தேடுதல்

Vatican News
அம்மனிதரிடமிருந்து வெளியேறிய தீய ஆவிகள் புகுந்ததால், 2000த்திற்கும் அதிகமான பன்றிகள், கடலில் மூழ்கின அம்மனிதரிடமிருந்து வெளியேறிய தீய ஆவிகள் புகுந்ததால், 2000த்திற்கும் அதிகமான பன்றிகள், கடலில் மூழ்கின 

ஒத்தமை நற்செய்தி – கல்லறை மனிதரைக் காத்த இறைவன் - 6

மனித உயிருக்கு விலை நிர்ணயிப்பது, மனிதர்களைவிட பணத்திற்கு, அதிக முக்கியத்துவம் தருவது, நமது சமுதாயத்தை மீண்டும் கல்லறைகளுக்குள் புதைத்துவிடும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

ஒத்தமை நற்செய்தி – கல்லறை மனிதரைக் காத்த இறைவன் - 6

கெரசேனர் பகுதியில், தீய ஆவி பிடித்த ஒரு மனிதரிடமிருந்து இயேசு, ஆயிரக்கணக்கான தீய ஆவிகளை விரட்டியப் புதுமையின் இறுதி வரிகளில், நம் தேடல் பயணம், இன்று தொடர்கிறது. இப்புதுமை நிகழ்ந்த வேளையில், அங்கு, இயேசுவின் சீடர்களும், பன்றிகளை மேய்த்த பணியாளர்களும் மட்டுமே இருந்திருப்பர் என்பதை, சென்றத் தேடலில் நாம் சிந்தித்தோம். அம்மனிதரிடமிருந்து வெளியேறிய தீய ஆவிகள் புகுந்ததால், 2000த்திற்கும் அதிகமான பன்றிகள், கடலில் மூழ்கியதைக்கண்ட பணியாளர்கள், ஊருக்குள் சென்று நடந்ததைக் கூறினர். அவர்கள் தந்த செய்தியைக் கேட்டதும், ஊர் மக்கள் திரண்டு வந்தனர். இக்காட்சியை, நற்செய்தியாளர் மாற்கு இவ்வாறு விவரிக்கிறார்:

மாற்கு 5:14ஆ-15

நடந்தது என்னவென்று பார்க்க மக்கள் வந்தனர். அவர்கள் இயேசுவிடம் வந்தபோது, பேய் பிடித்திருந்தவர், அதாவது இலேகியோன் பிடித்திருந்த அவர், ஆடையணிந்து, அறிவுத் தெளிவுடன் அமர்ந்திருப்பதைக் கண்டு அச்சமுற்றார்கள்.

நற்செய்தியாளர் மாற்கு கூறும் இவ்விவரங்களுடன், நற்செய்தியாளர் லூக்கா, அம்மனிதர், 'இயேசுவின் காலடியில்' அமர்ந்திருந்தார் என்ற கூடுதல் விவரத்தை வழங்கியுள்ளார். "பேய்கள் நீங்கப்பெற்றவர், ஆடை அணிந்து, அறிவுத்தெளிவுடன், இயேசுவின் காலடியில் அமர்ந்திருப்பதைக் கண்டு (மக்கள்) அஞ்சினர்" (லூக்கா 8:35) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. லூக்கா வழங்கும் இந்தக் கூடுதல் விவரம், மார்த்தா, மரியா என்ற இரு சகோதரிகளின் இல்லத்தில் நிகழ்ந்ததை நம் நினைவுக்குக் கொணர்கிறது. ஜூலை 21, கடந்த ஞாயிறன்று, லூக்கா நற்செய்தியிலிருந்து நாம் வாசித்தப் பகுதியில், "அப்போது இயேசு ஓர் ஊரை அடைந்தார். அங்கே பெண் ஒருவர் அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். அவர் பெயர் மார்த்தா. அவருக்கு மரியா என்னும் சகோதரி ஒருவர் இருந்தார். மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து, அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார்" (லூக்கா 10:38-39) என்று கூறப்பட்டுள்ளது. இயேசுவின் காலடியில் அமர்ந்திருப்பது, அவரிடம், ஒருவர் கொண்டிருக்கும் முழுமையான ஈடுபாட்டைக் குறிக்கிறது.

