தேடுதல்

Vatican News
மத்திய அமெரிக்காவிலிருந்து ரியோ பிராவோ ஆற்றைக் கடக்கும் புலம்பெயர்ந்தோர் மத்திய அமெரிக்காவிலிருந்து ரியோ பிராவோ ஆற்றைக் கடக்கும் புலம்பெயர்ந்தோர் 

தஞ்சம் தேடுவது புலம்பெயர்ந்தோர்க்கு சிலுவைப்பாதை

சமுதாயத்தின் விளிம்புக்குத் தள்ளப்பட்ட மக்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும், பல்வேறு காரணங்களுக்காக, தங்கள் சொந்த நாடுகளைவிட்டுப் புலம்பெயர்ந்துள்ள, 25 கோடியே 80 இலட்சம் மக்கள் பற்றி நினைத்துப் பார்க்க வேண்டும்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

புலம்பெயர்வு குறித்த யுக்திகள், மனித உரிமைகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டுமே தவிர, எல்லைகளை இராணுவத்தால் நிரப்புவதற்கு காரணமாகும் சுங்கவரிகளைத் திணிப்பதாகவோ, உடனடியாக மனிதச் சுவர்களை எழுப்புவதாகவோ அமையக் கூடாது என்று, மெக்சிகோ தலத்திருஅவை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

புலம்பெயர்வோர் உலக நாளையொட்டி, (ஜூன் 20) செய்தி வெளியிட்ட, மெக்சிகோ ஆயர் பேரவையின், புலம்பெயர்வோர் மேய்ப்புப்பணி பணிக்குழுவின் தலைவர், ஆயர் José Guadalupe Torres Campos அவர்கள், புலம்பெயர்வோர் குறித்து கையாளப்படும் யுக்திகள், சட்ட விதிமுறைகளின்படி, பாதுகாப்பான புலம்பெயர்வு இடம்பெறும் வகையில் அமைக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

சமுதாயத்தின் விளிம்புக்குத் தள்ளப்பட்ட மக்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டுமென்று அழைப்பு விடுத்துள்ள ஆயர் Torres Campos அவர்கள், பல்வேறு காரணங்களுக்காக, தங்கள் சொந்த நாடுகளைவிட்டு, வேறு நாடுகளில் வாழ்கின்ற 25 கோடியே 80 இலட்சம் மக்கள் பற்றி நினைத்துப் பார்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

புலம்பெயர்ந்துவரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நெருக்கடிகளை எதிர்கொள்ளும் மெக்சிகோ நாட்டில் கொண்டுவரப்பட்டுள்ள, புலம்பெயர்வு குறித்த கொள்கைகள் பற்றிக் குறிப்பிட்டுள்ள ஆயர், மெக்சிகோவிலும், அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் புகலிடம் கோருவது, அம்மக்களுக்கு, சிலுவைப்பாதையாக மாறியுள்ளது என்று கவலை தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்வு, ஒரு பிரச்சனையாக நோக்கப்படாமல், ஒரு வாய்ப்பாகக் கருதப்பட வேண்டும் என்றும், குரலற்றவர்க்காக குரல் எழுப்புவதற்கு, புலம்பெயர்வோர் உலக நாள், திருஅவைக்கு நல்ல வாய்ப்பாக அமைகின்றது என்றும், மெக்சிகோவின் Ciudad Juarez ஆயர் Torres Campos அவர்கள் கூறியுள்ளார். (Fides)

22 June 2019, 15:54