தேடுதல்

“கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல” - லூக்கா 9:62 “கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல” - லூக்கா 9:62 

பொதுக்காலம் - 13ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

இஞ்ஞாயிறன்று, வழங்கப்பட்டுள்ள வாசகங்கள், தலைமைத்துவம், தலைவர், தொண்டர், தலைவரைப் பின்பற்றுதல் என்ற கருத்துக்களைச் சிந்திக்க நமக்கு வாய்ப்பளிக்கின்றன.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் - 13ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

இயேசுவின் சீடர்களுக்கு, 'கிறிஸ்தவர்கள்' என்ற பெயரை முதன்முதலில் வழங்கியப் பெருமை, அந்தியோக்கியா நகரைச் சேரும் (திருத்தூதர் பணிகள் 11:26). அந்நகரின் ஆயராகப் பணியாற்றிய புனித இக்னேசியஸ் (St Ignatius of Antioch), உரோமைய அரசன் டிராஜனால் (Trajan) கைது செய்யப்பட்டு, உரோம் நகரில் தன் மறைசாட்சிய மரணத்தைச் சந்திக்கச் சென்றார். அவர் சென்ற வழியில், வெவ்வேறு இடங்களில் வாழ்ந்த கிறிஸ்தவர்களுக்கு அற்புதமான மடல்களை எழுதி அனுப்பினார். இறுதியாக, உரோம் நகரில் இருந்த கிறிஸ்தவக் குழுமத்திற்கு, புனித இக்னேசியஸ் எழுதிய மடலில், "உரோமையத் திருஅவை, பிறரன்பால் தலைமை வகிக்கிறது" என்று கூறினார்.

அன்றைய காலக்கட்டத்தில், உரோம் நகரம், அரசியல், வணிகம், கலாச்சாரம், கலை என்ற பல்வேறு துறைகளுக்கு தலைமைத்துவம் பெற்ற நகரம் என்று கருதப்பட்டது. அந்நகரில் வாழ்ந்த கிறிஸ்தவக் குழுமம், இத்தகையத் துறைகளில் தலைமைத்துவம் பெறுவதைத் துறந்து, பிறரன்பில் தலைமைத்துவம் பெறவேண்டும் என்பதை, புனித இக்னேசியஸ் தன் மடல் வழியே வலியுறுத்தினார்.

"நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்" (யோவான் 13:35) என்று, இறுதி இரவுணவில் இயேசு கூறிய பிரியாவிடைச் சொற்களைப் பின்பற்றி வாழ்ந்த சீடர்கள், அன்பு மட்டுமே கிறிஸ்தவர்களை அடையாளப்படுத்தவேண்டும்; அன்பு மட்டுமே, கிறிஸ்தவக் குழுமங்களில் தலைமைத் தாங்கவேண்டும் என்ற பாரம்பரியத்தை, கிறிஸ்தவ வரலாற்றில் நிலைநாட்டினர். இந்த அன்பு பாரம்பரியத்தைக் கட்டிக்காத்த புனித பேதுரு, புனித பவுல் என்ற இரு பெரும் திருத்தூதர்களின் பெருவிழாவை, ஜூன் 29, இச்சனிக்கிழமை சிறப்பித்தோம்.

இப்பெருவிழாவைத் தொடர்ந்து வரும் இஞ்ஞாயிறன்று, வழங்கப்பட்டுள்ள வாசகங்கள், தலைமைத்துவம், தலைவர், தொண்டர், தலைவரைப் பின்பற்றுதல் என்ற கருத்துக்களைச் சிந்திக்க நமக்கு வாய்ப்பளிக்கின்றன. கிறிஸ்துவின் தொண்டர்களிடையே அன்புக்கு முதலிடம் வழங்கப்படவேண்டும் என்பதை, புனித பவுல் இன்றைய 2ம் வாசகத்தில் மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்:

கலாத்தியருக்கு எழுதிய திருமுகம் 5: 13-15

சகோதரர், சகோதரிகளே, ஒருவருக்கு ஒருவர் அன்பின் அடிமைகளாய் இருங்கள். உன்மீது நீ அன்புகூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக என்னும் இந்த ஒரே கட்டளையில் திருச்சட்டம் முழுவதும் நிறைவு பெறுகிறது. ஆனால் நீங்கள் ஒருவரை ஒருவர் கடித்து விழுங்குவதை நிறுத்தாவிட்டால், ஒருவரால் ஒருவர் அழிக்கப்படுவீர்கள். எச்சரிக்கை!