ஆடை அணிந்து, அறிவுத்தெளிவுடன், ஆண்டவரின் காலடியில் அமர்ந்திருந்த அம்மனிதரைக் கண்டு, ஊர் மக்கள் மிகழ்ந்திருக்கவேண்டும். ஒருவேளை, ஊர் மக்களோடு சேர்ந்து வந்திருந்த அம்மனிதரின் குடும்பத்தினர் இதைக்கண்டு மகிழ்ந்திருப்பர். ஊர் மக்களோ, "அச்சமுற்றனர்" என்று, மாற்கும், லூக்காவும் குறிப்பிட்டுள்ளனர். ஊர் மக்கள் ஏன் அச்சமுற்றனர் என்பதை ஆய்வு செய்யும்போது, நாம் வாழும் இன்றைய சமுதாயத்தின் ஒரு சில வேதனையான உண்மைகள், வெளிச்சத்திற்கு வருகின்றன.

இப்புதுமையின் துவக்கத்தில், தீய ஆவி பிடித்தவரை அறிமுகப்படுத்திய வரிகளில், அவர், சங்கிலிகளை உடைத்து, கல்லறைகளில் கூச்சலிட்டு, கற்களால் தன்னையே காயப்படுத்திக் கொண்டு வாழ்ந்தார் என்ற விவரங்கள் (காண்க. மாற்கு 5: 3-5) கூறப்பட்டுள்ளன. நற்செய்தியாளர் மத்தேயு, தீய ஆவி பிடித்த இருவரை அறிமுகம் செய்யும்போது, "அவ்வழியே யாரும் போகமுடியாத அளவுக்கு அவர்கள் மிகவும் கொடியவர்களாய் இருந்தார்கள்" (மத். 8:28) என்று குறிப்பிட்டுள்ளார். இயேசுவைச் சந்திப்பதற்குமுன், தீய ஆவி பிடித்த மனிதர் (அல்லது, இரு மனிதர்கள்) வாழ்ந்த விதம் கண்டு ஊர் மக்கள் கட்டாயம் அச்சமுற்றிருக்க வேண்டும். ஆனால், அவர் நலமடைந்து, அமைதியாக அமர்ந்திருப்பதைக் கண்டபின்னரும், அவர்கள் 'அச்சமுற்றார்கள்' என்று கூறியிருப்பது, ஆச்சரியம் தருகிறது.

அவர்கள் ஏன் 'அச்சமுற்றார்கள்' என்பதைப் புரிந்துகொள்ள, மாற்கு நற்செய்தியில் நாம் காணும் அடுத்த இறைவாக்கியம் உதவியாக உள்ளது. "நடந்ததைப் பார்த்தவர்கள் பேய் பிடித்தவருக்கும் பன்றிகளுக்கும் நேரிட்டதை அவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்." (மாற்கு 5:16) என்ற சொற்கள் பதிவாகியுள்ளன.

ஊர் மக்கள் இப்புதுமையை நேரில் காணாததால், 'நடந்ததைப் பார்த்தவர்கள்', அதாவது, 'பன்றிகளை மேய்த்தவர்கள்' விவரங்களை வழங்கினார்கள். அவர்கள் வழங்கிய விவரங்கள் எத்தகையவை? "பேய் பிடித்தவருக்கும் பன்றிகளுக்கும் நேரிட்டதை அவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்". பேய் பிடித்தவருக்கு நேரிட்டதை மட்டும் அவர்கள் பேசியிருந்தால், அது, ஒரு விதமாக ஒலித்திருக்கும். ஆனால், "பேய் பிடித்தவருக்கும் பன்றிகளுக்கும் நேரிட்டதை" அவர்கள் இணைத்து பேசியபோது, அது, வேறு விதமாக ஒலித்திருக்கும். ஒரு மனிதர் குணமாவதற்கு, 2000த்திற்கும் அதிகமான பன்றிகள் அழிவதா என்ற விவாதம் எழுந்திருக்கும்.

