தேடுதல்

Vatican News
கும்பல் கொலைகளை நிறுத்துக கும்பல் கொலைகளை நிறுத்துக  

கும்பல் கொலை வழக்கு தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது

கும்பல் கொலை நடைபெற்றதற்கு வலுவான காணொளி ஆதாரங்கள் இருக்கின்றபோதும், இக்கொலை தொடர்பான குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டிருப்பது கவலை தருகின்றது – ஆஜ்மீர் ஆயர்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

இராஜஸ்தான் மாநிலத்தில், ஈராண்டுகளுக்குமுன், ‘பசு பாதுகாப்பு’ என்ற நடவடிக்கையில்,  நடத்தப்பட்ட கும்பல் கொலை வழக்கில், கைதான குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று, அம்மாநில ஆயர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

2017ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி, பெஹ்லு கான் (Pehlu Khan) என்ற 55 வயது நிரம்பிய முஸ்லிம், பொதுவான ஒரு சாலையில், ‘பசு பாதுகாப்பு’ கும்பலால் கொடூரமாய்த் தாக்கப்பட்டார். பின்னர் அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். அதற்குப் பின்னர், தனது தந்தை, தனது கண்ணெதிரே கொடூரமாகத் தாக்கிக் கொல்லப்பட்டதற்கு, அவரது மகன், நீதி கேட்டு, இராஜஸ்தான் கீழ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் போதிய ஆதாரமில்லை என்று சொல்லி, ஆகஸ்ட் 14, இப்புதனன்று நீதிமன்றம் விடுதலை செய்வதாக அறிவித்துள்ளது.

நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு தனக்கு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும், வேதனையையும் அளித்திருப்பதாக, யூக்கா செய்தியிடம் கூறியுள்ள, ஆஜ்மீர் ஆயர் பயஸ் தாமஸ் டி சூசா அவர்கள், கும்பல் கொலை நடைபெற்றதற்கு வலுவான காணொளி ஆதாரங்கள் இருக்கின்றபோதும், இத்தகைய தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது கவலை தருகின்றது என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கில் நீதி கிடைக்கும் என்று, தான் நம்புவதாகவும், ஆயர் டி சூசா அவர்கள், தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இத்தீர்ப்பு குறித்து ஊடகங்களிடம் பேசிய முதலமைச்சர் Ashok Gehlot அவர்கள், இராஜஸ்தான் அரசு, இத்தீர்ப்பு குறித்து உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலின்போது, கான் அவர்களும், அவரின் இரு மகன்களும், அருகிலுள்ள ஹரியானா மாநிலத்திலிருந்து தங்களின் வீட்டிற்கு பிராணிகளை ஓட்டிச்சென்றபோது, அவர்கள், பசுக்களைக் கொல்வதற்காக கடத்திச் செல்கிறார் என, அந்தக் கும்பல் கான் மீது குற்றம் சுமத்தித் தாக்கியது.

பல வட இந்திய மாநிலங்களைப் போல், இராஜஸ்தானிலும், பசுக்களைக் கொல்வது, சட்டத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது. (UCAN)

2015ம் ஆண்டு மே மாதம் முதல், 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில், இந்தியாவின் 12 மாநிலங்களில் குறைந்தது 44 பேர், கும்பல்களால் கொலை செய்யப்பட்டனர். அவர்களில் 36 பேர் முஸ்லிம்கள் என்று, ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் எனப்படும் மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

16 August 2019, 15:03