தேடுதல்

Vatican News
இயேசு காற்றையும் நீரின் கொந்தளிப்பையும் கடிந்துகொண்டார். உடனே அவை ஓய்ந்தன - லூக்கா 8: 24 இயேசு காற்றையும் நீரின் கொந்தளிப்பையும் கடிந்துகொண்டார். உடனே அவை ஓய்ந்தன - லூக்கா 8: 24 

ஒத்தமை நற்செய்தி - கடலும், காற்றும், அடிபணிய... 2

‘உமக்குக் கவலையில்லையா’ என்று சீடர்கள் எழுப்பிய கேள்வி, கடவுளுக்கு கண்ணில்லையா, காதில்லையா, என்ற பாணியில், இவ்வுலகிலிருந்து, எழும் கேள்விக்கணைகளை நினைவுறுத்துகிறது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

ஒத்தமை நற்செய்தி - கடலும், காற்றும், அடிபணிய... 2

கலிலேயக் கடல், திபேரியக் கடல், அல்லது, கெனசரேத்து ஏரி என, பல்வேறு பெயர்களுடன் நற்செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ள ஒரு நீர்ப்பரப்பின் மீது நிகழ்ந்த ஓர் அற்புத நிகழ்வில் நம் தேடல் பயணம் தொடர்கிறது. 'காற்றையும், கடலையும் அடக்குதல்' என்ற தலைப்புடன் பதிவுசெய்யப்பட்டுள்ள இந்நிகழ்வின் ஆரம்பத்தில், புயல் வீசிய வேளையில், இயேசு உறங்கிக்கொண்டிருந்தார் என்பதை, சென்ற வாரத் தேடலில் சிந்தித்தோம். அவ்வேளையில், அங்கு நிகழ்ந்ததை, மாற்கு நற்செய்தியில் இவ்வாறு வாசிக்கிறோம்:

மாற்கு 4:37-41

அப்பொழுது ஒரு பெரும் புயல் அடித்தது. அலைகள் படகின் மேல் தொடர்ந்து மோத, அது தண்ணீரால் நிரம்பிக் கொண்டிருந்தது. இயேசுவோ படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தார். அவர்கள், "போதகரே, சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா?" என்று சொல்லி அவரை எழுப்பினார்கள்.

இயேசுவின் சீடர்கள் பழக்கமான சூழ்நிலையில்தான் இருந்தனர். தினமும் மீன் பிடித்து வந்த அதே ஏரி. தினமும் பயன்படுத்தி வந்த அதே படகு. ஏறக்குறைய எல்லாமே பழக்கமானவைதாம். இருப்பினும், அங்கு புயல் எழுந்ததும், அவர்கள் நிலை தடுமாறினர்.

தெரியாத, புரியாத சூழ்நிலை என்றால், பொதுவாக, நாம் கவனமாகச் செயல்படுவோம். அந்நேரத்தில், எதிர்பாராதவை நடந்தால், அவற்றைச் சந்திக்க தயாராக இருப்போம். ஆனால், தினம், தினம், திரும்ப, திரும்ப பார்த்து பழகிவிட்ட இடம், ஆட்கள் என்று வரும்போது, நமது கவனம் தீவிரமாக இருக்காது. அந்நேரத்தில், எதிபாராத ஒன்று நடந்தால், பெரும் அதிர்ச்சியாக இருக்கும்.

நாம் வாழ்ந்து பழக்கப்பட்ட வீட்டில் ஏற்படும் ஒரு விபத்து, நமது நெருங்கிய நண்பர் ஒருவர் எதிர்பாராதவிதமாக நடந்துகொள்ளும் முறை... இப்படி, பழக்கமானச் சூழல்களில், பழக்கமில்லாத, எதிர்பாராத அதிர்ச்சிகளை நாம் சந்தித்திருக்கிறோம். இந்த அதிர்ச்சிகள் புயலைப்போல, சூறாவளியைப்போல நம் வாழ்வைப் புரட்டிப்போடக் கூடும்.  

