தேடுதல்

Vatican News
போர்த்துக்கீசியர்கள் கோவாவைவிட்டு செல்கையில்... போர்த்துக்கீசியர்கள் கோவாவைவிட்டு செல்கையில்... 

சாம்பலில் பூத்த சரித்திரம்: தமிழகத்தில் போர்த்துக்கீசியர்கள்

சீனாவில் நற்செய்தியை அறிவிக்கும் ஆர்வத்தில் சான்சியன் தீவுக்குச் சென்றார் புனித சவேரியார். ஏனெனில் வெளிநாட்டவர் சீனாவுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும், அவர் சீனா செல்வதற்கு வேறு வழிகளைத் தேடுவதற்குமுன், நோயால் தாக்கப்பட்டு, சான்சியன் தீவில் இறைவனடி சேர்ந்தார்

மேரி தெரேசா – வத்திக்கான்

போர்த்துக்கீசியர்கள் இந்தியாவில் வர்த்தகம் செய்யவந்தபோது, இறைப்பணியாற்ற தங்களுடன் அருள்பணியாளர்களையும் அழைத்து வந்தனர். அந்த அருள்பணியாளர்கள் இறைப்பணியாற்றிவந்த அதேநேரம், போர்த்துக்கீசிய வர்த்தகர்களும், போர் வீரர்களும், அருள்பணியாளர்களுக்கு இணையாக, திருஅவை மீது ஆர்வம் கொண்டு செயலாற்றியதை, மறைப்பணியாளர்களின் குறிப்புக்களில் காண முடிகின்றது. அக்காலத்தில் முத்துக்குளித் துறை, வெளிநாட்டு வர்த்தகர்களுக்கு ஒரு தனிக்கவர்ச்சியை அளித்திருந்தது. இப்பகுதிக்கு, போர்த்துக்கீசியர்கள் வருவதற்கு முன்பே, 1516ம் ஆண்டில் அரேபிய வர்த்தகர்கள், முத்து வர்த்தகத்தை, தங்களின் ஆதிக்கத்தின்கீழ் அமைத்திருந்தது மட்டுமன்றி, முத்துக் குளிக்கும் ஏழை மீனவர்களான பரதவ மக்களையும், அடிமைகள் போல் நடத்தி வந்தனர். இதனை விரும்பாத பரதவ மக்களுக்கும், அரேபியர்களுக்கும் இடையே பகைமை புகைந்துகொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் அந்தப் பகைமை, தீயென பற்றி எரியத் தொடங்கியது. இதற்கு ஆதிகாரணம் என்னவெனில், ஒரு நாள் ஓர் அரேபியன், மீனவப் பெண் ஒருவரை அவமானப்படுத்தி, அப்பெண்ணின் கணவரது காதையும் கிழித்துவிட்டான். இதனால் ஆத்திரமடைந்த பரதவர்கள், அந்த அரேபியனைத் தாக்கினர். அதைத்தொடர்ந்து, அந்த அரேபியனைச் சார்ந்த முஸ்லிம்கள், பரதவர்களை எதிர்க்க, இது ஒரு பெரிய போராக உருவெடுத்தது. இருதரப்பிலும் ஆள்சேதம் ஏற்பட்டது.

பரதவர்கள் கிறிஸ்தவத்தில்

பணபலமும், ஆள்பலமும் கொண்டிருந்த அரேபியர்கள், பரதவர்களை முற்றிலும் அழிப்பதற்குச் சபதம் எடுத்தனர். அவர்கள், தங்களின் பணபலத்தால், குறுநில மன்னர்களின் உதவிகளையும் பெற்றனர். பரதவர்களைக் கொன்று கொண்டுவரப்படும் ஒவ்வொரு தலைக்கும், ஐந்து பணம், அதாவது, இரண்டனா என்று அறிவிக்கப்பட்டது. பரதவ மக்கள் எவ்வளவு பேர் கொல்லப்பட்டார்கள் என்றால், அரேபியர்கள், ஒவ்வொரு தலைக்குமுள்ள சன்மானத் தொகையை ஒரு பணமாகக் குறைத்துவிட்டனராம். ஜான் தா குரூஸ் என்ற போர்த்துக்கீசியருக்கு இதைக்காண சகிக்கவில்லை. எனவே அவர், பரதவ மக்களிடம் ஓர் ஆலோசனை கூறினார். அச்சமயம், கொச்சியிலிருந்த போர்த்துக்கீசிய கப்பல் தலைவர் பெரோ வாஸ் தி அமரால் என்பவரிடம் சென்று, தங்களுக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு கேட்கச் சொன்னார். உடனடியாக, பரதவ சமுதாயத்தில் முக்கியமான 15 பேர் முதலில் கொச்சி சென்றனர். அவர்கள் உதவியை நாடியபோது, பரதவர்கள் அனைவரும் கத்தோலிக்கத்தைத் தழுவ உடன்பட்டால், அவர்களுக்கு உதவி செய்வதாக உறுதியளித்தார் தி அமரால். அந்த 15 பேரும் அதற்கு சம்மதம் தெரிவித்தனர். ஆயினும், இதனை உறுதி செய்வதற்கு, இன்னும் எழுபது பரதவர்களை கொச்சிக்கு வரவழைத்தார் அவர். தங்கள் பரதவ இனத்தவரின் முழு ஒப்புதலின் அடையாளமாக, அந்த 85 பேரும், 1535ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருநீராட்டுப் பெற்று, கத்தோலிக்கச் திருஅவையில் இணைந்தனர். அதற்குப் பின்னர், தி அமரால் அவர்கள், பரதவ மக்களை அரேபியர்களிடமிருந்து பாதுகாப்பதற்கு, இந்த புதிய கிறிஸ்தவர்களுடன், ஒரு கப்பற்படையையும், அம்மக்களை திருமறையில் சேர்ப்பதற்கு கொச்சி ஆயரையும், நான்கு அருள்பணியாளர்களையும் அனுப்பி வைத்தார்.

