தேடுதல்

பாகிஸ்தானில் புனித வெள்ளி வழிபாட்டில் கலந்துகொள்ளும் கத்தோலிக்கர்கள் பாகிஸ்தானில் புனித வெள்ளி வழிபாட்டில் கலந்துகொள்ளும் கத்தோலிக்கர்கள் 

மதங்களிடையே இணக்கவாழ்வு ஒரு சமுதாயத் தேவை

மதங்களுக்கிடையே நிகழும் உரையாடல்கள், பாகிஸ்தானின் அமைதிக்கு அடிப்படையானது என்கிறார் லாகூர் பேராயர் செபாஸ்டியன் ஷா

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

சகோதரர், சகோதரிகளுடன் நல்லுறவைக் கட்டிக்காக்க ஆவல் கொண்டுள்ள திருஅவை, எவரையும் மதமாற்றம் செய்வதில் ஆர்வம் கொள்ளவில்லை என்று, பாகிஸ்தானின் லாகூர் பேராயர், செபாஸ்டியன் ஷா அவர்கள் கூறினார்.

300க்கும் மேற்பட்ட கத்தோலிக்க அருள்பணியாளர்கள், கிறிஸ்தவப் போதகர்கள் மற்றும் இஸ்லாமியப் பிரதிநிதிகள் கலந்துகொண்ட ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய பேராயர் ஷா அவர்கள், சமுதாயத்தில் காணப்படும் பன்முகத் தன்மையின் அழகை திருஅவை எப்போதும் வரவேற்று வந்துள்ளது என்று கூறினார்.

'மதங்களிடையே இணக்கவாழ்வு ஒரு சமுதாயத் தேவை' என்ற மையக்கருத்துடன் நடைபெற்ற இந்த கருத்தரங்கில், உரையாடல் வழியே வன்முறைகளைக் களைய முடியும் என்றும், மதங்களுக்கிடையே நிகழும் உரையாடல்கள், பாகிஸ்தானின் அமைதிக்கு அடிப்படையானது என்றும், பேராயர் ஷா அவர்கள், தன் உரையில் வலியுறுத்திக் கூறினார்.

கத்தோலிக்கப் பள்ளிகள் இன்று சமுதாய முன்னேற்றத்திற்காக செயல்படுகின்றன என்பதை தன் உரையில் சுட்டிக்காட்டிய பேராயர் ஷா அவர்கள், சமுதாய மேம்பாடு என்பதை மையப்படுத்தி நடத்தப்படும் கத்தோலிக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில், 90 விழுக்காட்டினர் இஸ்லாமியர் என்பதையும் எடுத்துரைத்தார்.

பாகிஸ்தானில் 1998ம் ஆண்டு, மொத்த மக்கள் தொகையில் 1.59 விழுக்காடாக இருந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை, 2017ம் ஆண்டு, 1.27 விழுக்காடாகக் குறைந்துள்ளது என்று ஆசிய செய்தி கூறுகிறது. (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 July 2019, 16:26