தேடுதல்

Vatican News
புத்த மத தலைவரும் கர்தினால் இரஞ்சித் அவர்களும் புத்த மத தலைவரும் கர்தினால் இரஞ்சித் அவர்களும்  (AFP or licensors)

வெளிநாட்டுப் படைகளை அனுமதிக்க எதிர்ப்பு

நாட்டில் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தி நீடித்த, நிலையான அமைதிக்கு வழிவகுக்கும் அதேவேளையில், நாட்டின் இறையாண்மையும் காப்பாற்றப்பட வேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

வெளிநாட்டு இராணுவங்கள், இலங்கையில் தளம் அமைப்பதை அனுமதிக்கும் திட்டத்திற்கு தங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர், அந்நாட்டு மதத் தலைவர்கள்.

இலங்கையில் வெளிநாட்டுப் படையினர் முகாமிட அனுமதிக்கக் கூடாது என வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கொழும்பு பேராயர், கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்களுடன் இணைந்து, புத்தமதத்தின் உயர்மட்ட மடாதிபதிகள் பலரும் கையெழுத்திட்டுள்ளனர்.

கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழாவன்று இலங்கையில் சில கோவில்களும் உணவு விடுதிகளும் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டின் பாதுகாப்பை பெருக்கும் நோக்கத்தில் வெளிநாட்டுப் படைகளை அனுமதிக்க அரசு ஆலோசித்து வருவதால், இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளனர், மதத் தலைவர்கள்.

இலங்கையின் இராணுவ தளத்தைப் பயன்படுத்த அமெரிக்க ஐக்கிய நாட்டு இராணுவத்திற்கு அனுமதியளிக்கும் இரகசிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளைச் சுட்டிக்காட்டும் மதத்தலைவர்கள், நாட்டில் தீவிரவாதத்தைத் கட்டுப்படுத்தி, நீடித்த, நிலையான அமைதிக்கு வழிவகுக்கும் அதேவேளையில், நாட்டின் இறையாண்மையும் காப்பாற்றப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இலங்கை இராணுவத் தளங்களில் வெளிநாட்டுத் துருப்புக்களை அனுமதிப்பது, , நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதால், அத்தகைய ஒப்பந்தத்திற்கு இசைவு அளிக்க அரசிற்கு உரிமை இல்லை எனவும் கத்தோலிக்க மற்றும் புத்த தலைவர்களின் அறிக்கை கூறுகிறது.

03 June 2019, 16:22