தேடுதல்

Vatican News
பிலிப்பீன்ஸ் ஆயர்களின் கூட்டுத் திருப்பலி பிலிப்பீன்ஸ் ஆயர்களின் கூட்டுத் திருப்பலி 

பிலிப்பைன்ஸ் ஆயர்களின் சுற்றுச்சூழல் நடவடிக்கைக்கு பாராட்டு

பிலிப்பைன்சில் நடைபெறும் நிலக்கரி விநியோகத்தில் 15.2 விழுக்காட்டை சிமென்ட் தொழிற்சாலையும், 5 விழுக்காட்டை ஏனைய தொழிற்சாலைகளும் பயன்படுத்துகின்றன

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

பிலிப்பைன்ஸ் நாட்டில், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நிலக்கரி போன்ற கனிமங்கள் முதலீடு செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டுமென்று, அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள் அழைப்பு விடுத்திருப்பதை வரவேற்றுள்ளனர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சிக்கென உழைக்கும், அரசு-சாரா சுற்றுச்சூழல் அமைப்பு (CEED), கடந்த வாரத்தில், பிலிப்பைன்ஸ் ஆயர்கள் நடத்திய கூட்டத்தில், சுற்றுச்சூழலுக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தைப் பாராட்டிப் பேசியுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில், நிலக்கரி பயன்பாட்டை முற்றிலும் ஒழிப்பதற்கும், இப்பூமிக்கோளத்தைப் பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதற்கு, ஆயர்களின் அறநெறிசார்ந்த தலைமைத்துவம் பெரிய அளவில் உதவும் என்று, அந்த அமைப்பின் இயக்குனர் Gary Arances அவர்கள் கூறியுள்ளார்.  

ஆயர்களின் இந்த தீர்மானம், நிலக்கரி மற்றும், ஏனைய புதைபடிவ எரிபொருள்கள் முதலீடு செய்யப்படுவது புறக்கணிக்கப்படும் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ள Arances அவர்கள், காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில், பிலிப்பைன்சும் இடம்பெற்றுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

2015ம் ஆண்டில் பிலிப்பைன்ஸ் அரசு வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி, அந்நாட்டின் மின்சக்தி உற்பத்தியில், நிலக்கரி, 44.5 விழுக்காடு பயன்படுத்தப்படுகின்றது எனத் தெரியவந்துள்ளது.

மேலும், அந்நாட்டின் நிலக்கரி விநியோகத்தில் 15.2 விழுக்காட்டை சிமென்ட் தொழிற்சாலையும், 5 விழுக்காட்டை ஏனைய தொழிற்சாலைகளும் பயன்படுத்துகின்றன. (CBCP)

12 July 2019, 15:02