தேடுதல்

Vatican News
ஜப்பானில் புனித பிரான்சிஸ் சவேரியார் ஜப்பானில் புனித பிரான்சிஸ் சவேரியார் 

சாம்பலில் பூத்த சரித்திரம்: ஜப்பானில் கிறித்தவம் பகுதி-1

Shimazu நிலப்பரப்புக்கு வெளியே போர்த்துக்கீசிய கப்பல் ஒன்று வந்து நின்றதால், அது மறைப்பணியாளர்கள் வழியாக, தங்களின் பாதுகாப்பான ஐரோப்பிய வர்த்தகத்திற்கு தடங்கலாக இருப்பதாக, Shimazu குடும்பம் கருதியது

மேரி தெரேசா – வத்திக்கான்

இஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இயேசு சபை மறைப்பணியாளர் புனித பிரான்சிஸ் சவேரியார் (1506-1552), போர்த்துக்கீசிய காலனியாகிய கோவாவில், 1541ம் ஆண்டில், முதலில் இறைப்பணியைத் தொடங்கினார். அதன்பின்னர், போர்த்துக்கீசியரின் மற்றொரு காலனியாகிய மலேசியாவின் மலாக்காவிற்கு 1545ம் ஆண்டில் இறைப்பணியாற்றச் சென்றார். அச்சமயத்தில், மலாக்காவில், Anjiro அல்லது Yajiro எனப்படும் ஜப்பானிய இளைஞரைச் சந்தித்தார். அந்த இளைஞர், Kyushuவின் தென்முனையிலுள்ள Satsuma, அதாவது இப்போதைய Kagoshima பகுதியைச் சேர்ந்தவர். ஒரு கொலைக் குற்றம் தொடர்பாக, இவர் மலாக்காவுக்குத் தப்பித்து வந்தவர். அங்கு அவர், போர்த்துக்கீசிய மொழியைக் கொஞ்சம் கற்றதுடன், கிறிஸ்தவத்தில் பற்றுகொண்டு, அதைப் பற்றி அறிவதற்கு மிகுந்த ஆவல் கொண்டிருந்தார். இளைஞர் Anjiroவின் கிறிஸ்தவ ஆர்வம் மற்றும், ஜப்பானைப் பற்றி அவர் சொன்ன கதைகளைக் கேட்ட சவேரியார், இறைவார்த்தையைப் பரப்புவதற்கு ஜப்பான் முதல்தரமான இடம் என்பதில் உறுதிபூண்டார். ஆதலால், சவேரியாரும், இளைஞர் Anjiro, வேறு இரு இஸ்பானிய இயேசு சபை அருள்பணியாளர்கள், ஓர் இந்தியர் மற்றும், புதிதாக கிறிஸ்தவத்தைத் தழுவிய இரு ஜப்பானியர்கள் ஆகியோருடன், சீன கப்பலில் ஜப்பானுக்குப் புறப்பட்டார். புனித சவேரியார் தலைமையிலான அக்குழு, 1549ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் நாள் ஜப்பானின், Kagoshimaவை அடைந்தது. எனவே, புனித பிரான்சிஸ் சவேரியாரே, ஜப்பானுக்குச் சென்ற முதல் கிறிஸ்தவ மறைப்பணியாளர் ஆவார்.

ஜப்பானில் வரவேற்பு

அச்சமயத்தில், Satsumaவை ஆட்சிசெய்த Shimazu குடும்பம், Tanegashima தீவையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. 1543ம் ஆண்டில் முதல் ஐரோப்பியர்கள், ஜப்பானில்  கால்பதித்த தீவும் இதுதான். அந்த ஐரோப்பியர்கள் வைத்திருந்த துப்பாக்கிகள் மற்றும், வெகுவிரைவில் அவற்றைத் அவர்கள் தயார்செய்த திறன் போன்றவற்றால், Shimazu குடும்பம் ஈர்க்கப்பட்டிருந்ததால், புனித சவேரியார் குழுவையும், மிகுந்த மரியாதையுடன் வரவேற்றது. அத்துடன், அக்குழு, தன்னுடன் கொண்டுவந்திருக்கும் பொருள்களைப் பார்ப்பதற்கும் மிகுந்த ஆர்வமாய் இருந்தது. எனவே, அவர்கள் தங்களுக்குத் தெரிந்தவற்றைப் பேசுவதற்கு அக்குடும்பம் அனுமதித்தது. புனித சவேரியார் குழுவும், மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன், நற்செய்தி அறிவிப்பைத் தொடங்கியது. புனித சவேரியாரும், அவரோடு சென்ற இஸ்பானியர்களும், ஜப்பானிய மொழியைக் கற்கத் தொடங்கினர். விரைவில், தங்களது மறையுரைகளை, இலத்தீன் எழுத்துக்களாக, ஜப்பானிய எழுத்துக்களில் எழுதி, போதிக்கத் தொடங்கினர். இவர்களின் மறையுரைகளால் ஜப்பானியர்கள் அதிகம் கவரப்பட்டனர். இந்த இயேசு சபையினரும், விசுவாசம் சார்ந்த கோட்பாடுகளை விட்டுக்கொடுக்காமல், உள்ளூர் பழக்கவழக்கங்களைப் பின்பற்ற முயற்சி செய்தனர். மாமிசம் சாப்பிடுவதைக் கட்டுப்படுத்தி, ஜப்பானிய சமுதாயத்தில் தங்களை எளிதாக இணைத்தனர். அதேநேரம், ஜப்பானியர்கள் போன்று, தினமும் குளிக்க இவர்களால் இயலவில்லை. அதனால், குளிர்காலத்தில் 15 நாள்களுக்கு ஒருமுறையும், மற்ற காலங்களில் வாரத்திற்கு ஒருமுறையும் மட்டும் குளித்தனர். இந்த மறைப்பணியாளர்களை, உள்ளூர் மக்களின் பண்புகள் வியக்க வைத்தாலும், பொதுவாக, அவர்களுக்கும், புத்தமத துறவிகளுக்கும் இடையே காழ்ப்புணர்வே நிலவியது. புனித சவேரியார் குழுவினருக்கு, பிற மத நண்பர்கள் சிலர் இருந்தாலும், இக்குழுவினர், புத்தமதத் துறவிகளைச் சோம்பேறிகள் எனக் கருதினர். அதேநேரம், அத்துறவிகளோ, ஐரோப்பியர்கள் பொய்களைப் பரப்புகின்றனர் என எண்ணினர். இதற்கு ஒரு காரணம் இருந்தது.

