தேடுதல்

Vatican News
வாழ்வுக்கு ஆதரவான போராட்டம் வாழ்வுக்கு ஆதரவான போராட்டம்  (2019 Getty Images)

கருணைக்கொலைக்கு எதிராக ஆஸ்திரேலியா ஆயர்கள்

நோயாளிகள் மீது கொண்டுள்ள கருணை காரணமாகவே இக்கொலைகள் அனுமதிக்கப்படுகின்றன என்ற கூற்று ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது - விக்டோரியா மாநில ஆயர்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஜூன் 19, இப்புதன் முதல் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில், மருத்துவப் பணியாளர்களின் உதவியுடன் கருணைக்கொலை அனுமதிக்கப்படுவதற்கு மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கைக்கு தங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர், அப்பகுதி கத்தோலிக்க ஆயர்கள்.

இம்மாதம் 19ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் இந்த சட்ட அனுமதி குறித்து தங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ள ஆயர்கள், தீராத நோயால் அவதிப்படுவோரும், வேதனையை தாங்க முடியாமல் துடிப்போரும் தங்கள் விருப்பத்தை வெளியிட்டு, கருணைக் கொலைக்கு தங்களை உட்படுத்த அனுமதிக்கும் இந்த சட்டம், தூக்கியெறியும் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக உள்ளது என குறை கூறியுள்ளனர்.

வாழ்வின் இறுதிக்காலம் வரை ஒவ்வொருவரும் அன்புடன் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ள ஆயர்கள், நோயாளிகள் மீது கொண்டுள்ள கருணை காரணமாகவே இக்கொலைகள் அனுமதிக்கப்படுகின்றன என்ற கூற்று ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என தெரிவித்துள்ளனர்.

கருணைக் கொலைகளை நியாயப்படுத்தும் இந்த நவீன காலத்திலும், கத்தோலிக்க மருத்துவமனைகளும், நலஉதவி மையங்களும், தங்கள் கொள்கைகளில் மனவுறுதியுடன் செயல்படுவதாக தெரிவித்துள்ள விக்டோரியா மாநில ஆயர்கள், மனச்சான்றுடன் செயல்படவேண்டிய நேரமிது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

மனிதர்களின் உயிர்களை பறிப்பது, இறக்கும் தறுவாயில் இருப்போருக்கு அன்பு காட்ட தவறுவது, நல ஆதரவு நிதியுதவிகளைக் குறைப்பது, தற்கொலைகளை ஊக்குவிப்பது, தீவிர நோய்களின்போது மரணம் ஒன்றே தீர்வு என எண்ணி செயல்படுவது போன்ற கருத்துக்களை, தங்கள் அறிக்கையில், வன்மையாகக் கண்டனம் செய்துள்ளனர், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில ஆயர்கள்.

18 June 2019, 15:50