தேடுதல்

Vatican News
புனித லொயோலா இக்னேசியஸ் புனித லொயோலா இக்னேசியஸ் 

சாம்பலில் பூத்த சரித்திரம்: கிறித்தவமும் சீர்திருத்தமும்-பகுதி13

திருத்தந்தை 14ம் கிளமென்ட் அவர்களால், 1773ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி தடை செய்யப்பட்ட இயேசு சபை, 1814ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி, திருத்தந்தை 7ம் பயஸ் அவர்களால் தடை நீக்கப்பட்டது

மேரி தெரேசா - வத்திக்கான்

1583ம் ஆண்டில், சீனாவில் மறைப்பணியாற்றச் சென்ற, இத்தாலிய இயேசு சபை அருள்பணி மத்தேயு ரிச்சி (Matteo Ricci 1552-1610) அவர்கள், புத்தமதத் துறவிபோல் முதலில் ஆடை அணிந்து, பின்னர், கன்ஃபூசிய மத ஆடைக்கு மாறி, மறைப்பணியாற்றினார். பெய்ஜிங்கில், 1610ம் ஆண்டில், இவர், இறைவனடி எய்தியவேளையில், இவரால் கத்தோலிக்கரானவர்கள் 2,500 பேர் இருந்தனர். இவர்களில் நிறையப் பேர், கல்வியில் சிறந்தவர்கள். அக்காலத்தில், சீனாவில் வெளிநாட்டவர் ஒருவர் அடக்கம் செய்யப்படுவது நினைத்துப் பார்க்க முடியாதது, எனினும், அருள்பணி ரிச்சி அவர்கள், அங்கு அடக்கம் செய்யப்பட அரசு அனுமதியளித்தது, அவருக்குக் கிடைத்த அசாதாரணச் சலுகையாகும்.  இன்றும், சீன அரசு அதிகாரிகளால் அவரது கல்லறை பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது. அருள்பணி ரிச்சி அவர்கள், சீனாவில் ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் ஆற்றிய மறைப்பணிக்கு இதுவே சிறந்த சான்று. இருந்தபோதிலும், இவரின் இறப்புக்குப் பின்னர், அவர், சீனாவில் கடைப்பிடித்த சில வழிபாட்டு நடைமுறைகள் பற்றி திருஅவை அதிகாரிகள் கேள்வி எழுப்பி, வத்திக்கானில் புகார் செய்தனர். இவ்விவகாரம் குறித்து பல ஆண்டுகள் விவாதங்கள் நடைபெற்றன. இறுதியில், ரிச்சி அவர்கள் ஏற்றுக்கொண்ட, பண்பாட்டுமய வழிபாட்டுமுறை, கத்தோலிக்க கோட்பாடுகளுக்கு ஏற்றதாக இல்லை எனச் சொல்லி, அவ்வழிபாட்டுமுறையை, 1705ம் ஆண்டில், தடை செய்தது வத்திக்கான். இதைக் கேள்விப்பட்ட சீனப் பேரரசர், சீனாவில் கிறிஸ்தவ மறைப்பணிகளை, 1721ம் ஆண்டில் தடை செய்தார்.

18ம் நூற்றாண்டில் இயேசு சபை

அதேநேரம், அருள்பணி ரிச்சி அவர்கள், சீனாவில் கடைப்பிடித்த பண்பாட்டுமயமாக்கல், மேற்குலகில், இயேசு சபையினர்க்கெதிரான எதிர்ப்பை வலுப்படுத்தியது. 1750களில், இயேசு சபை, ஏறத்தாழ 700 கல்லூரிகளையும், 200 குருத்துவ பயிற்சி இல்லங்களையும் கொண்டு, அச்சபையில், 22 ஆயிரத்திற்கு அதிகமானோர் மறைப்பணியாற்றி வந்தனர். இவர்கள், செல்வாக்குமிக்க நண்பர்களையும், பணக்கார நன்கொடையாளர்களையும் கொண்டிருந்தனர். அத்துடன், ஐரோப்பாவில் அரச குடும்பங்களுக்கு ஆன்மீக ஆலோசகர்களாகவும் பணியாற்றினர். இவ்வாறு ஏனைய துறவு சபைகள் மத்தியில், இச்சபை மிகவும் புகழ்பெற்று விளங்கியது, திருத்தந்தைக்கு உறுதுணையாக செயல்பட்டது, நாட்டு விவகாரங்களில் கத்தோலிக்கத் திருஅவை தலையிடத் தடங்கலாய் செயல்பட்டது போன்றவை, இயேசு சபையினர்மீது பலருக்கு காழ்ப்புணர்வைத் தூண்டின. இயேசு சபையை அழிப்பதற்கு, 18ம் நூற்றாண்டின் மத்திய பகுதியில், பொதுநிலையினர் மற்றும் குருகுலத்தவர் மத்தியில் பல்வேறு பகைவர்கள் முளைத்தனர். அக்காலத்தில் குருக்கள் மற்றும் திருத்தந்தைக்கு எதிராக நிலவிய வெறுப்புணர்வும், இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகின்றது. மேலும், புதிய உலகான அமெரிக்காவில் காலனிகளை அமைத்திருந்த, இஸ்பானிய மற்றும், போர்த்துக்கீசிய அரசுகள், பூர்வீக மக்களுக்கு எதிராக ஆற்றிவந்த உரிமை மீறல்களைக் கண்டித்து, அம்மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு, இயேசு சபையினர் தூண்டுதலாகச் செயல்பட்டனர். தங்களின் முடியாட்சியை முழுமையாக நிலைநிறுத்துவதற்கு இயேசு சபையினர் தடைக்கற்களாக இருக்கின்றனர் எனவும், காலனி ஆதிக்க அரசுகள் கருதின.

