தேடுதல்

Vatican News
இது எங்கள் நிலம் என்று போராடும் அமேசான் பழங்குடியினர் இது எங்கள் நிலம் என்று போராடும் அமேசான் பழங்குடியினர்  (AFP or licensors)

அமேசான் குறித்து கிறிஸ்தவ சபைகளின் இணை அறிக்கை

மத நம்பிக்கை கொண்ட பல்வேறு சபைகளாக, அமைப்புக்களாகப் பணியாற்றிவரும் அனைவரும், அமேசான் காடுகள் எழுப்பும் அழுகுரலைக் கேட்பதற்கு கற்றுக்கொள்ளவேண்டும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

படைப்பு அனைத்தின் வழியாக, இறைவன் நம்முடன் பேசுகிறார்; ஒவ்வொரு உயிரும் அவரது அன்பில் பங்கேற்கிறது என்று, இலத்தீன் அமெரிக்க கிறிஸ்தவ சபைகள் இணைந்து உருவாக்கியுள்ள ஓர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமேசான் பகுதியை மையப்படுத்தி, வருகிற அக்டோபர் மாதம், வத்திக்கானில் நடைபெறவிருக்கும் சிறப்பு ஆயர்கள் மாமன்றத்தையொட்டி, Christian Aid என்ற பெயரில் இயங்கிவரும் கிறிஸ்தவ ஒன்றிப்பு நிறுவனம், ‘நாமே அமேசான்’ என்று பொருள்படும், Somos en Amazonia என்ற இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

மத நம்பிக்கை கொண்ட பல்வேறு சபைகளாக, அமைப்புக்களாகப் பணியாற்றிவரும் அனைவரும், அமேசான் காடுகள் எழுப்பும் அழுகுரலைக் கேட்பதற்கு கற்றுக்கொள்ளவேண்டும் என்றும், அமேசான் பகுதியைக் குறித்து நாம் கொண்டிருக்கும் முற்சார்பு எண்ணங்களை விடுத்து, புதிய கண்ணோட்டத்துடன் இக்குரலுக்கு செவிமடுக்க வேண்டும் என்றும் இவ்வறிக்கை அழைப்பு விடுக்கிறது.

அமேசான் பகுதியைக் காப்பதற்கு, கிறிஸ்தவர்கள் என்ற முறையில், ஒருங்கிணைந்து ஏழு உறுதி மொழிகளை வழங்குவதாக இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமேசான் பகுதியில் வாழும் பழங்குடியினரின் உரிமைகளை உறுதி செய்ய அரசுகளிடம் வலியுறுத்தல், காடுகளில் வாழ்வோர் பின்பற்றும் மாற்றுப் பொருளாதார வழிகளை ஆதரித்தல், சுற்றுச்சூழலுடன் ஒன்றிணைந்த ஆன்மீகத்தை உருவாக்குதல் போன்றவை இந்த ஏழு உறுதி மொழிகளில் அடங்கும்.

25 July 2019, 14:34