மொழி பிரச்சனை

ஜப்பானில் புனித சவேரியார் குழுவினருக்கு, இறைப்பணியாற்றுவதற்கு மொழி தடங்கலாகவே அமைந்திருந்தது. பல நேரங்களில் மொழி பெயர்ப்பாளர்களைக் கொண்டே பணியாற்றினர். இதில் பிழைகள் நடந்தன. எடுத்துக்காட்டாக, இளைஞர் ஆஞ்சிரோ, கடவுளை, புத்தமத தெய்வமாகிய Dainichi என்று மொழி பெயர்த்தார். இதனால், இந்தக் குழுவினரை, ஒரு புதிய புத்தமதப் பிரிவு என, அந்த துறவிகள் கருதினர். இந்த மொழி பெயர்ப்புப் பிழையை, இரு ஆண்டுகளுக்குப் பின்னரே புனித சவேரியார் கண்டுபிடித்தார். அதனால், அவர், கடவுளை, தேயுஸ் (Deus- deusu) எனச் சொல்ல முயற்சித்தார். ஆனால், ஜப்பானியத்தில், “பெரிய பொய்” எனப் பொருள்படும் daiuso என, அம்மக்களுக்கு அது ஒலித்தது. “விண்ணக ஆண்டவர்” எனப் பொருள்படும் Tenshuவில்தான் புனித சவேரியார் குழு தங்கியிருந்தது. பல மொழிபெயர்ப்புகள், புத்தமத உட்பொருள்களைக் கொண்டிருந்ததால், இந்த மறைப்பணியாளர்கள், தங்களின் புதிய சிந்தனைகளுக்கு, இலத்தீன் அல்லது போர்த்துக்கீசிய சொற்களைப் பயன்படுத்தத் தொடங்கினர். எடுத்துக்காட்டுக்கு, தங்களைக் குறிப்பதற்கு, bataren அதாவது போர்த்துக்கீசியத்தில், பாத்ரே, தந்தை எனப் பொருள்படும் சொல்லைப் பயன்படுத்தினர். இதனால், புத்தமதத் துறவிகளை குழப்பத்தில் ஆழ்த்தாது அவர்களால் இறைப்பணியாற்ற முடிந்தது.

புனித சவேரியார் ஐப்பானுக்கு வந்த பத்து மாதங்கள் சென்று, Shimazu அரச குடும்பம், கிறிஸ்தவர்கள் மீது இருந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டது. கிறிஸ்தவர்கள் போதிப்பதையும், புதிதாக மதம் மாற்றுவதையும் தடைசெய்தது அக்குடும்பம். இதற்கு Shimazu நிலப்பரப்புக்கு வெளியே போர்த்துக்கீசிய கப்பல் ஒன்று வந்து நின்றதே காரணம். மறைப்பணியாளர்கள் வழியாக, தங்களின் பாதுகாப்பான ஐரோப்பிய வர்த்தகத்திற்கு இந்தக் கப்பல் தடங்கலாக இருப்பதாக அக்குடும்பம் கருதியது. எனவே புனித சவேரியாரால், Kagoshimaவில் நூறு பேரை மட்டுமே கிறிஸ்தவத்திற்கு மனமாற்ற முடிந்தது. இப்பிரச்சனையால், அங்கிருந்து பின்னர் Hirado சென்றார், புனித சவேரியார்.

28 August 2019, 14:15