இயேசு சபைக்கு தடை

இதனால், 1759ம் ஆண்டில், போர்த்துக்கீசிய பேரரசும், 1764ம் ஆண்டில் பிரான்சும், 1767ம் ஆண்டில், இஸ்பெயின் மற்றும் சிசிலித் தீவுகள், மால்ட்டா, பார்மா போன்ற தனது காலனிகளிலிருந்து இஸ்பானியப் பேரரசும், 1782ம் ஆண்டில், ஆஸ்ட்ரியா மற்றும் ஹங்கேரியும், தங்களின் பகுதிகளிலிருந்து இயேசு சபையினரை வெளியேற்றின. பிலிப்பைன்ஸில் காலனி ஆதிக்கம் செலுத்திவந்த இஸ்பெயின், 1768ம் ஆண்டு மே 17ம் தேதி, அங்கிருந்தும் இயேசு சபையினரை வெளியேற்றி, இத்தாலிக்கு நாடு கடத்தியது. மெக்சிகோவில், இஸ்பானிய படைவீரர்கள், இயேசு சபையினரை சுற்றி வளைத்து, சிறைப்பிடித்து, இஸ்பானிய போர்க் கப்பல்களில் ஏற்றி, இத்தாலியில், திருத்தந்தையின் ஆட்சியிலிருந்த Civitavecchia துறைமுகத்திற்கு அனுப்பி வைத்தனர். ஆனால் இத்தாலியில், திருத்தந்தை, இயேசு சபை கைதிகளை ஏற்க மறுத்தார். இதனால், ஐந்து மாதங்கள் அங்குமிங்கும் அலைந்த அந்தக் கப்பல், இறுதியில் Corsicaவை வந்தடைந்தது. மெக்சிகோவிலிருந்து ஆறாயிரம் இயேசு சபையினர் நாடு கடத்தப்பட்டனர், இவர்களில், ஏறத்தாழ 600 பேர், கடல் பயணத்திலே இறந்தனர் என, வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், 1767ம் ஆண்டு, 1834, 1932 ஆகிய ஆண்டுகளிலும் இஸ்பெயின் இயேசு சபையினரைத் தடை செய்தது. இறுதியில், 1938ம் ஆண்டில், இஸ்பெயின் அரசர் Francisco Franco, இயேசு சபையினரை, இறுதியாகத் தடை செய்தார். இச்சபையினர் தங்களின் வார்த்தைப்பாடுகளை மறுதலிக்குமாறு வலியுறுத்தப்பட்டு, நாடுகளிலிருந்து கடத்தப்பட்டனர். இத்தாலியின் நேப்பிள்ஸ் அரசர் கார்லோசின் அமைச்சர் Bernardo Tanucciயும் இதே கொள்கையைப் பின்பற்றி, அதே ஆண்டு நவம்பர் 3ம் தேதி, எவ்வித குற்றச்சாட்டோ விசாரணையோ இன்றி, இயேசு சபையினரை, தனது பகுதியிலிருந்து திருத்தந்தையின் பகுதிக்கு நாடு கடத்தினார். திரும்பி வந்தால் கொன்று விடுவதாக மிரட்டினார். 1773ம் ஆண்டில், போலந்து-லித்துவேனிய கூட்டமைப்பும், இயேசு சபையைத் தடை செய்தது. பல ஐரோப்பிய நாடுகளிலும், அதன் காலனி பகுதிகளிலும் இயேசு சபையினர் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இறுதியாக, திருத்தந்தை 14ம் கிளமென்ட் அவர்களும், பல்வேறு கத்தோலிக்க அரசர்களின் வற்புறுத்தலின்பேரில், காரணங்கள் எதையும் அறிவிக்காமல், Dominus ac Redemptor என்ற அறிக்கை மூலம், 1773ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி,  இயேசு சபையை தடை செய்தார். இதையடுத்து, 17ம் நூற்றாண்டிலிருந்து, புனிதர்கள் பற்றி ஆய்வை மேற்கொண்டு, அவர்களின் வரலாறுகளைத் தொகுத்துக்கொண்டிருந்த இயேசு சபை துறவியர் குழு, Antwerpலிருந்து Brussels சென்று, Coudenberg துறவு இல்லத்தில் தனது பணியைத் தொடர்ந்தது. ஆயினும், 1788ம் ஆண்டில், ஆஸ்ட்ரிய அரசால் தடை செய்யப்பட்டது. 1847ம் ஆண்டின் Sonderbund போருக்குப்பின், சுவிட்சர்லாந்திலிருந்து இயேசு சபையினர் தடை செய்யப்பட்டனர், இந்த தடை, பொதுமக்கள் வாக்கெடுப்பின் வழியாக, 1973ம் ஆண்டு மே 20ம் தேதி நீக்கப்பட்டது.

