தேடுதல்

Vatican News
உரோம் நகரின் அக்கால கிறிஸ்தவக் கல்லறைகள் உரோம் நகரின் அக்கால கிறிஸ்தவக் கல்லறைகள்  (Frank Bach - frank@frankix.dk)

விவிலியத்தேடல்: கல்லறை மனிதரைக் காத்த இறைவன் - 8

"நானும் உம்மோடுகூட இருக்கவேண்டும்", என்பது, நாம் எழுப்பக்கூடிய இறைவேண்டுதல்களிலேயே மிக அழகானதொரு வேண்டுதல்
கல்லறை மனிதரைக் காத்த இறைவன் - 060819

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

தீய ஆவிகள் பிடித்த ஒருவரை இயேசு குணமாக்கியப் புதுமையில் நம் தேடல் பயணம் இன்று நிறைவடைகிறது. இந்த இறுதிப்பகுதியில் நிகழ்வனவற்றையும், அங்கு கூறப்பட்ட கூற்றுகளையும், இயேசு, மற்றும் குணம் பெற்ற மனிதர் என்ற இருவருடைய கண்ணோட்டங்களிலிருந்து ஆய்வுசெய்ய முயல்வோம்.

"நானும் உம்மோடுகூட இருக்கவேண்டும்" (காண்க. மாற்கு 5:18) - என்பது, குணமான மனிதர் இறுதியில் எழுப்பிய வேண்டுதல். நாம் எழுப்பக்கூடிய இறைவேண்டுதல்களிலேயே மிக அழகானதொரு வேண்டுதல் இது மட்டுமே. இறைவனோடு என்றென்றும் இருப்பது ஒன்றுதானே, மனிதர்கள் அனைவரும் வேண்டும் உன்னதமான வரம்.

'இறைவனோடு இருக்கவேண்டும்' என்ற இந்த வேண்டுதல், நற்செய்திகளில் கூறப்பட்டுள்ள வேறு மூன்று நிகழ்வுகளை நினைவுக்குக் கொணர்கிறது.

முதல் நிகழ்வு - இயேசு தோற்றமாற்றம் அடைந்த நிகழ்வு. அந்நிகழ்வைக் கண்டு, தன்னிலை மறந்த பேதுரு, "ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது" (மத். 17:4; மாற். 9:5; லூக். 9:33) என்று கூறியதை, ஒத்தமை நற்செய்தியாளர்கள் மூவரும் குறிப்பிட்டுள்ளனர். பேதுரு விடுத்த விண்ணப்பத்தை நிறைவேற்றாமல், தன் பணியைத் தொடர மலையைவிட்டு இறங்கிவந்த இயேசுவை நாம் இங்கு சந்திக்கிறோம்.

2வது நிகழ்வு – கல்வாரியில், சிலுவையில் நிகழ்ந்தது. அங்கு மரணத்தோடு போராடிக்கொண்டிருந்த இயேசுவிடம், அவருடன் சிலுவையில் அறையப்பட்டிருந்த  இரு குற்றவாளிகளில் ஒருவர், "இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்" என்றான். அதற்கு இயேசு அவனிடம், "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்" என்றார். (லூக்கா 23:42-43) 'தன்னை இயேசு நினைவிற்கொண்டால் போதும்' என்பதை தன் வேண்டுதலாக வெளிப்படுத்திய குற்றவாளியிடம், 'என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்' என்ற பெரும் வரத்தை இயேசு வழங்கினார்.

3வது நிகழ்வு - உயிர்த்த இயேசு, எம்மாவு சென்ற சீடர்களைச் சந்தித்த நிகழ்வு. அங்கு, இயேசு தன் பயணத்தைக் தொடர்வதற்கு விழைந்தபோது, அவர்கள் அவரிடம், "எங்களோடு தங்கும்; ஏனெனில் மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று" என்று கூறிக் கட்டாயப்படுத்தி அவரை இணங்கவைத்தார்கள். அவர் அங்குத் தங்குமாறு அவர்களோடு சென்றார். (லூக்கா 24:29)

கெரசேனர் மனிதரிடம் திரும்பிவருவோம். "நானும் உம்மோடுகூட இருக்கவேண்டும்" என்ற விண்ணப்பத்தை அம்மனிதர் எழுப்பியபோது, இயேசு அதை ஏற்க மறுத்தார். அத்துடன் நில்லாமல், மற்றொரு பணியையும் அவருக்கு அளித்தார்.