‘கொலோசெயம்’ போன்ற உரோமைய அரங்குகளில், கிறிஸ்தவர்களை, விலங்குகள் கடித்து விழுங்குவதை, தன் கண்களால் கண்ட புனித பவுல், அதே உருவகத்தை பயன்படுத்தி, கிறிஸ்தவர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருப்பது, நம் கவனத்தை ஈர்க்கிறது. "ஒருவரை ஒருவர் கடித்து விழுங்குதல்" என்று புனித பவுல் பயன்படுத்தியுள்ள உருவகம், இன்றைய அரசியல், வணிகம், ஊடகம், கல்வி, மருத்துவம்... என்ற பல்வேறு துறைகளில், சர்வ சாதாரணமாகப் பின்பற்றப்படும் வெறியாக மாறியுள்ளது. இன்னும் சொல்லப்போனால், சிலவேளைகளில், மதம் சார்ந்த துறைகளிலும், பிறரைக் கடித்து விழுங்கும் போக்கு பரவி வருவது வேதனை தரும் உண்மை. இத்தகைய வெறி, நம் வாழ்வை, எவ்வகையில், ஆட்டிப்படைக்கிறது என்பதை, ஓர் ஆன்மீக ஆய்வாக மேற்கொள்வது, நமக்கு உதவியாக இருக்கும்.

இன்றைய நற்செய்தி, இயேசு என்ற தலைவனின் உன்னதப் பண்புகளை மீண்டும் ஒருமுறை நமக்கு நினைவுறுத்துகிறது. அத்துடன், அவரைத் தொடரும் சீடர்களும், தொடர விழையும் ஏனைய இளையோரும் கொண்டிருக்க வேண்டிய பண்புகளைக் குறித்து சவால்களையும் நம்முன் வைக்கின்றது. லூக்கா நற்செய்தி 9ம் பிரிவில் நாம் வாசிக்கும் இப்பகுதியில், நான்கு நிகழ்வுகள் கூறப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிகழ்விலும் நமக்குத் தேவையான பல பாடங்கள் உள்ளன.

முதல் நிகழ்வு, இயேசுவின் சீடர்களைப் பற்றியது. இயேசு எருசலேமுக்குச் செல்லும் வழியில், ஓர் ஊரில் அவருக்குச் சரியான வரவேற்பு இல்லை. உடனே, அவரது சீடர்கள் யாக்கோபு, யோவான் இருவரும் ஆவேசத்தோடு இயேசுவிடம் வந்து, “ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா?” என்று கேட்டார்கள். (லூக்கா 9:54) யாக்கோபு, யோவான் இருவரும் 'இடியின் மக்கள்' என்ற பெயர் தாங்கியவர்கள் அல்லவா? எனவேதான் இந்த ஆவேசம். இவ்விருவரும் இயேசுவின் வலப்பக்கமும், இடப்பக்கமும் அமர விரும்பியவர்கள் என்பதும், நம் நினைவுக்கு வருகிறது. (மத்தேயு 20:20-21)

நம்ம ஊர் அரசியல் தலைவர் என்றால், தலைவனுக்காக ஊரையேக் கொளுத்தத் துடிக்கும் தொண்டர்களின் ஆவேசத்தைக் கண்டு, உள்ளம் குளிர்ந்து, அவர்கள் விரும்பிய பதவிகளை ஒதுக்கிக் கொடுத்திருப்பார். இயேசு, நம்ம ஊர் அரசியல் தலைவர் இல்லையே... அவர், உலகத் தலைவர்கள் அனைவரையும் விட, மிகவும் வேறுபட்டவர் ஆயிற்றே! எனவே, ஆவேசப்பட்ட சீடர்களுக்கு, அவர், வேறுபட்ட பதிலைத் தந்தார்.

இயேசு அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்து கொண்டார் (லூக்கா 9:55) என்று நற்செய்தியில் வாசிக்கிறோம். அவர் அவ்வாறு கடிந்துகொண்டதற்குக் காரணம் இருந்தது. அந்த ஊரை அழிப்பதற்கு, வானத்திலிருந்து சக்தியைக் கொண்டு வர நினைத்தனர், அச்சீடர்கள். கடவுளின் சக்திகளை, தவறான நோக்கங்களுக்கு, அதுவும், அழிவு நோக்கங்களுக்குப் பயன்படுத்த எண்ணிய அச்சீடர்களின் சுயநலத்தை இயேசு  கடிந்துகொண்டார்.

தொண்டர்களின் ஆர்வம், ஆவேசம், தங்களிடம் உள்ள அதிகாரம் ஆகியவற்றை, அழிவுக்குப் பயன்படுத்தும் தலைவர்களை எண்ணி நாம் வெட்கப்படுகிறோம். தன்னலமிக்க இத்தலைவர்களுக்காக, தங்கள் உயிரையும், பிற உயிர்களையும் பலியாக்கும் தொண்டர்களையும் எண்ணி, வெட்கப்படுகிறோம். வேதனைப்படுகிறோம்.

