தேடுதல்

Vatican News
மெக்சிகோவுக்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் இடையே உள்ள தடுப்புச் சுவருக்கருகே, அறையுண்ட இயேசுவின் உருவம் மெக்சிகோவுக்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் இடையே உள்ள தடுப்புச் சுவருக்கருகே, அறையுண்ட இயேசுவின் உருவம்  (AFP or licensors)

சுவர்களை அல்ல முன்னேற்றங்களை கட்டியெழுப்புவது அவசியம்

சுவர்களை எழுப்புவதற்குப் பதில், பொருளாதார, அரசியல், கலாச்சார மற்றும் சமுதாய முன்னேற்றங்களை கட்டியெழுப்புவது ஒன்றே குடியேற விழைவோரை தடுத்து நிறுத்தும் வழி - மெக்சிகோ உயர் மறைமாவட்டம்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அமெரிக்க ஐக்கிய நாட்டில் குடியேற விழைவோரைத் தடுக்க சுவர்கள் எழுப்புவதற்குப் பதில், அவர்கள் வாழும் நாடுகளில், பொருளாதார, அரசியல், கலாச்சார மற்றும் சமுதாய முன்னேற்றங்களை கட்டியெழுப்புவது ஒன்றே குடியேற விழைவோரை தடுத்து நிறுத்தும் வழி என்று மெக்சிகோ உயர் மறைமாவட்டம் கூறியுள்ளது.

கடந்த ஆறு மாதங்களாக, மெக்சிகோ நாடு, முன்னெப்போதும் இல்லாத அளவு, அமெரிக்காவில் குடியேற விழைவோரின் எண்ணிக்கையை சந்தித்து வந்துள்ளது என்று கூறும் இவ்வறிக்கை, இந்தப் பிரச்சனை, பல்வேறு மரணங்களில் முடிவடைவது வேதனை தருகிறது என்று குறிப்பிட்டுள்ளது.

இலத்தீன் அமெரிக்க நாடுகளில் நிலவும் வறுமை, நிலையற்ற அரசியல் நிலை, சமுதாய, மற்றும் கலாச்சார சீரழிவு ஆகிய காரணங்களால், அமெரிக்க ஐக்கிய நாட்டில் குடியேற விழையும் கனவுடன் தங்கள் நாடுகளை விட்டு வெளியேறும் மக்களை, அவரவர் நாடுகளில் தங்க வைப்பதற்கு, அமெரிக்க ஐக்கிய நாடும், மெக்சிகோவும் தகுந்த முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்று, மெக்சிகோ உயர் மறைமாவட்ட அறிக்கை வலியுறுத்துகிறது.

தங்கள் நாட்டிற்குள் வருகை தந்திருக்கும் பிறநாட்டவரை 'அன்னியர்' என்ற அச்சமும், வெறுப்பும் நிறைந்த கண்ணோட்டத்துடன் நோக்காமல், அவர்களை மனிதர்கள் என்ற அடிப்படை மதிப்புடன் நடத்துவதற்கு, மெக்சிகோ மக்கள் முயலவேண்டும் என்றும், இந்த மறைமாவட்ட அறிக்கை விண்ணப்பிக்கிறது. (Fides)

10 July 2019, 15:21