மனிதரா, பணமா என்ற விவாதம், பெரும்பாலான நேரங்களில் பணத்தின் பக்கம் சாய்ந்துவிடுவதை நாம் அறிவோம். இதன் விளைவாக, கெரசேனர் ஊர் மக்கள், "தங்கள் பகுதியை விட்டுப் போய்விடுமாறு இயேசுவை வேண்டிக்கொண்டார்கள்" (மாற்கு 5:17) என்று மாற்கு நற்செய்தியில் கூறப்பட்டுள்ளது. ஒரு மனிதர் நலமடைவதற்கு விலையாக, ஊர் மக்களின் பொதுச்சொத்தாகிய 2000த்திற்கும் அதிகமான விலங்குகள் அழிந்ததை அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

மனித உயிருக்கு விலை நிர்ணயிப்பது, மனிதர்களைவிட பணத்திற்கு, அதிக முக்கியத்துவம் தருவது, நமது சமுதாயத்தை மீண்டும் கல்லறைகளுக்குள் புதைத்துவிடும் என்பதற்கு, 2009ம் ஆண்டு நிகழ்ந்த ஒரு கொடூரம், எச்சரிக்கையாக அமைந்துள்ளது. மெக்ஸிகோ நகருக்கருகே நடந்த இந்நிகழ்வு, நம்மை நிலைகுலையச் செய்கிறது. நம் விசுவாசத்திற்கு மீண்டும் ஒரு சவாலைத் தருகிறது.

போதைப்பொருள் பழக்கத்திலிருந்து விடுதலை பெற விழைவோருக்கு மறுவாழ்வு தரும் ஒரு மையம், மெக்சிகோ நகருக்கருகே அமைந்துள்ளது. 2009ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் ஒரு நாள், பட்டப்பகலில், துப்பாக்கி ஏந்திய இரண்டு அல்லது மூன்று பேர், அந்த மறுவாழ்வு மையத்தில் நுழைந்தனர். போதைப்பொருள் பழக்கத்திலிருந்து விடுதலை பெற முயற்சிகளை மேற்கொண்டிருந்த 17 இளைஞர்களை அந்த மையத்தின் வாசலுக்கு கொண்டு வந்தனர். வரிசையாக அவர்களை நிறுத்தி, ஒருவர் பின் ஒருவராகச் சுட்டுக்கொன்றனர். போதைப்பொருள் பழக்கத்திலிருந்து விடுதலைபெற விழைந்தவர்களுக்கு, நிரந்தர விடுதலை தந்துவிட்ட வெற்றிக் களிப்புடன் அவர்கள் மறைந்தனர். காவல் துறையினர் கொலையாளிகளைக் கண்டுபிடிக்கவில்லை என்று அவ்வேளையில் வெளியான செய்திகள் கூறின. அவர்கள் இன்றுவரை கண்டுபிடிக்கப்பட்டிருப்பார்களா என்பது சந்தேகம்தான்.

ஆயுத வர்த்தகம் என்ற தீய ஆவியால் இவ்வுலகம் எவ்வளவு தூரம் கட்டுண்டிருக்கிறது என்பதை சென்ற வாரத் தேடலில் சிந்தித்தோம். ஆயுத வர்த்தகம் போலவே, போதைப்பொருள் வர்த்தகமும், பல்லாயிரம் கோடி டாலர்கள் மூலதனத்துடன் நடத்தப்பட்டு வருகிறது என்பது, அனைவரும் அறிந்த உண்மை. அரசு அதிகாரிகளின் ஆதரவுடன் நடைபெறும் இத்தொழிலால் அழியும் ஆயிரமாயிரம் மனிதர்களின் ஒரு பிரதிநிதியாக, கெரசேனர் கல்லறைகளிலிருந்து வெளியேறியவரை நாம் எண்ணிப்பார்க்கலாம். கல்லறையிலிருந்து வெளியேறியவரை மீண்டும் மனிதராக மாற்றினார் இயேசு. அவர் மனிதராக மாறியதால், 2000 பன்றிகளை இழந்தோம் என்ற வருத்தம், ஊர் மக்களுக்கு. எனவே, இதுபோன்ற நன்மைகள் தொடராமல் இருப்பதற்காக, "அவர்கள் தங்கள் பகுதியை விட்டுப் போய்விடுமாறு இயேசுவை வேண்டிக்கொண்டார்கள்" (மாற்கு 5:17)

