தேடுதல்

Vatican News
பீகாரில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முஸாபர்பூர் பகுதி பீகாரில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முஸாபர்பூர் பகுதி  (AFP or licensors)

பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பீகாரில் காரித்தாஸ் அமைப்பு

வெள்ளப்பெருக்கால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள பீகார் மாநில மக்களுக்கு உடனடி அவசர உதவிகளை வழங்கி வருகிறது திருஅவை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்தியாவில், அண்மைய வெள்ளப்பெருக்கால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள பீகார் மாநில மக்களுக்கு உடனடி அவசர உதவிகளை திருஅவை வழங்கி வருவதாக, முஸாபர்பூர் (Muzaffarpur) ஆயர் Cajetan Francis Osta அவர்கள் .கூறினார்.

பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 13 மாவட்டங்களில், 11 மாவட்டங்கள் முஸாபர்பூர் பகுதியில் உள்ள நிலையில், இந்திய கத்தோலிக்கக் காரித்தாஸ் அமைப்பின் உதவியுடன், தார்ப்பாய்கள், கொசுவலைகள், போர்வைகள், சவக்காரம், குடிநீர் ஆகியவற்றை வழங்கி வருவதாக ஆயர் ஓஸ்தா அவர்கள் கூறியுள்ளார்.

நீரால் அடித்துச் செல்லப்பட்டுள்ள சாலைகள், வேரோடு சாய்ந்துள்ள மரங்களால் அடைபட்டிருக்கும் பாதைகள் ஆகிய தடைகளைத் தாண்டி, துயர்துடைப்புப் பணிகளை மேற்கொள்வது கடினமாக உள்ளது என்று கூறிய ஆயர் ஓஸ்தா அவர்கள், பல நாட்களாக, மக்கள் உணவு மற்றும் உறைவிடம் இன்றி துயருறுவதாகத் தெரிவித்தார்.

வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள மதுபானி மாவட்டத்தின் முஸஹார் சமுதாய மக்களிடையே பணியாற்றும் இயேசு சபையினர், அவர்களுக்குத் தேவையான உணவு உதவிகளை வழங்கி வருவதாக, அச்சபையைச் சேர்ந்த அருள்பணியாளர் ஜோஸ் வடசேரி அவர்கள் UCA செய்தியிடம் கூறினார்.

நேபாளத்தில் துவங்கி, பீகார் வழியே ஓடும் நதிகளில் வெள்ளம் கரையைக் கடந்து செல்வதால், பீகார் மாநிலத்தின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும், இதுவரை 127 பேர் பலியாகியுள்ளனர் என்றும் UCA செய்தி மேலும் கூறுகிறது. (UCAN)

30 July 2019, 16:23