தேடுதல்

Vatican News
பெரு தலைநகரில் அமெரிக்க நாடுகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகள் பெரு தலைநகரில் அமெரிக்க நாடுகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகள்  

பெருவின் 198வது சுதந்திர நாளுக்கு ஆயர்கள் செய்தி

தென் அமெரிக்க நாடான பெரு, 1821ம் ஆண்டு ஜூலை 28ம் தேதி, இஸ்பானிய காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடைந்தது

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

பெரு நாட்டில், 198வது தேசிய சுதந்திர நாள், ஜூலை 28 வருகிற ஞாயிறன்று சிறப்பிக்கப்படுவதை முன்னிட்டு, செய்தி வெளியிட்டுள்ள அந்நாட்டு ஆயர் பேரவை, நீதி, அமைதி மற்றும் இயற்கையைப் பாதுகாப்பதற்கு, நாட்டின் பல்வேறு சமுதாய அமைப்புகள் எடுத்துவரும் சிறப்பான முயற்சிகளை ஊக்கப்படுத்தியுள்ளது.

பெரு நாட்டு ஆயர் பேரவை சார்பில் செய்தி வெளியிட்டுள்ள, ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் Héctor Miguel Cabrejos Vidarte அவர்கள், தலைநகர் லீமாவில், ஜூலை 26 இவ்வெள்ளியன்று அமெரிக்க நாடுகளின் விளையாட்டு போட்டிகள் துவங்கியுள்ளவேளை, பெரு நாடு தனது தேசிய சுதந்திர நாளைச் சிறப்பிக்கவுள்ளது என்பதை மகிழ்வுடன் குறிப்பிட்டுள்ளார்.

சிறார் மற்றும், இளையோரின் கல்விக்கு, தொடர்ந்து முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும், சீரமைப்புப் பணிகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள நிதி, முழுவதும் தாமதமின்றி அதற்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றுரைத்துள்ள, பேராயர் Cabrejos Vidarte அவர்கள், காலநிலை மாற்றத்தின் கடும்விளைவுகளைத் தடுப்பதற்கு நடவடிக்கைகள் அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மனித உரிமைகள், சமுதாய நீதி மற்றும், நீடித்த நிலையான வளர்ச்சி ஆகியவற்றை ஊக்குவிக்கும், கொள்கைகள் அவசியம் என கூறியுள்ள பேராயர் Cabrejos Vidarte அவர்கள், ஊழல் புற்றுநோய் ஒழிக்கப்படவும், நீதி மற்றும் அரசியல் அமைப்புமுறையில் சீர்திருத்தம் இடம்பெறவும் தீவிர முயற்சிகள் அவசியம் எனவும் கூறியுள்ளார்.  

அமெரிக்க நாடுகளின் விளையாட்டு அமைப்பால் நடத்தப்படும், அமெரிக்க விளையாட்டு போட்டிகள், வருகிற ஆகஸ்ட் 11ம் தேதி நிறைவடையும். 

26 July 2019, 14:44