கெரசேனரில் நடந்தது, இன்றும் தொடர்கிறது. போதைப்பொருள் பயன்பாடு போன்ற தீயபழக்கங்களிருந்து இளையோர் விடுதலை அடைவது, போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு வருத்தமாக இருக்கும். இளையோர் அந்த விடுதலையைப் பெறுவதற்கு உதவும் பலரை, போதைப்பொருள் வர்த்தகர்கள், தங்கள் ஊரைவிட்டு போகச் சொல்வார்கள், அப்படிப் போகாமல், அந்த நல்ல உள்ளங்கள், தங்கள் சேவைகளைத் தொடர்ந்தால், அவர்களைக் கொல்லவும் தயங்கமாட்டார்கள், இந்த மரண வியாபாரிகள்.

புனித அன்னை தெரேசா அவர்கள் உருவாக்கிய பிறரன்பு மறைப்பணியாளர்கள் துறவு சபையைச் சேர்ந்த நான்கு அருள் சகோதரிகள், 2016ம் ஆண்டு, மார்ச் 4ம் தேதி, ஏமன் நாட்டில், கொலையுண்ட நிகழ்வை நினைவில் கொணர்கிறோம்.

மனிதர்களாக வாழத் தகுதியற்றவர்கள் என்று சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டு, ஏறத்தாழ கல்லறைகளில் வாழ்வதுபோல், சேரிகளிலும், சாக்கடைகளிலும் புதைக்கப்பட்டிருந்த மனிதர்களைத் தேடிச்சென்று பணியாற்றி வந்தவர், அன்னை தெரேசா. அவரது அடிச்சுவட்டைப் பின்பற்றி பணியாற்றும் அருள் சகோதரிகளின் சேவையை விரும்பாத அடிப்படைவாதிகள், ஏமன் நாட்டில் நான்கு அருள் சகோதரிகளையும், அவர்களுடன் உழைத்த 12 பணியாளர்களையும் கொன்றனர். அவர்கள் கொல்லப்பட்டதற்கு ஒரே காரணம், அவர்கள் இறைவனின் கருணைக்குச் சாட்சிகளாக வாழ்ந்தனர் என்பது ஒன்றே.

கல்லறைகளில் வாழ்ந்த ஒருவரை, இயேசு மீண்டும் மனிதராக மாற்றிய புதுமையைச் சிந்திக்கும்போது, இத்தகையக் கல்லறை வாழ்வு வாழும் மனிதர்களுக்குப் பணியாற்றும் அனைத்து அன்புள்ளங்களுக்காகவும் இறைவனுக்கு நன்றி சொல்வோம். மனிதகுலத்தில் பகைமை, வெறுப்பு, பழிக்குப் பழி இவற்றை வளர்த்து, உலகம் முழுவதையும் கல்லறையாக்கி, அக்கல்லறைகளில், இரவும், பகலும், ஓலமிட்டு வாழும் மனிதர்களை மூலதனமாக வைத்து, இலாபம் சம்பாதிக்கும் மரண வியாபாரிகளை ஆட்டிப்படைக்கும் தீயசக்திகளை இயேசு விரட்டியடிக்க வேண்டுமென மன்றாடுவோம்.

இப்புதுமையின் இறுதி நிகழ்வு நம்பிக்கை தருகிறது. அதாவது, அதுவரை, கல்லறையில் வாழ்ந்துவந்த ஒரு மனிதர், இயேசுவின் நற்செய்தியைப் பறைசாற்றும் பணியாளராக மாறினார். அந்த இறுதி நிகழ்வை, நாம் அடுத்தவாரத் தேடலில் சிந்திப்போம்.

23 July 2019, 15:02