தேடுதல்

Vatican News
இத்தாலியின் Canale d'Agordoவில், திருத்தந்தை முதலாம் ஜான் பால் பிறந்து, வளர்ந்த இல்லம் இத்தாலியின் Canale d'Agordoவில், திருத்தந்தை முதலாம் ஜான் பால் பிறந்து, வளர்ந்த இல்லம் 

திருத்தந்தை முதலாம் ஜான் பாலின் குழந்தைப்பருவ இல்லம்

திருத்தந்தை முதலாம் ஜான் பால் அவர்கள் பிறந்து வளர்ந்த இல்லம், மக்கள் பார்வையிடும் ஒரு கண்காட்சியாக, ஆகஸ்ட் 2ம் தேதி திறக்கப்படும்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை முதலாம் ஜான் பால் அவர்கள் பிறந்து வளர்ந்த இல்லம், மக்கள் பார்வையிடும் ஒரு கண்காட்சியாக, ஆகஸ்ட் 2, வருகிற வெள்ளியன்று திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வட இத்தாலியின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில், Canale d’Agordo என்ற ஊரில் பிறந்து, அல்பீனோ லூச்சியானி என்ற இயற்பெயருடன் வளர்ந்த திருத்தந்தை முதலாம் ஜான் பால் அவர்களின் இல்லம், மக்களின் பார்வைக்கு திறக்கப்படுகிறது.

திருத்தந்தை முதலாம் ஜான் பால் அவர்களின் புனிதர்பட்ட ஆய்வுகளை ஒருங்கிணைக்கும் வேண்டுகையாளராக பணியாற்றும் கர்தினால் பெனியமீனோ ஸ்டெல்லா அவர்கள் கலந்துகொள்ளும் இந்நிகழ்வில், திருத்தந்தையைப் பற்றிய ஒரு நூல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தந்தை முதலாம் ஜான் பால் – வாழ்க்கை குறிப்புகள்

1912ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி பிறந்த அல்பீனோ லூச்சியானி அவர்கள், 1923ம் ஆண்டு, அருள்பணியாளர் பயிற்சியில் இணைந்து, 1935ம் ஆண்டு, அருள்பணியாளராக திருப்பொழிவு பெற்றார்.

ஆயராக, கர்தினாலாக பொறுப்புக்களை ஏற்ற அல்பீனோ லூச்சியானி அவர்கள், 1978ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி முதல், அதே ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி முடிய 34 நாள்கள், திருத்தந்தையாகப் பணியாற்றினார்.

'புன்முறுவல் பூக்கும் திருத்தந்தை' அல்லது, 'இறைவனின் புன்முறுவல்' என்ற அடைமொழிகளுக்கு உரிமையாளரான திருத்தந்தை முதலாம் ஜான் பால் அவர்கள், அதுவரை திருஅவையில் யாரும் எண்ணிப்பார்க்காதவண்ணம், இரு பெயர்களை இணைத்து, 'ஜான் பால்' என்ற பெயரை ஏற்றுக்கொண்டார்.

திருத்தந்தை முதலாம் ஜான் பால் அவர்களை, புனிதத் திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் 2003ம் ஆண்டு, இறையடியார் என்று அறிவித்தார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2017ம் ஆண்டு, இவரை, வணக்கத்துக்குரியவர் என்று அறிவித்தார்.

31 July 2019, 15:12