தேடுதல்

பசுக்களைப் பாதுகாப்பதாக கூறி மக்களை கொலை செய்யும் வன்முறைக்கு எதிராக போராட்டம் பசுக்களைப் பாதுகாப்பதாக கூறி மக்களை கொலை செய்யும் வன்முறைக்கு எதிராக போராட்டம் 

பசுப் பாதுகாப்பு தொடர்பான வன்முறை கும்பல்களுக்கு தண்டனைகள்

பசுக்களைப் பாதுகாக்கிறோம் என்ற முனைப்புடன், வன்முறையில் ஈடுபடும் குழுக்கள், முஸ்லிம்கள் மற்றும் ஏனைய சிறுபான்மை சமுதாயங்களைக் குறிவைத்து தாக்கி வருகின்றன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

பசுப் பாதுகாப்பு தொடர்பான வன்முறைகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு, கடுமையான தண்டனைகள் வழங்குவதற்கு, இந்தியாவின் மத்திய பிரதேச மாநில அரசு திட்டமிட்டு வருவதை, அம்மாநிலப் பேராயர் லியோ கொர்னேலியோ அவர்கள் வரவேற்றுள்ளார்.

கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களைக் கவலைக்குள்ளாக்கும், பசுப் பாதுகாப்பு தொடர்பான வன்முறைகளையும், கொலைகளையும் தடுப்பதற்கு, மத்திய பிரதேச மாநில அரசு திட்டமிட்டு வருவது, சரியான முயற்சி என்று, போபால் பேராயர் கொர்னேலியோ அவர்கள் கூறியுள்ளார்.

மாட்டு இறைச்சியை சேமித்து வைத்திருப்பவர்கள் அல்லது, பசுக்களைக் கொல்வதற்காக வர்த்தகம் செய்பவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில், முஸ்லிம்களையும், மற்றவர்களையும், இந்து தீவிரவாதக் குழுக்கள், தாக்கி வருகின்றன. இந்நடவடிக்கை, பல இந்திய மாநிலங்களில் குற்றமாகும். 

தற்போது, மத்திய பிரதேச மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசு,  இக்குற்றவாளிகளுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ஐம்பதாயிரம் ரூபாய் வரை அபராதமும் விதிப்பதற்குத் திட்டமிட்டு வருகிறது.

இந்தியாவில் சிறுபான்மை மதத்தவரின், வாழ்வுச் சுதந்திரத்திற்கும், சிந்தனை, மத நம்பிக்கை, வழிபாடு ஆகிய அடிப்படை சுதந்திரங்களுக்கும், குறிப்பாக, சட்ட விதிமுறைக்கும், இந்த வன்முறைகள் சவால்களாக உள்ளன என்றும், அரசின் இப்புதிய தண்டனைகளால், இந்த வன்முறைகள் நிறுத்தப்படும் என்றும், தனது நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார், பேராயர் லியோ கொர்னேலியோ. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 July 2019, 15:30