தேடுதல்

Vatican News
இலங்கையில் உயிர்ப்புப் பெருவிழா தாக்குதல்களுக்குப்பின் இலங்கையில் உயிர்ப்புப் பெருவிழா தாக்குதல்களுக்குப்பின்  (AFP or licensors)

உண்மைகள் வெளிவர வேண்டும் - இலங்கை கத்தோலிக்கர்கள்

உயிர்ப்புப் பெருவிழாவன்று, இலங்கையில் நடைபெற்ற தாக்குதல்களைக் குறித்த உண்மையான விவரங்கள் விரைவில் மக்களை அடையவேண்டும் - இலங்கை வாழ் கத்தோலிக்கர்களின் விண்ணப்பம்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஏப்ரல் 21, உயிர்ப்புப் பெருவிழாவன்று, இலங்கையின் ஆலயங்களிலும், விடுதிகளிலும் நடைபெற்ற தற்கொலைப்படைத் தாக்குதல்களைக் குறித்த உண்மையான விவரங்கள் விரைவில் மக்களை அடையவேண்டும் என்று இலங்கை வாழ் கத்தோலிக்கர்கள் மீண்டும் ஒரு முறை விண்ணப்பித்துள்ளனர்.

மதச் சுதந்திரம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் ஐ.நா. அவையின் சிறப்புப் பிரிவின் தலைவர், அகமது ஷாஹீத் அவர்கள், ஆகஸ்ட் 15, இவ்வியாழன் முதல், 26ம் தேதி முடிய, 12 நாள் பயணத்தை மேற்கொண்டுள்ளதையடுத்து, இந்த விண்ணப்பங்கள் எழுப்பப்பட்டுள்ளன என்று UCA செய்தி கூறுகிறது.

உயிர்ப்பு ஞாயிறு கொடூரத்தைத் தொடர்ந்து, இலங்கை அரசு பல்வேறு விசாரணைக் குழுக்களை நிறுவியிருந்தாலும், அவற்றின் செயல்பாடுகளும், கண்டுபிடிப்புகளும் இன்னும் வெளிவரவில்லை என்று, இலங்கை ஆயர் பேரவை, ஓர் அறிக்கையை, வருத்தத்துடன் வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே, இலங்கை அரசுத் தலைவர் தேர்தல் இவ்வாண்டு நவம்பர் மாதம் நடைபெறவிருப்பதை மனதில் கொண்டு, உயிர்ப்பு ஞாயிறு கொடுமைக்கு தகுந்த தீர்வுகள் காணும்வரையில், அரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்கள் யாரையும் தான் சந்திக்கப் போவதில்லை என்று, கொழும்பு பேராயர், கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 21, உயிர்ப்பு ஞாயிறு காலை, இலங்கையின் மூன்று ஆலயங்களிலும், மூன்று விடுதிகளிலும் நடத்தப்பட்ட தாக்குதல்களுள், கொழும்பு நகரின் புகழ்பெற்ற புனித அந்தோனியார் திருத்தலத்திலும், நெகொம்போவின் கட்டுவபிட்டியா புனித செபஸ்தியார் கோவிலிலும் நடத்தப்பட்ட தாக்குதல்களில், அதிக உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளன. (UCAN)

15 August 2019, 14:22