்படுவதற்கு, சுஷ்மா சுவராஜ் அவர்கள் மிகுந்த முயற்சிகள் எடுத்தார் எனவும்,  அவர், தனது பணியின் அனைத்துத் தீர்மானங்களிலும், மனிதாபிமான உணர்வுடன் செயல்பட்டார் எனவும், கர்தினால் கிரேசியஸ் அவர்கள் நினைவுகூர்ந்துள்ளார்.

சுஷ்மா சுவராஜ் அவர்கள், வெளியுறவுத்துறை அமைச்சர் என்ற முறையில், சிறந்த வெளியுறவுத் தூதராகவும், பன்னாட்டுச் சூழல்களில் நாட்டின் மாபெரும் அடையாளத்தைப் பிரதிபலித்தவர் என்றும், மும்பை பேராயர் கர்தினால் கிரேசியஸ் அவர்கள் பாராட்டியுள்ளார்.

2016ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி, ஏமன் நாட்டின் ஏடனில் கடத்தப்பட்ட சலேசிய அருள்பணியாளர் தாமஸ் உழுன்னலில் அவர்களின் விடுதலைக்கு சுஷ்மா சுவராஜ் அவர்கள் ஆர்வமுடன் செயல்பட்டதற்கு தனது நன்றியையும் கர்தினால் கிரேசியஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். அருள்பணி உழுன்னலில் அவர்கள், 18 மாதங்கள் சென்று, 2017ம் ஆண்டு செப்டம்பரில் விடுவிக்கப்பட்டார்.

அதேபோல், ஆப்கானிஸ்தானில் 2014ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி கடத்தப்பட்ட இயேசு சபை அருள்பணியாளர் அலெக்ஸ் பிரேம் குமார் அவர்களும், பாதுகாப்பாக விடுதலைபெற உதவினார், சுஷ்மா சுவராஜ். அருள்பணி பிரேம் குமார் அவர்கள், 2015ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி விடுவிக்கப்பட்டார்.

மேலும், வெளிநாடுகளில் போர்ச்சூழலில் சிக்கியிருந்த இந்தியர், நாடு திரும்பவும், இன்னும், பயண ஆவணம் சார்ந்த பிரச்சனைகளைக் கொண்டிருந்த இந்தியர்களுக்கும் சுஷ்மா சுவராஜ் அவர்கள் உதவியுள்ளார்.

இந்து ஆதரவு பிஜேபி கட்சியின் முக்கிய உறுப்பினராக பணியாற்றிய சுஷ்மா சுவராஜ் அவர்கள், தனது 67வது வயதில், ஆகஸ்ட் 6, இச்செவ்வாயன்று, மாரடைப்பால் இறைவனடி சேர்ந்தார். (UCAN)

08 August 2019, 15:29