தேடுதல்

Vatican News
16ம் நூற்றாண்டில் கத்தோலிக்க சீர்திருத்தம் 16ம் நூற்றாண்டில் கத்தோலிக்க சீர்திருத்தம் 

சாம்பலில் பூத்த சரித்திரம்:கிறிஸ்தவமும் சீர்திருத்தமும் பகுதி 8

கத்தோலிக்கச் சீர்திருத்த நடவடிக்கைகளில், ஆன்மீக வாழ்விலும், திருஅவையின் இறையியல் மரபுகளுக்கேற்பவும் அருள்பணியாளர்களுக்குத் தகுந்த பயிற்சியளிப்பதற்கு, குருத்துவ கல்லூரிகள் உருவாக்கப்பட்டன

மேரி தெரேசா – வத்திக்கான்

16ம் நூற்றாண்டில், ஜெர்மன் நாட்டவரான, கத்தோலிக்க இறையியலாளர் மார்ட்டின் லூத்தர் அவர்கள், கத்தோலிக்கத் திருஅவையிலிருந்து பிரிந்து, சீர்திருத்த சபையை உருவாக்கிய பின்னர், கத்தோலிக்கத் திருஅவையில், சீர்திருத்தம் இடம்பெற்றது. இந்த சீர்திருத்தத்தை, பிரிந்த கிறிஸ்தவ சபையினருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக உருவானது என்று சொல்லாமல், சீர்திருத்த இயக்கம் எனப் பொதுவாக அழைக்கப்பட்டது. கத்தோலிக்கத் திருஅவையில், திரிதெந்து பொதுச் சங்கத்திலிருந்து (Council of Trent 1545–1563) தொடங்கிய இந்த சீர்திருத்தம், 1781ம் ஆண்டு, அக்டோபர் 13ம் தேதி வெளியிடப்பட்ட, சகிப்புத்தன்மை அரச ஆணையோடு, பெருவாரியாக முடிவடைந்தது. Habsburg பேரரசர் இரண்டாம் ஜோசப் என்பவர், தனது பேரரசில் வாழ்ந்த, லூத்தரன், கால்வனிசம், கீழை ஆர்த்தடாக்ஸ் சபை உட்பட, கத்தோலிக்கரல்லாத அனைவருக்கும், சமய சுதந்திரத்தை அதிகாரப்பூர்வமாக வழங்கினார். குறிப்பாக, சிறுபான்மை சமய உறுப்பினர்கள், மத வழிபாடுகளை நடத்துவதற்கு, சட்டமுறைப்படி அனுமதியளிக்கப்பட்டது. ஆயினும், பிரிந்த கிறிஸ்தவ சபையினரின் வழிபாடுகள் கடும் கட்டுப்பாடுகளுக்கு உள்ளாகின. 1457ம் ஆண்டில், Petr Chelčický, Jan Hus ஆகிய இருவரால் தோற்றுவிக்கப்பட்ட செக் அல்லது, பொகேமியன் சகோதரத்துவம் என்ற பிரிந்த கிறிஸ்தவ சபைக்கு சுதந்திரம் வழங்கப்படவில்லை. பிரிந்த கிறிஸ்தவ சபையினருக்குப் பதிலளிக்கும் முறையில், கத்தோலிகத்தில் ஏற்பட்ட சீர்திருத்தத்திற்குப் பின்னர், 1781ம் ஆண்டின் அரச ஆணைக்குப்பின் ஆஸ்ட்ரியாவில், இவாஞ்சலிக்கல் லூத்தரன் மற்றும், சீர்திருத்த சபைக்கு, முதல்முறையாக, வழிபாட்டு சுதந்திரத்திற்கு உறுதி வழங்கப்பட்டது.