இதைக் கண்ட அரேபியர்கள், போர்த்துக்கீசிய கப்பல் தலைவரையும், தங்களின் பணபலத்தால் வசப்படுத்த முயற்சி செய்தனர். ஆனால் அவரோ, தன் எடைக்குப் பொன் தந்தாலும்கூட, பரதவ மக்களைக் கிறிஸ்தவ மறையில் சேர்ப்பதற்கு கிடைத்த நல்வாய்ப்பை நழுவவிட முடியாதென உறுதியாகக் கூறிவிட்டார். அப்புறம் என்ன. அரேபியர்கள் விரைவில் விரட்டியடிக்கப்பட்டனர். பரதவ மக்களும், சுதந்திரமாக முத்துக் குளிக்கும் உரிமை பெற்றனர். 1536ம் ஆண்டில், முப்பது கிராமங்களிலிருந்த இருபதாயிரம் மக்களும், 1537ம் ஆண்டில், தூத்துக்குடி, வேம்பார், வைப்பார் ஆகிய ஊர்களிலிருந்த மக்களும் திருஅவையில் இணைந்தனர் (வாளின் வெற்றி, அ.சகோ.கொரோனா ம.ஊ.ச.). இத்தகைய சூழலில், புனித பிரான்சிஸ் சவேரியார், கீழை நாடுகளில் நற்செய்தியை அறிவிப்பதற்காக, 1542ம் ஆண்டு மே 6ம் நாள், இந்தியாவின் கோவாவில் வந்திறங்கினார். அவர் இந்தியாவில் இறைப்பணியாற்றிய மூன்று ஆண்டுகளில் பெரும்பகுதியை, தென்கிழக்கு கடற்கரையில் வாழ்ந்த எளிமையான, முத்துக் குளிக்கும் ஏழை மீனவர்களான பரதவர்கள் மத்தியில் செலவழித்தார். தமிழ் மொழிபெயர்ப்பாளர்களின் உதவியுடன், கிராமம் கிராமமாகச் சென்று நற்செய்தியை அறிவித்து, அவர்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்தினார்.

ஆசியாவில் புனித சவேரியார்

அதற்குப்பின், இலங்கை, மொலூக்கா தீவுகள், பான்டா தீவுகள் மற்றும், மலாய் தீபகற்பம் சென்று நற்செய்தி அறிவித்தார், புனித சவேரியார். 1549ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் நாள், ஜப்பான் நாட்டின் Kagoshima சென்று, ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் ஜப்பானில் தங்கினார். திருமறை நூல்களை மொழிபெயர்க்கச் செய்து, பலரை திருமறையில் சேர்த்தார். அடுத்து சீனாவில் நற்செய்தியை அறிவிக்கும் ஆர்வத்தில் சான்சியன் தீவுக்குச் சென்றார். ஏனெனில் வெளிநாட்டவர் சீனாவுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும், சீனா செல்வதற்கு வேறு வழிகளைத் தேடுவதற்குமுன், நோயால் தாக்கப்பட்டு, சான்சியன் தீவில், 1552ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி தனது 46வது வயதில் இறைவனடி சேர்ந்தார். இவரது உடல் கோவாவிற்குக் கொண்டுவரப்பட்டு, பாம்ஜேசு திருத்தலத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. 1622ம் ஆண்டு திருத்தந்தை 15ம் கிரகரி அவர்களால், இவர் புனிதராக அறிவிக்கப்பட்டார். மறைப்பணியாளர்களுக்குப் பாதுகாவலர் மற்றும் கீழை நாடுகளின் திருத்தூதரான புனித பிரான்சிஸ் சவேரியார், ஏறத்தாழ முப்பதாயிரம் பேருக்கு திருநீராட்டினார் என வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன.    

21 August 2019, 15:30