தேடுதல்

Vatican News
புலம்பெயர்ந்தோர் கடந்து செல்வதை கண்காணிக்கும் இராணுவ வீரர் புலம்பெயர்ந்தோர் கடந்து செல்வதை கண்காணிக்கும் இராணுவ வீரர் 

குடியேற விழைவோரை மனிதாபிமானத்தோடு நடத்துங்கள்

அமெரிக்க ஐக்கிய நாட்டில் குடியேற விழையும் மனிதர்களைப் பகடைக் காய்களாக பயன்படுத்தி, நாடுகளுக்குள் வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து பேசுவது பெரும் அநீதி - மெக்சிகோ ஆயர்கள்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அமெரிக்க ஐக்கிய நாட்டில் குடியேற விழைந்து, அந்நாட்டின் எல்லையை அடைந்துள்ள மக்களை உண்மையான மனிதாபிமானத்தோடு வரவேற்காமல் இருக்கும் நிலை, வருத்தத்தைத் தருகிறது என்று, மெக்சிகோ ஆயர் பேரவை அறிக்கையொன்றில் கூறியுள்ளது.

நாடுகளுக்கிடையே நிலவும் ஒப்பந்தங்களையெல்லாம் விட, மனிதர்களை மனிதர்களாக நடத்தும் அடிப்படை ஒப்பந்தம் மிகவும் முக்கியம் என்பதை, தங்கள் அறிக்கையில் வலியுறுத்தியுள்ள மெக்சிகோ ஆயர்கள், குடியேற விழையும் மனிதர்களைப் பகடைக் காய்களாக பயன்படுத்தி, நாடுகளுக்குள் வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து பேசுவது பெரும் அநீதி என்று கூறியுள்ளனர்.

நாடுவிட்டு நாடு புலம் பெயர்வதற்கு மக்களைத் தூண்டும், வறுமை, வேலைவாய்ப்பின்மை, வன்முறை, வாய்ப்புக்கள் மறுக்கப்படும் நிலை ஆகிய சமுதாயக் குறைகளை அகற்ற, ஒவ்வொரு நாட்டு அரசும், உலக அமைப்புக்களும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று, ஆயர்களின் அறிக்கை அழைப்பு விடுக்கிறது.

மனித உரிமை மீறல்கள், குடும்பங்கள் பிரிக்கப்படுத்தல், சிறுவர், சிறுமியரின் பாதுகாப்பு ஆகிய முயற்சிகளில், மெக்சிகோ மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள கத்தோலிக்கத் திருஅவை ஈடுபடவேண்டும் என்றும், ஆயர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

மக்களின் நலனை மனதில் கொண்டு, அமெரிக்க ஐக்கிய நாடும், மெக்சிகோவும் இந்தப் பிரச்சனைக்கு தகுந்த தீர்வு காணவேண்டும் என்று மெக்சிகோ ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். (Fides)

25 July 2019, 14:26