தேடுதல்

Vatican News
இறை ஊழியர் லெவே அவர்களின் பக்தர்கள் இறை ஊழியர் லெவே அவர்களின் பக்தர்கள் 

இறை ஊழியர் லெவே அவர்களின் புனிதர் பட்டத் திருப்பணி

பிரான்ஸ் நாட்டில் 1884ம் ஆண்டு பிறந்த இயேசு சபை இறை ஊழியர் லெவே அவர்கள், சிவகங்கை மறைமாவட்டத்தில் 52 ஆண்டுகள் உட்பட, இந்தியாவில் 65 ஆண்டுகள் மறைப்பணியாற்றியுள்ளார்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

ஏழைகளின் தோழர் என அழைக்கப்படும், இறை ஊழியர் லூயி மரி லெவே அவர்களின் வீரத்துவப புண்ணிய வாழ்வு பற்றிய மறைமாவட்ட ஆய்வின் நிறைவு நிகழ்வு, ஜூன் 30, இஞ்ஞாயிறன்று, சருகணியில் நடைபெறுகின்றது.

இஞ்ஞாயிறு உள்ளூர் நேரம் மாலை 5.30 மணிக்கு, சருகணி, திருஇருதயங்களின் ஆலயத்தில், சிவகங்கை மறைமாவட்ட ஆயர், மேதகு முனைவர் செ.சூசைமாணிக்கம் அவர்கள், இத்திருப்பலியை தலைமையேற்று நிறைவேற்றுவார்.

சிவகங்கை மறைமாவட்டத்தில் 52 ஆண்டுகள் மறைப்பணியாற்றி, இறைமக்களின் உள்ளங்களில் நீங்கா இடம்பெற்று, சருகணியில் துயில் கொள்கிறார், இறை ஊழியர் லூயி மரி லெவே.

அவரை அருளாளர் நிலைக்கு உயர்த்துவதற்குரிய திருப்பணி நடவடிக்கைகள், மறைமாவட்ட அளவில், 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கின. மறைமாவட்ட அளவிலான அத்திருப்பணியின் நிறைவு, இஞ்ஞாயிறன்று நடைபெறுகின்றது.

இறை ஊழியர் லூயி மரி லெவே அவர்கள், 1884ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதியன்று பிரான்ஸ் நாட்டிலுள்ள ரென் (Rennes) மறைமாவட்டத்தில் உள்ள லாலி என்ற ஊரில் பிறந்தவர். 1904ம் ஆண்டில் இயேசு சபையில் சேர்ந்து, 1920ம் ஆண்டு சனவரி மாதம் 13ம் தேதியன்று, அருள்பணியாளராக அருள்பொழிவு பெற்றார். இவர், 1921ம் ஆண்டு முதல் 1943ம் ஆண்டு வரை ஆண்டாவூரணியிலும், 1943ம் ஆண்டு முதல் 1956ம் ஆண்டு வரை இராமநாதபுரத்திலும் பங்குபணியாற்றினார். பின்னர், 1956ம் ஆண்டு முதல் 1973ம் ஆண்டு வரை, அதாவது இறக்கும் வரை சருகணியில் ஆன்மீகக் குருவாகவும் இவர் பணியாற்றினார்.

29 June 2019, 14:50