தேடுதல்

Vatican News
அமேசான் பகுதியில் அமைந்துள்ள கயானா நாட்டில் சிறப்பு மாமன்றத்தையொட்டி நடைபெற்ற தயாரிப்புக் கூட்டம் அமேசான் பகுதியில் அமைந்துள்ள கயானா நாட்டில் சிறப்பு மாமன்றத்தையொட்டி நடைபெற்ற தயாரிப்புக் கூட்டம் 

அமேசானில் ஓர் இறைவாக்கினரைப்போல பணியாற்ற...

அமேசான் காடுகள் பரவியுள்ள பல்வேறு நாடுகளில், அரசின் தலையீடு அதிகம் இல்லாததால், அமேசான் காடுகளில், சட்டங்களுக்கு மதிப்புதராத பல்வேறு சுயநல குழுக்கள் ஆட்சி செய்கின்றன

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அமேசான் பகுதியை பாதிக்கும் அத்தனை பிரச்சனைகளையும் ஒரு சேரக்காண வேண்டும் என்பதும், இப்பகுதியைக் காப்பதற்கு, திருஅவை ஓர் இறைவாக்கினரைப்போல பணியாற்ற வேண்டும் என்பதும் திருஅவைக்கு முன் உள்ள சவால்கள் என்று கொலம்பியா நாட்டின் ஆயர் Joaquín Humberto Pinzón அவர்கள் கூறினார்.

அமேசான் பகுதியை மையப்படுத்தி, இவ்வாண்டு அக்டோபர் மாதம் வத்திக்கானில் நடைபெறவிருக்கும் சிறப்பு ஆயர்கள் மாமன்றத்தைக் குறித்து, வத்திக்கான் செய்திக்கு அளித்த பேட்டியில், ஆயர் Pinzón அவர்கள், இந்த சிறப்பு  மாமன்றத்தின் தயாரிப்புக்கள் எந்த நிலையில் உள்ளன என்பதைக் குறித்துப் பேசினார்.

2017ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்த சிறப்பு ஆயர்கள் மாமன்றத்தைக் குறித்து அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, பல்வேறு நிலைகளில் செயல்பாடுகள் துவங்கின என்று குறிப்பிடும் ஆயர் Pinzón அவர்கள், 2018ம் ஆண்டு சனவரி மாதம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பெரு நாட்டில் Puerto Maldonadoவில் மேற்கொண்ட சந்திப்பு, மற்றொரு மைல்கல்லாக அமைந்தது என்று கூறினார்.

கொலம்பியா நாட்டிலும், இன்னும் அமேசான் காடுகள் பரவியுள்ள பல்வேறு நாடுகளிலும் அரசின் தலையீடு அதிகம் இல்லாததால், அமேசான் காடுகளில் சட்டங்களுக்கு மதிப்புதராத பல்வேறு சுயநல குழுக்கள் ஆட்சி செய்கின்றன என்று ஆயர் Pinzón அவர்கள், கவலை வெளியிட்டார்.

காடுகள் அழிக்கப்படுத்தல், கனிமங்கள் மற்றும் எண்ணெய் ஆகியவற்றைப் பெறுவதற்கு நடைபெறும் கட்டுப்பாடற்ற தோண்டுதல்கள் ஆகியவை, அமேசான் காடுகளை அச்சுறுத்தும் பிரச்சனைகள் என்று Pinzón அவர்கள், தன் பேட்டியில் மீண்டும் நினைவுறுத்தினார்.

அமேசான் காடுகளின் செல்வங்களைச் சுரண்டும் நோக்கத்துடன், வேற்று நாடுகளின் ஆக்ரமிப்பு அதிகமாகியுள்ளதால், கொலம்பியா நாட்டில், போதைப்பொருள் பயன்பாடு, விலைமாதர்களின் பயன்பாடு, மனித வர்த்தகம் என்ற பல்வேறு சமுதாயப் பிரச்சனைகள் பெருகியுள்ளன என்று ஆயர் Pinzón அவர்கள் தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

31 July 2019, 15:24