இயேசு அவரைப் பார்த்து, "உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உம்மீது இரக்கங் கொண்டு உமக்குச் செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்" என்றார். (மாற்கு 5:19)

பேய்களின் பிடியிலிருந்த விடுதலைபெற்ற ஒருவருக்கு இயேசு தந்த அந்தக் கட்டளை, நம்மை மாற்கு நற்செய்தியின் இறுதிப் பிரிவுக்கு அழைத்துச் செல்கிறது. அங்கு உயிர்த்த இயேசு, முதலில் மகதலா மரியாவைச் சந்தித்ததையும், பின்னர் சீடர்களுக்கு தந்த கட்டளையையும் இங்கு நினைவுகூறுகிறோம்.

முதலில் மகதலா மரியாவைக் குறித்து சிந்திப்போம். அவருக்கு இயேசு தோன்றிய காட்சி, மாற்கு நற்செய்தி 16ம் பிரிவில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது:

மாற்கு 16: 9-10

வாரத்தின் முதல் நாள் காலையில் இயேசு உயிர்த்தெழுந்தபின்பு அவர் முதலில் மகதலா மரியாவுக்குத் தோன்றினார். அவரிடமிருந்துதான் அவர் ஏழு பேய்களை ஓட்டியிருந்தார். மரியா புறப்பட்டுச் சென்று இயேசுவோடு இருந்தவர்களிடம் இதை அறிவித்தார்.

மகதலா மரியாவிடமிருந்து ஏழு பேய்களை இயேசு ஓட்டியிருந்தார் என்ற விவரம், மாற்கு நற்செய்தியில் மட்டுமே கூறப்பட்டுள்ளது. 'ஏழு' என்ற எண்ணிக்கை, விவிலிய மரபில் ஒரு முழுமையான எண் என்பதை நாம் அறிவோம். எனவே, ஏழு பேய்களால் மரியா ஆட்கொள்ளப்பட்டிருந்தார் என்பதை, 'மகதலா மரியா பேய்களால் முழுமையாக ஆட்கொள்ளப்பட்டிருந்தார்' என்றும் பொருள் கொள்ளலாம். நாம் சிந்தித்துவரும் புதுமையிலும், கெரசேனர் மனிதர், 6000த்திற்கும் அதிகமான பேய்களால், முழுமையாக ஆட்கொள்ளப்பட்டிருந்தார் என்பதை அறிவோம். எனவே, இவ்விருவரும் பேய்களின் முழுமையான ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றவர்கள் என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். பேய்களின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட பெண், இயேசுவின் உயிர்ப்பை அறிவிக்கும் முதல் சாட்சியாக அனுப்பப்பட்டார்.

2016ம் ஆண்டு, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு சிறப்பிக்கப்பட்ட வேளையில், அதுவரை, திருஅவை வழிபாட்டில், மகதலா மரியாவுக்கு, வெறும் நினைவு நாளாக குறிக்கப்பட்ட ஜூலை 22ம் தேதியை, ஒரு திருநாளாகக் கொண்டாடும்படி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விதிமுறை ஒன்றை வெளியிட்டார். இறைவழிபாடு மற்றும் அருளடையாளங்களை நெறிப்படுத்தும் பேராயம், திருத்தந்தையின் விதிமுறையை வெளியிட்டபோது இவ்வாறு கூறியது:

