தேடுதல்

Vatican News
Zagrebல் வாழ்வுக்கு ஆதரவாகப் பேரணி Zagrebல் வாழ்வுக்கு ஆதரவாகப் பேரணி  (ANSA)

வாழ்விற்கு ஆதரவான தீர்மானங்களுக்காக செபியுங்கள்

கருவைக் கலைப்பதற்கு முடிவெடுக்கும் தாயின் உரிமை, வாழ்வதற்கான குழந்தையின் உரிமையைவிட உயர்ந்ததாக நோக்கப்படக் கூடாது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கருவில் வளரும் சிசுவைக் கலைப்பதற்குரிய உரிமை, அனைத்து தாய்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று, மெக்சிகோவின் Hidalgo மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு, கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர், அந்நாட்டு ஆயர்கள்.

தாயின் உயிருக்கு ஆபத்து, கருவில் வளரும் குழந்தைக்கு குணப்படுத்த முடியாத நோய், போன்றவை இருக்கும் சூழல்களில் மட்டுமே கருவுற்ற 90 நாட்களுக்குள் கருவை கலைக்க சட்டம் அனுமதியளிக்கும் நிலையில், தற்போது, அனைவருக்கும் அந்த அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று Hidalgo மாநிலத்தில் ஆளும் கட்சி மேற்கொண்டுவரும் முயற்சிகளை எதிர்த்துள்ளனர், ஆயர்கள்.

கரு உருவான 90 நாட்களுக்குள் அதை கலைக்கும் உரிமை அனைவருக்கும் வழங்கப்படவேண்டும் என்றும், 18 வயதிற்குட்பட்டோர், மாற்றுத்திறனாளிகள், மற்றும் பாலியல் வன்முறைக்குள்ளானோர் ஆகியோருக்கு, 6 மாதம்வரை வளர்ந்த கருவைக்கூட கலைக்கும் உரிமை வழங்கப்படவேண்டும் என்றும் கோரும் தீர்மானங்கள், மாநில சட்ட மன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து கருத்து வெளியிட்ட ஆயர்கள், முடிவெடுக்கும் தாயின் உரிமை, வாழ்வதற்கான குழந்தையின் உரிமையைவிட உயர்ந்ததாக நோக்கப்படக் கூடாது என அறிவித்து, வாழ்விற்கு ஆதரவான தீர்மானங்கள் எடுக்கப்பட செபிக்குமாறு மக்களிடம் விண்ணப்பித்துள்ளனர்.

03 June 2019, 16:41