தாங்கள் அழிவை உருவாக்குவது போதாதென்று, பிற வழிகளில் மக்கள் சந்திக்கும் ஆபத்தையும், அழிவையும் தங்களுக்கு ஆதாயமாக மாற்றிக்கொள்ளும் தலைவர்களையும் நாம் காண்கிறோம். இயற்கைப் பேரிடர்களான வெள்ளமாக இருந்தாலும், வறட்சியாக இருந்தாலும், தண்ணீரின்றி மக்கள் தவித்தாலும், அவற்றை மூலதனமாக்கி, அரசியல் தலைவர்கள் மேற்கொள்ளும் வியாபாரங்கள், நம் மனங்களை இரணமாக்குகின்றன. இயற்கை பேரிடர் உட்பட, அனைத்தையும் தங்களுக்கு ஆதாயமாக மாற்ற விரும்பும் இந்த அரசியல் தலைவர்களின் உள்ளங்களில், அடிப்படை மனித உணர்வுகளை, இறைவன் விதைக்கவேண்டும் என்று மன்றாடுவோம்.

இன்றைய நற்செய்தியில் இடம்பெறும் இரண்டாவது நிகழ்வு, இயேசுவைத் தொடர விழையும் ஓர் இளைஞனைப் பற்றியது. "நீர் எங்கே சென்றாலும், நானும் உம்மைப் பின்பற்றுவேன்" (லூக்கா 9:57) என்று சொல்லும் அவ்விளைஞனை, இயேசு, ஆதங்கத்துடன் பார்க்கிறார். "எங்கே சென்றாலும்..." என்று அந்த இளைஞன்  சொன்னதுதான், அந்த ஆதங்கத்திற்குக் காரணம்... தான் எங்கே போகிறோம் என்பது இயேசுவுக்குத் தெளிவாக இருந்தது. அவர் எருசலேம் நோக்கிச் செல்ல தீர்மானித்துவிட்டார் என்று இன்றைய நற்செய்தியின் முதல் வரிகளில் வாசிக்கிறோம். எருசலேம் நோக்கிச் செல்வது, அங்கிருந்த அதிகாரங்களுடன் மோதுவதற்கு. இந்த மோதலில் தனக்கு என்ன நிகழும் என்பதையும், இயேசு உணர்ந்திருந்தார். இந்நேரத்தில், இந்த மோதலில், ஒரு தொண்டரையும் ஈடுபடுத்த வேண்டுமா என்பதுதான், இயேசுவின் ஆதங்கம்.

மீண்டும், இன்றையத் தலைவர்கள், நம் நினைவுக்கு வருகின்றனர். பொதுவாக, போராட்டம், எதிர்ப்பு, மோதல் என்று வந்தால், தொண்டர்களை அந்த மோதலில் ஈடுபடுத்திவிட்டு ஒதுங்கிக்கொள்வது, நம் தலைவர்களின் இலக்கணம். இயேசு, இத்தகையத் தலைவர் அல்ல.

தன் போராட்டத்தைப்பற்றி மறைமுகமாகச் சொல்லி, அதில் பங்குபெற இயேசு அந்த இளைஞனுக்கு விடுக்கும் அழைப்பு அழகானது: இயேசு அவரிடம், “நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிடமகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை” என்றார். (லூக்கா 9: 58) பறவைகளும், மிருகங்களும் பாதுகாப்பற்றச் சூழலில் ஒவ்வொரு மணித்துளியும் வாழ்கின்றன. எந்த நேரத்தில் அவற்றின் உயிர் வேட்டையாடப்படும் என்பது தெரியாமல், நாள் முழுவதும் பாதுகாப்பற்று வாழும் இவ்வுயிர்கள், மாலையில் திரும்பிச் செல்லும்போது, கூடுகளும், பதுங்குக் குழிகளும் ஓரளவு பாதுகாப்பு தருகின்றன. தனக்கு அந்தப் பாதுகாப்பு கூட இல்லை என்பதை இயேசு அந்த இளைஞனுக்குத் தெளிவாக்குகிறார். இன்றைய அரசுத் தலைவர்களோடு ஒப்பிட்டால், இயேசுவை, பிழைக்கத் தெரியாதத் தலைவர் என்று முத்திரை குத்தலாம்.

பிழைக்கத் தெரியாதத் தலைவர் என்று எண்ணிப்பார்க்கும்போது, இந்தியாவில் திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சராக பணியாற்றிய ஓர் உன்னத மனிதர் நினைவுக்கு வருகிறார். 1998ம் ஆண்டு முதல், 2018ம் ஆண்டு முடிய திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சராக நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட திருவாளர் மானிக் ஷொர்கார் (Manik Sarkar) அவர்களைப் பற்றிய விவரங்கள், நம்மை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன. சொந்த வீடு எதுவுமில்லாதவர் இவர். வங்கிக் கணக்கில் இவரிடம் உள்ள தொகை, ரூபாய் 10,000க்கும் குறைவு. ஆம்... நான் எந்த பூஜ்யத்தையும் தவற விடவில்லை... அது பத்தாயிரம்தான். கோடியில் ஒருவராய் இருக்கும் இவரைப் போன்ற தலைவர்களுக்கு நேர்மாறாக, கோடி, கோடியாய் சொத்தை குவித்திருக்கும் தலைவர்களை நமக்குத் தெரியும்.

