தேடுதல்

Vatican News
Gilroy Garlic உணவு விழாவில் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்காக இறைவேண்டல் Gilroy Garlic உணவு விழாவில் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்காக இறைவேண்டல் 

துப்பாக்கி வன்முறையைக் கண்டித்து அமெரிக்க ஆயர்கள்

துப்பாக்கியைக் குறித்து அரசியல் பிரதிநிதிகள் மிகத் தீவிரமாக ஆய்வு செய்யவேண்டும்; சமுதாயத்தில் வன்முறையைக் கையாள்வதில் மகிழ்ச்சி காணும் போக்கு எதனால் உருவாகிறது என்பதை கண்டுபிடிக்கவேண்டும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஜூலை 28 கடந்த ஞாயிறன்று, அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிபோர்னியா மாநிலத்தில், உணவு விழா ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் தாக்குதலையடுத்து, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள், துப்பாக்கி வன்முறையைக் கண்டித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்க ஆயர் பேரவையின் உள்நாட்டு நீதி மற்றும் மனித முன்னேற்றப் பணிக்குழுவின் தலைவர், ஆயர் Frank Dewane அவர்கள், வன்முறையால் சிதைக்கப்படும் இவ்வுலகில், அமைதியை உருவாக்குபவர்களாக வாழ, இறைவன் நம்மை அழைக்கிறார் என்று, தன் அறிக்கையில் கூறியுள்ளார்.

துப்பாக்கியைக் குறித்து நம் அரசியல் பிரதிநிதிகள் மிகத் தீவிரமாக ஆய்வு செய்யவேண்டும் என்றும், சமுதாயத்தில் வன்முறையைக் கையாள்வதில் மகிழ்ச்சி காணும் போக்கு எதனால் உருவாகிறது என்பதை கண்டுபிடிக்கவேண்டும் என்றும் ஆயரின் அறிக்கை அழைப்பு விடுக்கிறது.

நம்மிடையே ஒரு வியாதி பரவியுள்ளது, அது, வன்முறையாக வெளிவருகிறது என்பதை ஏற்றுக்கொள்ளும் துணிவுமிக்க, நேரிய மனப்பான்மை நமக்கு வேண்டும் என்று கூறும் ஆயர் Dewane அவர்களின் அறிக்கை, இந்த வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்காகவும் செபிக்கும்படி அழைப்பு விடுத்துள்ளார்.

ஜூலை 28, கடந்த ஞாயிறன்று, கலிபோர்னியா மாநிலத்தில் நடைபெற்ற Gilroy Garlic உணவு விழாவில், 19 வயதுள்ள ஒருவர் கண்மூடித்தனமாகச் சுட்டதில், 6 வயது சிறுவன், மற்றும் 13 வயது சிறுமி உட்பட மூவர் இறந்தனர் என்றும், மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.

இளைஞர் இந்தத் தாக்குதலை மேற்கொண்ட சில நிமிடங்களில், காவல் துறையினர் அவரைச் சுட்டுக் கொன்றனர் என்றும், இந்த தாக்குதல் குறித்து விசாரணைகள் தொடர்கின்றன என்றும் கூறப்படுகிறது.

31 July 2019, 15:25