தேடுதல்

அபு தாபியில் திருத்தந்தை பிரான்சிஸ் அபு தாபியில் திருத்தந்தை பிரான்சிஸ் 

‘மனித உடன்பிறந்த நிலை’ ஆவணத்தை நடைமுறைப்படுத்த குழு

‘மனித உடன்பிறந்த நிலை’ ஆவணத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, ஐக்கிய அரபு அமீரகத்தில் உயர்மட்ட குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

“உலக அமைதிக்கும், ஒன்றிணைந்து வாழ்வதற்கும், மனித உடன்பிறந்த நிலை” என்ற தலைப்பில், இவ்வாண்டின் தொடக்கத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கையெழுத்திட்ட ஆவணத்தைச் செயல்படுத்துவதற்கு, சமயத் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

பிலிப்பீன்ஸ் நாட்டின், Sulu மற்றும், Zamboanga மாநிலங்களில் அண்மையில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதல்களையொட்டி, கடந்த வாரத்தில், மின்டனாவோ மாநிலத்தின் தவாவோ நகரில், கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மதத் தலைவர்கள் கூட்டம் நடத்தி, இவ்வாறு தீர்மானித்தனர்.

பிலிப்பீன்ஸ் கத்தோலிக்க அருள்பணியாளர்களும், தங்களின் நன்னடத்தை விதிமுறையாக, இந்த ஆவணத்தை ஏற்று, கடைப்பிடிக்குமாறு, அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் Romulo Valles அவர்கள் பரிந்துரைத்தார். (UCAN)

 

அமீரகத்தில் உயர்மட்ட குழு

மேலும், இந்த முக்கிய ஆவணத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, ஐக்கிய அரபு அமீரகம், உயர்மட்ட குழு ஒன்றை, ஆகஸ்ட் 20, இச்செவ்வாயன்று உருவாக்கியுள்ளது.

திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர், ஆயர் Miguel Ángel Ayuso Guixot, Al-Azhar பல்கலைக்கழகத் தலைவர் பேராசிரியர் Mohamed Hussein Mahrasawi, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அந்தரங்கச் செயலர், அருள்பணி Yoannis Lahzi Gaid, இஸ்லாம் தலைமை குருவின் ஆலோசகர், நீதிபதி Mohamed Mahmoud Abdel Salam, அபு தாபி கலாச்சார மற்றும் சுற்றுலாத் துறை தலைவர் Khalifa Al Mubarak, முஸ்லிம் மூத்தவர்கள் அவை பொதுச் செயலர் Sultan Faisal Al Rumaithi, அமீரகத்தின் எழுத்தாளர் மற்றும் ஊடகத்துறையின் Yasser Hareb Al Muhairi ஆகியோர், இந்தக் குழுவில் உள்ளனர்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க ஆவணம் நடைமுறைப்படுத்தப்படுவதற்குத் தேவையான வழிமுறைகளை இந்தக் குழு தயாரிக்கும். மேலும், சகிப்புத்தன்மை, ஒத்துழைப்பு மற்றும், நல்லிணக்க வாழ்வை ஊக்குவிப்பதற்கு, கருத்துக்களை, இது கொடுத்து உதவும் மற்றும் முயற்சிகள் எடுக்கும் என, அபு தாபி பட்டத்து இளவரசர் Sheikh Mohamed bin Zayed Al Nahyan அவர்கள் கூறியுள்ளார்.

2019ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி, அபு தாபியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், Al Azhar பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் தலைமை குரு பேராசிரியர் Sheikh Ahmed el-Tayeb அவர்களும், இந்த வரலாற்று சிறப்புமிக்க ஆவணத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 August 2019, 15:23