இன்றைய நற்செய்தியில் நாம் காணும், மூன்றாவது, நான்காவது நிகழ்வுகளில், இரு இளையோர், தங்கள் குடும்பம் சார்ந்த கடமைகளை, முடித்துவிட்டு, இயேசுவைப் பின்தொடர விழைகின்றனர். இயேசு அவர்களிடம் கூறும் பதில்களை, மேலோட்டமாகப் பார்க்கும்போது, கடுமையான வார்த்தைகளாக ஒலிக்கின்றன. தன் பெற்றோரை அடக்கம் செய்துவிட்டு வர விழையும் இளைஞனிடம் "இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம்" என்கிறார் இயேசு. வீட்டாரிடம் விடைபெற்று வர விழைந்த மற்றோருவரிடம், "வேண்டாம். இப்போதே புறப்படு. பின்னால் திரும்பிப் பார்க்காதே" என்று சொல்கிறார்.

திரும்பிப் பார்க்காமல், தனக்கு வந்த அழைப்பை ஏற்ற ஓர் இளைஞனைப்பற்றி நமக்கு வழங்கப்பட்டுள்ள முதல் வாசகத்தில், ஒரு நிகழ்வு கூறப்பட்டுள்ளது. எலிசா என்ற இளைஞன், தன் வயலில் ஏர் பூட்டி உழுது கொண்டிருந்த வேளையில், இறைவாக்கினர் எலியா அங்கு வந்து, அவரை, இறைவாக்கு உரைப்பவராகத் தேர்ந்துகொண்டார். அதைத் தொடர்ந்து, எலிசா செய்த செயல், அவரது முழு அர்ப்பணத்தைக் காட்டுகிறது.

அரசர்கள் முதல் நூல் 19: 21

எலிசா எலியாவை விட்டுத் திரும்பி வந்து, ஏர் மாடுகளைப் பிடித்து, அடித்துத் தாம் உழுத கலப்பைக்கு நெருப்பு மூட்டி, அம்மாட்டு இறைச்சியைச் சமைத்து, மக்களுக்குப் பரிமாற அவர்களும் அதை உண்டனர். பின்பு அவர் புறப்பட்டுப் போய் எலியாவைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்யலானார்.

எலிசாவின் இந்தச் செயலை மனதில் வைத்து, இயேசு, “கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல” (லூக்கா 9:62) என்ற சவாலை தன் சீடர்களுக்கு வழங்கியிருக்க வேண்டும். இயேசுவைப் பின்பற்றுவது, அவரைப்போல வாழ முற்படுவது மிக, மிக உயர்ந்ததோர் எண்ணம். அந்த எண்ணம் மனதில் தோன்றினால், தாமதிக்க வேண்டாம். நல்லது ஒன்று செய்ய வேண்டும் என்று மனதில் பட்டால், அதை உடனடியாகச் செய்து விடுவது மிகவும் நல்லது. மாறாக, அதை ஆறப்போட்டால்... ஆற்றோடு போய்விடும். அதாவது, நமது ஏனைய எண்ணங்கள், கவலைகள், கணக்குகள், வாழ்வின் நிர்ப்பந்தங்கள் என்ற அந்த வெள்ளம், இந்த நல்லெண்ணத்தை அடித்துச் செல்ல வாய்ப்புண்டு.

நம் வாழ்வைச் சூழும் வெள்ளத்தில் நமது நல்லெண்ணங்கள் அடித்துச் செல்லாமல் இருக்க, அவ்வப்போது, எதிர் நீச்சலும் போடவேண்டியிருக்கும். கல்வியாண்டைத் துவங்கியுள்ள இளையோரே, உங்கள் கல்வி, பொழுதுபோக்கு, வாழ்க்கைமுறை என்ற பல தளங்களிலும் உங்களுக்குள் உருவாகும் நல்லெண்ணங்களை உடனுக்குடன் செயலாற்றுங்கள். அன்பை தலைமைத்துவமாகக் கொண்ட சமுதாயத்தை உருவாக்கும் சிற்பிகளாக நாம் அனைவரும் வாழ்வோமாக!

ஒன்றே செய்யினும், நன்றே செய்க; நன்றே செய்யினும், இன்றே செய்க.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 June 2019, 14:25