தேடுதல்

Vatican News
சிங்கப்பூர் தேசிய நாள் சிங்கப்பூர் தேசிய நாள்  (AFP or licensors)

சிங்கப்பூருக்கு புதிய தலைமுறை தலைவர்கள் தேவை

அரசியலுக்கும், கூட்டுநிறுவனங்களுக்கும் மட்டுமன்றி, திருஅவைக்கும் புதிய தலைமுறைத் தலைவர்கள் தேவை - சிங்கப்பூர் பேராயர் William Goh

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

சிங்கப்பூரில், புதிய தலைமுறைகளின் தலைவர்கள் உருவாக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது என்று, சிங்கப்பூர் பேராயர் William Goh அவர்கள், அந்நாட்டின் 54வது சுதந்திர நாள் செய்தியில் கூறியுள்ளார்.

ஒருகாலத்தில் பிரித்தானிய காலனியாக இருந்த சிங்கப்பூர், 1965ம் ஆண்டில், மலேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து, ஒரு நகர-நாடாக உருவெடுத்தது. இந்நிகழ்வின் 54வது தேசிய நாள், ஆகஸ்ட் 9, இவ்வெள்ளியன்று சிறப்பிக்கப்பட்டது.

இந்த சுதந்திர நாளுக்கென செய்தி வெளியிட்டுள்ள, பேராயர் William Goh அவர்கள், பல்வேறு சோதனைகள் மற்றும், சவால்களின் மத்தியில், இத்தனை ஆண்டுகள் நாட்டை நல்வழியில் நடத்தி வந்துள்ள இறைவனைப் புகழ்வோம் என்று கூறியுள்ளார்.

சிங்கப்பூர் தற்போது இந்நிலையை எட்டுவதற்கு, நாட்டின் மூத்த தந்தையரின் தியாகங்களே காரணம் என்று கூறியுள்ள, பேராயர் William Goh அவர்கள், தற்போது நாட்டு மக்கள், அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம், பாதுகாப்பு, வளமை போன்றவற்றை அனுபவித்து வந்தாலும், இந்நிலையை அப்படியே விட்டுவிட முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். அரசியலுக்கும், கூட்டுநிறுவனங்களுக்கும், புதிய தலைமுறைத் தலைவர்கள் அவசியம் என்றும், அதேநேரம், அத்தகைய தலைவர்கள், திருஅவைக்கும் தேவை என்றும், தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார், சிங்கப்பூர் பேராயர் William Goh.

சிங்கப்பூர், உலக அளவில், நிதி மையங்களில் ஒன்றாகவும், தென்கிழக்கு ஆசியாவில், வலுவான பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்றாகவும் வளர்ந்து வருகின்றது.

10 August 2019, 16:04