அத்தகையதொரு புயலில் சிக்கிய சீடர்கள், உறங்கிக்கொண்டிருந்த இயேசுவை எழுப்ப முயன்றனர். அவர்கள் இயேசுவை ஏன் எழுப்பினர் என்ற கேள்வியை, ஒரு சில விவிலிய விரிவுரையாளர்கள் எழுப்பி, ஒரு சில பதில்களையும் தந்துள்ளனர். அந்தப் படகில் பயணம் செய்தவர்களிலேயே, கடலைப்பற்றியோ, படகைப்பற்றியோ, புயலில் படகை எவ்விதம் கட்டுப்படுத்துவது என்பதைப்பற்றியோ அதிகம் அறியாதவர் இயேசு மட்டுமே. இருப்பினும், அவர் விழித்தெழுந்தால், தங்களுக்கு கூடுதல் துணிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை சீடர்களிடம் இருந்தது. எனவே, அவர்கள் அவரை எழுப்ப முயன்றனர்.

இயேசுவை எழுப்ப சீடர்கள் பயன்படுத்திய சொற்கள், மூன்று நற்செய்திகளிலும், வெவ்வேறு விதமாகப் பதிவாகியுள்ளன. இப்பதிவுகளை இணைத்து சிந்திக்கும்போது, நெருக்கடியான வேளைகளில் நாம் இறைவனோடு எவ்வாறு தொடர்புகொள்கிறோம் என்பதைக் குறித்து, சில பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்.

சீடர்கள் தங்கள் பிரச்சனையை மட்டும் கூறினர் என்பதை, "ஆண்டவரே, ஆண்டவரே, சாகப் போகிறோம்" (லூக்கா 8:24) என்ற சொற்களாக நற்செய்தியாளர் லூக்கா பதிவு செய்துள்ளார். சீடர்கள் தங்கள் பிரச்சனையைக் கூறி, இயேசுவை உதவிக்கு அழைத்தனர் என்பதை, "ஆண்டவரே, காப்பாற்றும், சாகப் போகிறோம்" (மத்தேயு 8:25) என்ற சொற்களில், நற்செய்தியாளர் மத்தேயு கூறியுள்ளார். தங்கள் பிரச்சனையைக் கூறுவதுடன், இயேசுவின் மீது பழி சுமத்துவதுபோல், "போதகரே, சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா?" (மாற்கு 4:38) என்ற கேள்வியை, சீடர்கள் எழுப்பியதாக, மாற்கு நற்செய்தியில் காண்கிறோம்.

‘உமக்குக் கவலையில்லையா’ என்று சீடர்கள் எழுப்பிய கேள்வி, கடவுளுக்கு கண்ணில்லையா, காதில்லையா, மனமில்லையா, இரக்கமில்லையா என்ற பாணியில், இவ்வுலகிலிருந்து, ஒவ்வொருநாளும், விண்ணைநோக்கி எழும் கேள்விக்கணைகளை நினைவுறுத்துகிறது. பெரும் அளவிலோ, அல்லது, ஒன்றன்பின் ஒன்றாக, தொடர்ச்சியாகவோ பிரச்சனைகள் எழும்போது, நமது உள்ளம், பிரச்சனைகளையும் தாண்டி, கடவுளைக் குற்றம் சாட்டுவதில் கருத்தாயுள்ளது. குற்றம் சுமத்தும் நோக்கத்துடன், இறைவனை நாம் நெருங்கும்போது, எவ்வகையில் பயன்பெறுகிறோம் என்பதை சிந்திப்பது நல்லது.

இதற்கு அடுத்த நிலையாக, மத்தேயு நற்செய்தியில் கூறப்பட்டுள்ள கூற்றை எண்ணிப் பார்க்கலாம். இங்கு, சீடர்கள் தங்கள் நெருக்கடியை எடுத்துக் கூறி, இயேசுவை உதவிக்கு அழைக்கின்றனர். குறைகளை எடுத்துக்கூறி, இறைவனை உதவிக்கு அழைப்பது, பெரும்பாலான மன்றாட்டுக்களில் இடம்பெறும் வழிமுறை.

