தேடுதல்

Vatican News
நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிபவர் நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிபவர் 

நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆப்ரிக்க திருஅவை

தென்னாப்ரிக்க நிலக்கரி சுரங்கங்களில் வேலைசெய்த தொழிலாளர்கள், பல ஆண்டுகளாகச் சுவாசித்த நிலக்கரித் தூசிகளால், கடுமையான நுரையீரல் மற்றும் ஏனைய நோய்களால் தாக்கப்பட்டுள்ளனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

நிலக்கரியால் தயாரிக்கப்படும் மின்சாரத்தைச் சார்ந்து இருக்கும் தென்னாப்ரிக்கா, தனது நாட்டில், மின்சாரம் மலிவாகக் கிடைக்கின்றது என்று அடிக்கடி பெருமைப்படுகின்றது, ஆனால் அதற்கு விலையாகக் கொடுக்கப்படும் மனித உயிர்கள், மறைவாகவே உள்ளன என்று, தென்பிராந்திய ஆப்ரிக்க ஆயர் பேரவையின் (SACBC) நீதி மற்றும் அமைதி பணிக்குழு கூறியுள்ளது.

தென்னாப்ரிக்காவில், பல ஆண்டுகளாகச் சுவாசித்த நிலக்கரித் தூசிகளால், கடுமையான நுரையீரல் மற்றும் ஏனைய நோய்களால் தாக்கப்பட்டுள்ள நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களின் ஆதரவுடன், அவர்களின் நிலைகள் பற்றிய கண்காட்சி ஒன்றைத் திறந்து வைத்துள்ள, அந்தப் பணிக்குழு இவ்வாறு கூறியுள்ளது.

Sasol நிலக்கரி நிறுவனத்தால் புறக்கணிக்கப்பட்ட, அதன் ஆயிரக்கணக்கான முன்னாள் நோயாளித் தொழிலாளர்களுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்து, அவர்களின் நிலைமையை வெளியுலகுக்கு அறிவிக்கவும், அவர்களுக்கு நீதி கிடைக்கவுமென, இந்தக் கண்காட்சியை நடத்தி வருகிறது, இந்த நீதி மற்றும் அமைதிப் பணிக்குழு.

நோயாளிகளான தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுமாறு, தென்னாப்ரிக்க நிலக்கரி சுரங்க நிறுவனத்தை வலியுறுத்தியுள்ள இந்தப் பணிக்குழு, இந்த மே 30ம் தேதி முதல், ஜூன் 6ம் தேதி வரை இந்தக் கண்காட்சியை நடத்தி வருகிறது.  

இதற்கிடையே, நலவாழ்வு அமைப்பு ஒன்றின் புள்ளிவிவரத்தின்படி, 2017ம் ஆண்டின் இறுதியில், 1,11,166 முன்னாள் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் இழப்பீட்டைப் பெற்றுள்ளனர். இவர்களில், 55,864 பேர், தீராத நுரையீரல் நோயினாலும், மேலும், 52,473 பேர் காச நோயாலும் தாக்கப்பட்டுள்ளனர். எனினும், மேலும் 1,07,714 பேருக்கு, இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை. இவர்களில் 28.4 விழுக்காட்டினர், மொசாம்பிக், லெசோத்தோ, சுவாசிலாந்து, போஸ்ட்வானா மற்றும் ஏனைய தெற்கு ஆப்ரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள். (Fides)

04 June 2019, 14:59