இரஷ்யாவில் இயேசு சபை

ஆயினும், இரஷ்யா, புருசியா (Prussia), அதாவது, பால்டிக் கடலின் தென்கிழக்கில் அமைந்திருந்த ஜெர்மன் அரசு மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள், தங்கள் பகுதிகளில் இயேசு சபையினர் தொடர்ந்து பணியாற்ற அனுமதித்தன. இரஷ்ய பேரரசி பெரிய கத்ரீன், இரஷ்யாவில், புதிய துறவு பயிற்சி இல்லம் தொடங்குவதற்கு, இயேசு சபையினருக்கு நிதி உதவி செய்தார். புருசிய பேரரசர், பெரிய பிரெட்ரிக் அவர்கள், இயேசு சபையினரைத் தடை செய்த திருத்தந்தையின் ஆவணம் தனது நாட்டில் விநியோகிக்கப்படுவதை தடை செய்தார். புருசியாவில் இயேசு சபை தொடர்ந்து பணியாற்றினாலும், அது மீண்டும் திருஅவையில் அங்கீகரிக்கப்பட்ட 1814ம் ஆண்டிற்குமுன், அங்கிருந்து கலைக்கப்பட்டது. Quebecல், பல இயேசு சபையினர், தனித்தனியாக, இயேசு சபை துறவிகளாகப் பணியாற்றினர். இவர்களில் கடைசியானவர், 1800ம் ஆண்டில் இறைபதம் அடைந்தார். 1774ம் ஆண்டில், வட அமெரிக்காவில், 21 இயேசு சபையினர் இணைந்து, உரோம் திருத்தந்தைக்குப் பணிந்து நடப்பதாக அறிக்கை ஒன்றில் கையெழுத்திட்டு அனுப்பினர். அமெரிக்க ஐக்கிய நாட்டில் இயேசு சபையினர், பள்ளிகளையும், கல்லூரிகளையும் தொடர்ந்து நிறுவி நடத்தி வந்தனர்.

1789ம் ஆண்டில் நடந்த பிரெஞ்சு புரட்சியைத் தொடர்ந்து, 1815ம் ஆண்டில் பிரெஞ்சு பேரரசர் நெப்போலியனின் இறுதி தோல்வி வரை, ஐரோப்பா எங்கும் போர் நடந்தது. ஐரோப்பா பொருளாதாரத்தில் கடும் நெருக்கடியை எதிர்கொண்டது. திருத்தந்தையரும் நெப்போலியனோடு தொடர்ந்து போராடியதன் விளைவாக, கத்தோலிக்கத் திருஅவையும் மிக மோசமான நிலையில் உழன்றது. திருஅவையின் அமைப்புமுறைகள், குறிப்பாக, திருஅவையின் பள்ளிகள் புத்துயிர் பெறுவதற்கு, ஆதரவு தேவைப்பட்டது. 1814ம் ஆண்டில், நெப்போலியன் அரசுரிமையைத் துறந்த பின்னர், அதே ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி, பெனடிக்ட் சபை துறவியாகிய  திருத்தந்தை 7ம் பயஸ் அவர்கள் ஆற்றிய செயல்களில் ஒன்று, Solicitudo omnium ecclesiarum என்ற அறிக்கையின் மூலம், உலகெங்கும் இயேசு சபையை மீண்டும் அங்கீரித்ததாகும். இரஷ்யாவில் பணியைத் தொடர்ந்து ஆற்றிக்கொண்டிருந்த இயேசு சபையினருக்கு அவர், 1801ம் ஆண்டில் அனுமதியளித்தார். 1803ம் ஆண்டில், முன்னாள் இயேசு சபையினர் 35 பேர், Marmaduke Stone அவர்கள் தலைமையில், Stonyhurstல் தங்கள் வார்த்தைப்பாடுகளைப் புதுப்பிக்கச் செய்தார். ஆங்கில இயேசு சபை மாநிலத்தை மீண்டும் அனுமதித்து, அதன் மாநிலத் தலைவராக Marmaduke Stone அவர்களை நியமித்தார். அதற்குப்பின், இயேசு சபையினர், தாங்கள் நாடுகடத்தப்படுவதற்குமுன் பணியாற்றிய இடங்களுக்குத் திரும்பினர்.

புனித லொயோலா இக்னேசியஸ் திருவிழாவான ஜூலை 31, இன்று, இயேசு சபையினரை வாழ்த்தி, அவர்களுக்காக, இறைவேண்டல்களை எழுப்புவோம்.

31 July 2019, 15:11