நம் குறைகளை மட்டும் இறைவனுக்கு முன் வைக்கும் முறையில் செபிக்கும் உயர்ந்த நிலையை, லூக்கா நற்செய்தியில் காண்கிறோம். குறைகளை மட்டும் சொன்னால் போதும், ஏனையவற்றை இறைவன் பார்த்துக்கொள்வார் என்ற மனநிலையில் சீடர்கள் எழுப்பிய இந்த 'வேண்டுதல்', லூக்கா நற்செய்தியில் மட்டுமே கூறப்பட்டுள்ள ஓர் உவமையை நம் நினைவுக்குக் கொணர்கிறது.

“இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர்” என்ற சொற்களுடன் இயேசு ஆரம்பிக்கும் இவ்வுவமையில் (லூக்கா 18:9-14), பரிசேயரும், வரிதண்டுபவரும் கூறிய வார்த்தைகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, செபத்தைக் குறித்து, சில தெளிவுகளும் பாடங்களும் வெளிச்சத்திற்கு வருகின்றன:   

இருவரும் 'கடவுளே' என்ற வார்த்தையுடன் தங்கள் கூற்றைத் துவங்கியுள்ளனர். ஆனால், அதைத் தொடர்ந்து, அவர்கள் பயன்படுத்திய ஏனைய வார்த்தைகளில், அவர்கள் சொன்னது செபமா, அல்லது, சுய விளம்பரமா என்ற கேள்விகள் எழுகின்றன.

பரிசேயர் பயன்படுத்தியது, 27 வார்த்தைகள். வரிதண்டுபவர் சொன்னதோ 4 வார்த்தைகள். பரிசேயர் சொன்ன 27 சொற்களில், 'கடவுளே' என்ற முதல் சொல்லைத் தவிர, மீதி 26 சொற்களில், தன்னை, பிறரோடு ஒப்பிட்டுப் பேசிய சொற்களே (16) அதிகம். இதற்கு மாறாக, வரிதண்டுபவர் தன்னைப்பற்றி அதிகம் பேசவில்லை. அவர் சொன்னதெல்லாம் இதுதான்: "இறைவா, இதோ நான், இதுதான் நான், இவ்வளவுதான் நான்." 'கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்’ (லூக்கா 18:13) என்று, வரிதண்டுபவர் எழுப்பிய செபம், இறைவனால் கேட்கப்பட்டது என்று, இயேசு, இவ்வுவமையை நிறைவு செய்துள்ளார்.

அதேவண்ணம், தங்கள் உண்மை நிலையை, ஆபத்தை, "ஆண்டவரே, ஆண்டவரே, சாகப் போகிறோம்" (லூக்கா 8:24) என்ற சொற்களில் சீடர்கள் வெளிப்படுத்தியதும், இயேசு உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தார். தொடர்ந்து அங்கு நிகழ்ந்ததை நற்செய்தியாளர் மாற்கு இவ்வாறு கூறியுள்ளார்:

மாற்கு 4:39-41

இயேசு விழித்தெழுந்து காற்றைக் கடிந்துகொண்டார். கடலை நோக்கி, "இரையாதே, அமைதியாயிரு" என்றார். காற்று அடங்கியது; மிகுந்த அமைதி உண்டாயிற்று. பின் அவர் அவர்களை நோக்கி, "ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?" என்று கேட்டார்.