"பெண்களின் மாண்பைப்பற்றி திருஅவை இன்னும் ஆழமாகச் சிந்திக்க அழைக்கப்பட்டிருக்கும் இவ்வேளையில், மகதலா மரியாவின் எடுத்துக்காட்டை விசுவாசிகள் பின்பற்ற வேண்டுமென திருத்தந்தை அழைப்பு விடுத்துள்ளார். 'திருத்தூதர்களின் திருத்தூதர்' (Apostle of the Apostles) என்று புனித தோமா அக்குவினாஸ் அவர்களாலும், 'இறை இரக்கத்தின் சாட்சி' (witness of Divine Mercy) என்று, புனித பெரிய கிரகரி அவர்களாலும் அழைக்கப்பட்ட மகதலா மரியா, திருஅவையில், பெண்கள் வகிக்கும் நிறைவானப் பங்கிற்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறார்."

பேய்களின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட மகதலா மரியாவை, தன் உயிர்ப்புக்கு முதல் சாட்சியாக இயேசு அனுப்பியதைப் போல், கெரசேனர் பகுதியில் பேய்களிடமிருந்து விடுதலை பெற்றவரை, புறவினத்தார் வாழும் பகுதியில் தன் முதல் சாட்சியாக வாழ்வதற்கு, அனுப்பிவைத்தார்.

அம்மனிதருக்கு இயேசு வழங்கிய கட்டளை, உயிர்ப்புக்குப் பின், இயேசு தன் சீடர்களுக்கு வழங்கிய கட்டளையைப்போல் ஒலிக்கிறது. விண்ணேற்றத்திற்கு முன், தன் சீடர்களுக்குத் தோன்றிய இயேசு, "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்" (மாற்கு 16:15) என்ற கட்டளையைத் தந்தார். அந்த இறுதிக் கட்டளைக்கு ஒரு முன்னோட்டம் போல, "உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உம்மீது இரக்கங் கொண்டு உமக்குச் செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்" (மாற்கு 5:19) என்று, இப்புதுமையில், இயேசு தரும் கட்டளை ஒலிக்கிறது.

ஒரு சில புதுமைகளில், இயேசு, அப்புதுமையைக் குறித்து யாரிடமும் எதுவும் சொல்லவேண்டாம் என்று கூறியிருப்பதையும் நாம் நற்செய்திகளில் காண்கிறோம். (காண்க. மாற்கு 1:40; லூக்கா 5:14) இந்தப் புதுமையிலோ, இயேசு, புதுமையைப் பெற்ற மனிதரிடம், "தன் உறவினருக்கு அறிவிக்கும்படி" தெளிவாகக் கூறியுள்ளார்.

இயேசு தந்த கட்டளையை நிறைவேற்ற, அம்மனிதர் தன் ஊருக்குத் திரும்பியதும், அங்கு என்ன நிகழ்ந்திருக்கும் என்பதை, ஒரு சில விவிலிய விரிவுரையாளர்கள் கற்பனை செய்துள்ளனர். நாமும் அக்கற்பனைக் காட்சியைக் காணமுயல்வோம்:

அவர் ஊருக்குள் வருகிறார் என்ற செய்தி பரவியதும், ஊரிலிருந்த அனைத்து இல்லங்களிலும், கதவுகள் மூடப்பட்டிருக்கும்; கதவுகளின் இடுக்கில், அல்லது சன்னல்கள் வழியே மக்கள் அவரைப் பார்த்திருப்பர். அம்மனிதர் தன் வீடுநோக்கிச் சென்றபோது, அவரது மனைவியும், குழந்தைகளும் அச்சத்தில் உறைந்துபோய், கதவை இறுக மூடி, உள்ளே ஒளிந்துகொண்டிருப்பர். அவருடைய குழந்தைகளில் ஒன்று, தன் தந்தை ஆடை உடுத்தியிருக்கிறார் என்ற மாற்றத்தை முதலில் கூறியிருக்கும். மற்றொரு குழந்தை, அவர் அமைதியாக நடந்துவருகிறார் என்று கூறியிருக்கும். இவ்வாறு, அம்மனிதரிடம் தெரிந்த மாற்றங்கள் ஒவ்வொன்றாக தெளிவாகியிருக்கும். அதன்பின், அவரது மனைவி, வீட்டுக்கதவைத் திறந்திருப்பார்.

