தேடுதல்

Vatican News
ஆஸ்கர் மார்ட்டினெஸ் ரமிரெஸ், மற்றும் அவரது மகள் வலேரியா ஆகியோருக்கு சான் சால்வதோரில் அடக்கம் ஆஸ்கர் மார்ட்டினெஸ் ரமிரெஸ், மற்றும் அவரது மகள் வலேரியா ஆகியோருக்கு சான் சால்வதோரில் அடக்கம்  (ANSA)

புலம்பெயர்ந்தோர் இறப்புகள் அதிக நடவடிக்கைகளுக்கு...

கடந்த வாரத்தில், லிபியாவில் புலம்பெயர்ந்தோர் முகாம் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் குறைந்தது 44 பேர் இறந்தனர் மற்றும், 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

கடந்த வாரத்தில் இடம்பெற்றுள்ள புலம்பெயர்ந்தோர் இறப்புகள், இன்னும் வெளியே தெரியாமல் இறக்கும், ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் குறித்து உலகினர் கவனம் செலுத்த வேண்டுமென்று அழைப்பு விடுக்கின்றன என்று, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு கூறியுள்ளது.

இவ்வாறு கூறியுள்ள, CRS எனப்படும், அமெரிக்க கத்தோலிக்க பிறரன்பு அமைப்பின் தலைவர் Sean Callahan அவர்கள், புலம்பெயர்ந்தோர் இறப்புகள், அம்மக்களை வரவேற்கவும், அவர்களை, தங்கள் சொந்த இடங்களைவிட்டு வெளியேறத் தூண்டும் பிரச்சனைகளைக் களையவும், உலகினரை ஊக்கப்படுத்துகின்றது என்று தெரிவித்தார்.

ஒவ்வொரு மனிதரும் மகிழ்வாக வாழ்வதற்கு உரிமையைக் கொண்டிருக்கின்றனர் என்ற கருத்தின் அடிப்படையில் அமெரிக்க ஐக்கிய நாடு உருவாக்கப்பட்டுள்ளது என்றும், ஒவ்வோர் அமெரிக்கரும், நாட்டின் சுதந்திர நாளன்று இதனைச் சிந்திக்க வேண்டுமென்றும், Callahan அவர்கள், கேட்டுக்கொண்டுள்ளார்.

அண்மைக் காலமாக இடம்பெற்றுவரும் புலம்பெயர்ந்தோர் இறப்புகள், உலக அளவில், ஊடகங்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளன என்றும், ரியோ கிராந்தே ஆற்றைக் கடக்க முயற்சித்தவேளையில், சடலங்களாக கரையில் ஒதுங்கிய 25 வயது நிரம்பிய, ஆஸ்கர் அல்பெர்த்தோ மார்ட்டினெஸ் ரமிரெஸ் அவர்களும், பிறந்து 23 மாதங்களேயான அவரது மகள் வலேரியாவும், உலகினரை அதிகம் பாதித்தது என்றும், Callahan அவர்கள், கூறியுள்ளார்.

கடந்த வாரத்தில், கென்யாவிலிருந்து இலண்டன் வந்த விமானத்தில், இனம் தெரியாத ஒருவர் இறந்து கிடந்தார் என்பதும், லிபியாவில் புலம்பெயர்ந்தோர் முகாம் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் குறைந்தது 44 பேர் இறந்தனர் மற்றும், 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கன. (CNA)

05 July 2019, 15:23