இயேசு விழித்தெழுந்ததும் எவ்வாறு நடந்துகொண்டார் என்பதை, மூன்று நற்செய்தியாளர்களும் ஒருசில வேறுபாடுகளுடன் கூறியுள்ளனர். இயேசு அவர்களை நோக்கி, "நம்பிக்கை குன்றியவர்களே, ஏன் அஞ்சுகிறீர்கள்?" என்று கேட்டு, எழுந்து காற்றையும் கடலையும் கடிந்துகொண்டார். (மத். 8:26) என்று மத்தேயு நற்செய்தியில் கூறப்பட்டுள்ளது. மாற்கு, மற்றும் லூக்கா நற்செய்திகளிலோ, இயேசு விழித்தெழுந்ததும், காற்றையும், கடலையும் அமைதிப்படுத்தினார் என்றும், பின்னர் அவர் சீடர்களின் நம்பிக்கையின்மையைக் குறித்துப் பேசினார் என்றும் கூறப்பட்டுள்ளது. அவர் விழித்தெழுந்து காற்றையும் நீரின் கொந்தளிப்பையும் கடிந்துகொண்டார். உடனே அவை ஓய்ந்தன; அமைதி உண்டாயிற்று. அவர் அவர்களிடம், "உங்கள் நம்பிக்கை எங்கே?" என்றார். (லூக்கா 8: 24-25)

"போதகரே, சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா?" என்று, இயேசுவின் மீது குற்றம் சுமத்தும் அளவுக்கு சீடர்கள் அச்சத்தில் இருந்ததால், இயேசு, விழித்தெழுந்ததும், சீடர்களின் அச்சத்தை முதலில் நீக்கினார். தான் அக்கறையற்றவர் என்று அவர்கள் குற்றம் சாட்டியதை இயேசு பெரிதுபடுத்தவில்லை.

நம் குடும்ப உறவுகளில், புயல் வீசும் வேளைகளில், ஒருவரையொருவர் குற்றம் சாட்டும் சூழல்களும் எழுவது இயல்பு. அத்தகையைச் சூழல்களில், குற்றச்சாட்டுகளின் மீது நம் கவனத்தைத் திருப்புவதற்குப் பதில், வீசுகின்ற புயலை அடக்கும் முயற்சிகளை முதலில் மேற்கொள்வது முக்கியம் என்பதை, இயேசு தன் செயல்கள் வழியே நமக்கு உணர்த்துகிறார்.

இயேசு, காற்றையும், கடலையும் அமைதிப்படுத்தியபோது, அவற்றைக் 'கடிந்துகொண்டார்' என்ற சொல்லை மூன்று நற்செய்தியாளர்களும் பயன்படுத்தியுள்ளனர். கடலை நோக்கி, "இரையாதே, அமைதியாயிரு" (மாற்கு 4:39) என்று இயேசு பயன்படுத்திய கட்டளையை, மாற்கு நற்செய்தியின் முதல் பிரிவில், தீய ஆவி பிடித்தவரிடமும் இயேசு பயன்படுத்தினார் (மாற்கு 1:25) என்று, சில விவிலிய விரிவுரையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தீய ஆவிகளை விரட்டவோ, அமைதிப்படுத்தவோ இயேசு பயன்படுத்திய அதே அதிகாரத்தைக் கொண்டு, அவர், காற்றையும், கடலையும் கடிந்துகொண்டார். காற்றும், கடலும் அமைதியான பிறகு, இயேசு தன் சீடர்களிடம் திரும்புகிறார்.

"ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?" (மாற்கு 4:40) "உங்கள் நம்பிக்கை எங்கே?" (லூக்கா 8:25) "நம்பிக்கை குன்றியவர்களே, ஏன் அஞ்சுகிறீர்கள்?" (மத்தேயு 8:26) என்று இயேசு தன் சீடர்களை நோக்கி பல்வேறு வழிகளில் கேள்வி எழுப்புகிறார். இயேசு தம் சீடர்களின் நம்பிக்கை குறித்து எழுப்பும் கேள்வி, நம்மையும் நோக்கி எழுப்பப்படுகிறது. புயல் வீசும் வேளையில், நம் நம்பிக்கை என்னவாகிறது என்பதை அடுத்தத் தேடலில் நாம் சிந்திப்போம்.

04 June 2019, 14:51