தேடுதல்

Vatican News
மத்திய ஆப்ரிக்க குடியரசு மத்திய ஆப்ரிக்க குடியரசு  (AFP or licensors)

மத்திய ஆப்ரிக்க குடியரசில் இயற்கை வளங்கள் சுரண்டப்படுகின்றன

மத்திய ஆப்ரிக்க குடியரசில், ஆயுதங்களைக் கைவிடுவது குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள புரட்சிக் குழுக்கள், தொடர்ந்து, வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றன

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

மத்திய ஆப்ரிக்க குடியரசும், 14 புரட்சிக் குழுக்களின் தலைவர்களும், கடந்த பிப்ரவரி மாதத்தில், சூடான் நாட்டு கார்ட்டூமில், போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளவேளை, அந்நாட்டின் 80 விழுக்காட்டுப் பகுதி, இன்னும், குற்றக்கும்பல்களின் ஆதிக்கத்தில் உள்ளது என்று, தலத்திருஅவை அதிகாரி ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.

மத்திய ஆப்ரிக்க குடியரசில் 28 ஆண்டுகளாக மறைப்பணியாற்றி வருகின்ற, இத்தாலிய கார்மேல் சபை அருள்பணியாளர் Aurelio Gazzera அவர்கள், பீதேஸ் செய்தியிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஆயுதங்களைக் கைவிடுவது குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள புரட்சிக் குழுக்கள், தொடர்ந்து, வன்முறைகளில் ஈடுபட்டு, கிராமங்களைச் சூறையாடி வருகின்றன என்று கூறியுள்ள அருள்பணி Gazzera அவர்கள், கடந்த மே மாதம் 20, 21 ஆகிய நாள்களில், மூன்று Erre புரட்சியாளர்கள், அப்பாவி குடிமக்களைப் படுகொலை செய்துள்ளனர் என்று தெரிவித்தார்.

பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட நடவடிக்கைகளின்படி அனுமதிகள் வழங்கப்பட வேண்டும் என்பதற்கு, நாட்டில் எவ்வித விதிமுறைகளும் இல்லையென்று தெரிவித்துள்ள அருள்பணி Gazzera அவர்கள், வைர மற்றும் தங்கச் சுரங்கங்களும், உயர்தர மரங்களும், சட்டத்திற்குப் புறம்பே வெட்டப்படுவதற்கு, 2019ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து, இதுவரை 116 அனுமதிகள் அளிக்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.

Bozoum நகரின் பங்குத்தந்தையாகப் பணியாற்றி வரும் அருள்பணி Gazzera அவர்கள், அம்மறைமாவட்டத்தின் காரித்தாஸ் அமைப்பின் தலைவருமாவார்.

அருள்பணி Gazzera அவர்கள், அண்மை ஆண்டுகளாக, மத்திய ஆப்ரிக்க குடியரசில், இயற்கை வளங்கள் மற்றும், தாதுவளங்கள் சுரண்டப்படுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். மேலும், தங்கச் சுரங்கம் அழிக்கப்பட்டது குறித்து சாட்சி கூறியதால், கடந்த மே 2ம் தேதி இவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. (Fides)

07 June 2019, 15:45