தேடுதல்

Vatican News
கராச்சி பேராலயம் கராச்சி பேராலயம்  (AFP or licensors)

கத்தோலிக்க பேராலயத்திற்கு பாகிஸ்தான் மாநில நிதியுதவி

பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தில், கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார் அம்மாநில முதல்வர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாநிலத்தின் வளர்ச்சிக்கு திருஅவை ஆற்றியுள்ள பணிகளுக்கு நன்றியை வெளியிட்ட அம்மாநில முதல்வர், Murad Ali Shah அவர்கள், கராச்சி பேராலய மறுசீரமைப்புப் பணிகளுக்கு 15 இலட்சம் டாலர் நிதி உதவி வழங்க உறுதியளித்துள்ளார் என்று UCA செய்தி கூறுகிறது.

பாகிஸ்தான் கத்தோலிக்க திருஅவையால் நடத்தப்படும் புனித பாட்ரிக் உயர்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவரான சிந்து மாநில முதல்வர் Shah அவர்கள், புனித பாட்ரிக் பேராலயத்தை புதுப்பிக்கும் பணிகளில், மாநில அரசு அதிகாரிகளின் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

பேராலயத்தைப் புதுப்பிக்கும் பணியில் முதலில் உட்புற வடிவமைப்பில் துவங்கி, அனைத்துப் பணிகளுக்கும் மூன்று ஆண்டு கால அளவில், அரசு உதவிகள் வழங்கும் என்று Shah அவர்கள் கூறியுள்ளார்.

சிந்து மாநிலத்தில், கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் பணிகளை, குறிப்பாக, கல்வி மற்றும் மருத்துவத் துறைகளில் ஆற்றிவரும் பணிகளை தான் பாராட்டுவதாகத் தெரிவித்தார், முதல்வர்.

1845ம் ஆண்டு, இயேசு சபையினரால் கட்டியெழுப்பப்பட்ட புனித பாட்ரிக் பேராலயம், 1885ம் ஆண்டு வீசிய புயலில் சேதமடைந்து, மீண்டும் கட்டியெழுப்பப்பட்டது. தற்போது, இப்பேராலயத்தில் முழுமையான புதுப்பிக்கும் பணி இடம்பெற்று வருகிறது. (UCAN)

30 July 2019, 16:30