தேடுதல்

Vatican News
அசிசி புனித பிரான்சிஸ் பசிலிக்கா அசிசி புனித பிரான்சிஸ் பசிலிக்கா 

ஜூலை 27ல், வெனெசுவேலாவுக்காக அசிசியில் செபம்

வெனெசுவேலா நாட்டின் பிரச்சனைகள் களையப்பட்டு, மக்கள் அமைதியுடன் வாழ, இந்த ஜூலை மாதத்தில், அசிசி உணர்வில், சிறப்பாகச் செபிப்போம் - அசிசி ஆயர் சொரென்தினோ

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

இத்தாலியின் அசிசி நகரில் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 27ம் தேதியன்று உலக அமைதிக்காக நடத்தப்படும் செப வழிபாட்டில் கலந்துகொள்வதற்கு, அசிசி (Assisi-Nocera Umbra-Gualdo Tadino) ஆயர் தொமினிக்கோ சொரென்தினோ அவர்கள், அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

ஜூலை 27, இச்சனிக்கிழமையன்று நடைபெறும், அமைதிக்காகச் செபிக்கும் வழிபாட்டில், கடும் பிரச்சனைகளை எதிர்நோக்கியிருக்கும் வெனெசுவேலா நாட்டிற்காகச் செபிக்கப்படும் என்று, தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார், ஆயர் சொரென்தினோ

புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களின் முயற்சியால், உலகின் பல்வேறு மதங்களின் தலைவர்களும், பிரதிநிதிகளும், 1986ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி, அசிசி நகரில் கூடி, உலக அமைதிக்காகச் செபித்து, அதற்காக விண்ணப்பித்ததைத் தொடர்ந்து, அசிசியில் இந்த செப முயற்சி., ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 27ம் தேதி நடைபெறுகின்றது.

இச்செப முயற்சியில் பிற மதத்தவரும் கலந்துகொள்ளலாம் என அழைப்பு விடுத்துள்ள, அசிசி ஆயர் சொரென்தினோ அவர்கள், வெனெசுவேலா பிரச்சனை குறித்த கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளவர்கள், அந்நாட்டில் நியாயமான மற்றும் நிலைத்த அமைதி கிடைப்பதற்கு, ஒன்றிணைந்து உழைக்க வேண்டுமென்று இறைவனிடம் மன்றாடுவோம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.  

வெனெசுவேலாவின் கடும் நெருக்கடிகள் குறித்து, கடந்த பல மாதங்களாக, உலக அளவில் அதிகமாகப் பேசப்பட்டுவந்தவேளை, தற்போது, அவை தலைப்புச் செய்திகளில் இடம்பெறாமல் இருந்த சூழலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 14ம் தேதி ஞாயிறு மூவேளை செப உரையில், அந்நாட்டின் பிரச்சனை பற்றி நினைவுபடுத்தியுள்ளார் என்றும், ஆயரின் அறிக்கை கூறுகின்றது.

26 July 2019, 14:44