விரைவில், ஊரெங்கும், அம்மனிதரிடம் காணப்பட்ட நல்ல மாற்றங்களைப் பற்றிய செய்தி பரவியிருக்கும். அம்மனிதர், தன் வாயைத் திறந்து நற்செய்தியை அறிவிப்பதற்கு முன், அவரே ஒரு நற்செய்தியாக நடமாடியிருப்பார். அதன்பின், அவர், தன் உற்றார், நண்பர் அனைவருக்கும் "இயேசு தனக்குச் செய்ததையெல்லாம்" நற்செய்தியாக அறிவித்திருப்பார். அவரது பணி, அவர் வாழ்ந்த ஊருடன் நின்று விடவில்லை. மாறாக, "அவர் சென்று, இயேசு தமக்குச் செய்ததையெல்லாம் தெக்கப்பொலி நாட்டில் அறிவித்து வந்தார். அனைவரும் வியப்புற்றனர்" (மாற்கு 5:20) என்று இப்புதுமை நிறைவு பெறுகிறது.

தவறான, தாறுமாறான வாழ்விலிருந்து மீண்டுவருபவர்களிடம் காணப்படும் மாற்றங்களை, மக்கள், அவ்வளவு எளிதாக புரிந்துகொள்ளவோ, ஏற்றுக்கொள்ளவோ மாட்டார்கள் என்பதை அறிவோம். எனவே, பேய்களிடமிருந்து விடுதலைபெற்ற மனிதரும், தன் நற்செய்தியைப் பறைசாற்றும் பணியில், தடைகளையும், எதிர்ப்புக்களையும் சந்தித்திருப்பார். இருப்பினும், அவர், மனம் தளராமல் தன் பணியைத் தொடர்ந்தது, அப்பகுதியில், ஆழ்ந்த, நீடித்த மாற்றங்களைக் கொணர்ந்திருக்கும் என்பதை நாம் நம்பலாம்.

அவரது பணியால், தெக்கப்பொலி நாட்டில் நிகழ்ந்த மாற்றத்தை ஒரு சில விவிலிய விரிவுரையாளர்கள் வரலாற்று நிகழ்வுகளோடு இணைத்துப் பேசியுள்ளனர்:

பேய்களிடமிருந்து விடுதலைப் பெற்றவர் இயேசு தமக்குச் செய்ததையெல்லாம் தெக்கப்பொலி நாட்டில் அறிவித்ததற்கு, பல ஆண்டுகளுக்குப் பின், 'எருசலேம் திருச்சபை பெரும் இன்னலுக்குள்ளாகியது' (திருத்தூதர் பணிகள் 8:1). அந்த இன்னலிலிருந்து தப்பிக்க, கிறிஸ்தவர்கள், தெக்கப்பொலி நாட்டில் தஞ்சம் அடைந்தனர். அப்பகுதி மக்கள் யாரும் இயேசுவை நேரில் கண்டதில்லை. இருப்பினும், தங்களிடம் தஞ்சம் அடைந்திருப்பவர்கள், இயேசுவைப் பின்பற்றுகிறவர்கள் என்பதை உணர்ந்து, அவர்களுக்கு ஆதரவு வழங்கினர். அதற்கு ஒரே காரணம், இயேசுவினால் விடுதலை அடைந்த ஒருவர், அவர்களிடம் பகிர்ந்துகொண்ட நற்செய்தி!

"இயேசு படகேறி, கடலைக் கடந்து மீண்டும் மறு கரையை அடைந்ததும் பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்து கூடினர்" (மாற்கு 5:21) என்று நற்செய்தியாளர் மாற்கு, தன் நற்செய்தியைத் தொடர்கிறார். நாமும் மறுகரைக்குச் செல்வோம். இயேசு அங்கு ஆற்றிய புதுமைகளை, தொடர்ந்து சிந்திப்போம்.

 

06 August 2019, 10:11