தேடுதல்

Vatican News
திருத்தந்தையுடன், செபத்தின் திருத்தூதுப்பணி அமைப்பின் தலைவர், இயேசு சபை அருள்பணியாளர் Frédéric Fornos திருத்தந்தையுடன், செபத்தின் திருத்தூதுப்பணி அமைப்பின் தலைவர், இயேசு சபை அருள்பணியாளர் Frédéric Fornos 

செபத்தின் திருத்தூதுப்பணி அமைப்பின் 175வது ஆண்டு

திருத்தூதுப்பணி அமைப்பு, தன் 175வது ஆண்டு நிறைவை, ஜூன் 28, 29 ஆகிய இரு நாள்கள், உரோம் நகரில் கொண்டாடும்போது, உலகின் பல பகுதிகளிலிருந்து 6000த்திற்கும் அதிகமானோர் உரோம் நகரில் கூடிவருவர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தையின் செபக்கருத்துக்களை ஒவ்வொரு மாதமும் வெளியிட்டு வரும், செபத்தின் திருத்தூதுப்பணி அமைப்பு, தன் 175வது ஆண்டு நிறைவை, ஜூன் 28, 29 ஆகிய இரு நாள்கள் உரோம் நகரில் கொண்டாடும் என்று, இவ்வமைப்பின் தலைவர், இயேசு சபை அருள்பணியாளர், Frédéric Fornos அவர்கள் கூறினார்.

1844ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி, பிரான்ஸ் நாட்டின் இயேசு சபை அருள்பணியாளர் Francis Xavier Gautrelet அவர்களால் உருவாக்கப்பட்ட செபத்தின் திருத்தூதுப் பணி அமைப்பு, இவ்வாண்டு தன் 175வது ஆண்டை நிறைவு செய்வதையடுத்து, உலகின் பல பகுதிகளிலிருந்து 6000த்திற்கும் அதிகமானோர் உரோம் நகரில் கூடிவருவர் என்று அருள்பணி Fornos அவர்கள் வத்திக்கான் செய்திக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

ஜூன் 28, இவ்வெள்ளியன்று சிறப்பிக்கப்படும் இயேசுவின் தூய்மைமிகு இதயம் திருவிழாவன்று, வத்திக்கான் புனித 6ம் பவுல் அரங்கத்தில் நடைபெறும் ஒரு கூட்டத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் முன்னின்று நடத்துவார் என்று, அருள்பணி Fornos அவர்கள் அறிவித்துள்ளார்.

இன்று உலகெங்கும் செயலாற்றும் செபத்தின் திருத்தூதுப் பணி அமைப்பின் 3 கோடியே 50 இலட்சம் உறுப்பினர்களின் பிரதிநிதிகளாக, ஐரோப்பா, ஆப்ரிக்கா, ஆசியா, ஓசியானியா மற்றும் அமேரிக்கா கண்டங்களைச் சேர்ந்த 6000த்திற்கும் அதிகமானோர் உரோம் நகரில் கூடி வருகின்றனர் என்று, இவ்வமைப்பின் உலக ஒருங்கிணைப்பாளர் அருள்பணி Fornos அவர்கள் கூறினார்.

செபத்தின் திருத்தூதுப் பணி அமைப்பு, அண்மைய ஆண்டுகளில், 'The Pope Video' மற்றும், 'Click to Pray' முயற்சிகளின் வழியே இளையோரை இம்முயற்சியில் ஈடுபடுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

26 June 2019, 15:33