1782ல் யூதர்களுக்கு சுதந்திரம்

ஆயினும், திருமண நிகழ்வுகளை, கத்தோலிக்கத் திருஅவை மட்டுமே நடத்திவந்தது. பிரிந்த கிறிஸ்தவ சபையினரின் செப இல்லங்கள்,  கத்தோலிக்க ஆலயங்கள் போன்ற அமைப்பைக் கொண்டிருக்கக் கூடாது என்ற கட்டுப்பாடும் நிலவியது. 1781ம் ஆண்டில் வெளியான சகிப்புத்தன்மை அரச ஆணையைத் தொடர்ந்து, 1782ம் ஆண்டில், யூதர்கள், எல்லாத் துறைகளிலும் வர்த்தகத்தை நடத்துவதற்குச் சுதந்திரம் வழங்கப்பட்டது. அதேநேரம் அதற்கு சில புதிய விதிமுறைகளும் கொடுக்கப்பட்டன. யூதர்கள், ஜெர்மன் மொழி ஆரம்பப் பள்ளிகளைத் தொடங்கலாம் அல்லது, அவர்கள் தங்களின் பிள்ளைகளை, கிறிஸ்தவப் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும் எனக் கூறப்பட்டது. யூதர்கள், நடுத்தரப் பள்ளிகளில் கல்வி கற்பதற்கும் அனுமதியளிக்கப்பட்டது. தங்களுக்கென, தனி நீதிமன்றம், பிறரன்பு அமைப்பு, வரிவசூலிக்கும் முறை, பள்ளிகள் அமைப்பு போன்றவற்றைக் கொண்டிருந்த யூத சமுதாயங்களின் தன்னாட்சிமுறை, இந்த அரச ஆணை வழியாக இரத்து செய்யப்பட்டது. யூதர்கள், குடும்பப் பெயர்களைக் கொண்டிருக்க வேண்டும், யூதர்கள் தேசிய இராணுவத்தில் சேர வேண்டும், யூதமத ரபிகள், சமயச்சார்பற்ற கல்வியையும் கற்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டனர். 1781ம் ஆண்டின் அரச ஆணை, "புனிதமான சமத்துவ சுதந்திரங்கள்" என முதலில் அழைக்கப்பட்டது. பிரிந்த கிறிஸ்தவ சபையினர், வழிபாட்டுத் தலங்களை எழுப்புவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள், 1848ம் ஆண்டில் இடம்பெற்ற புரட்சிக்குப்பின் இரத்து செய்யப்பட்டன. எனினும், 1861ம் ஆண்டில், ஆஸ்ட்ரியப் பேரரசர் முதலாம் பிரான்ஸ் ஜோசப் அவர்கள் வெளியிட்ட அரச ஆணைக்குப் பின்னர், பிரிந்த கிறிஸ்தவ சபைகள், கத்தோலிக்கத் திருஅவைக்குச் சமமாக, எல்லா உரிமைகளையும் பெற்றன.

கத்தோலிக்க சீர்திருத்தம்

திரிதெந்து பொதுச்சங்கத்தின் தீர்மானங்களின்படி, கத்தோலிக்கத் திருஅவையில் சீர்திருத்தங்கள் நடைபெற்றன. ஆன்மீக வாழ்விலும், திருஅவையின் இறையியல் மரபுகளுக்கேற்பவும் அருள்பணியாளர்களுக்குத் தகுந்த பயிற்சியளிப்பதற்கு, குருத்துவ கல்லூரிகள் உருவாக்கப்பட்டன. துறவு சபைகள் தங்களின் மூலவேர்களின்படி செயல்படும் வகையில், துறவற வாழ்வில் சீர்திருத்தம் ஆரம்பிக்கப்பட்டது. பக்தி வாழ்விலும், கிறிஸ்துவோடு தனிப்பட்ட உறவிலும் வளர்வதை மையப்படுத்தும் புதிய ஆன்மீக இயக்கங்கள் உருவாகின. இஸ்பானிய தியான யோகிகள், ப்ரெஞ்ச் ஆன்மீகப் பள்ளிகள் போன்றவை அமைக்கப்பட்டன. இறையியலாளர்கள், பிரிந்த கிறிஸ்தவ சபைகளைத் தோற்றுவித்தவர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட திருவருள்சாதனங்கள், பக்தி வழிபாட்டுமுறைகள் போன்றவை குறித்த இறையியலை மையப்படுத்தி போதித்தனர். உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகம், கிரகோரியன் ஆய்வு மையம் போன்றவை தோற்றுவிக்கப்பட்டன. கிரகோரியன் நாட்காட்டி ஏற்றுக்கொள்ளப்பட்டது. திருத்தந்தை 13ம் கிரகரி அவர்கள் காலத்தில், இயேசு சபை மறைப்பணியாளர் மத்தேயு ரிச்சி அவர்கள் சீனா சென்றார், மதங்களை மையப்படுத்திய ப்ரெஞ்ச் போர்கள் நடைபெற்றன.

அதேநேரம், பிரிந்த கிறிஸ்த சபை மக்களை வெளியேற்றியது, 1570ம் ஆண்டில், முதலாம் எலிசபெத்தை, கத்தோலிக்கத்தைவிட்டு நீக்கியது, கத்தோலிக்க அமைப்புமுறையை மேம்படுத்துவதற்காக, பிரிந்த கிறிஸ்தவ சபையைச் சார்ந்த பிள்ளைகளை கத்தோலிக்கர் தங்களோடு சேர்த்துக்கொண்டது போன்றவையும் இடம்பெற்றன. இவ்வாறு மேலும் பல நிகழ்வுகள், கத்தோலிக்கச் சீர்திருத்தத்தில் இடம்பெற்றன

26 June 2019, 14:42