தேடுதல்

Vatican News
நல்லாயன் இயேசு நல்லாயன் இயேசு 

உயிர்ப்புக்காலம் 4ம் ஞாயிறு – அன்னை தினம் - ஞாயிறு சிந்தனை

நல்லாயனின் திருநாள், அன்னை தினம், பாத்திமா அன்னை மரியாவின் திருநாள் ஆகிய மூன்று கொண்டாட்டங்களும், நம் ஒவ்வொருவரிலும் உள்ள தாய்மையை வெளிக்கொணரும் ஒரு நாளாக விளங்க செபிப்போம்

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

உயிர்ப்புக்காலம் 4ம் ஞாயிறு – அன்னை தினம் - ஞாயிறு சிந்தனை

மே 12, இஞ்ஞாயிறு - உயிர்ப்புக்காலத்தின் 4ம் ஞாயிறு. இஞ்ஞாயிறு, நல்லாயன் ஞாயிறு என்றும், இறையழைத்தலுக்காகச் செபிக்கும் உலகநாள் என்றும் சிறப்பிக்கப்படுகிறது. இதே ஞாயிறு, மே மாதத்தின் இரண்டாம் ஞாயிறு என்பதால், 80க்கும் மேற்பட்ட நாடுகளில் இன்று அன்னை தினம் கொண்டாடப்படுகிறது. அத்துடன், மே 13, இத்திங்களன்று, பாத்திமா நகர் அன்னை மரியாவின் திருநாளையும் நாம் சிறப்பிக்கிறோம். நல்லாயன் ஞாயிறு, அன்னை தினம், பாத்திமா அன்னை மரியாவின் திருநாள் என்ற மூன்று கருத்துக்களையும் இணைத்து, இன்றைய ஞாயிறு சிந்தனைகளை மேற்கொள்வோம். ஊடகங்களில் வெளியான ஒரு சில செய்திகள், நம் நம் சிந்தனைகளைத் துவக்கிவைக்க, உதவியாக உள்ளன.

ஊடகங்கள் வெளியிடும் செய்திகளில் பெரும்பாலானவை, நம் உள்ளங்களில் ஓடும் நம்பிக்கை நரம்புகளை அறுத்துவிடுகின்றன. இருப்பினும், அவ்வப்போது, அவற்றில் வெளியாகும் ஒரு சில செய்திகள், நமக்குள் நம்பிக்கை தீபங்களையும் ஏற்றிவைக்கின்றன. அத்தகையச் செய்திகள் மூன்றின் மீது நம் கவனத்தைத் திருப்புவோம்.

உயிர்ப்பு ஞாயிறன்று, இலங்கையில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்களின்போது, வெடிகுண்டுகள் நிறைந்த தோள்பையுடன், மட்டக்கிளப்பு சீயோன் ஆலயத்தில் நுழையவிருந்த தீவிரவாதியை, வெளியிலேயே தடுத்து நிறுத்திய ரமேஷ் ராஜு அவர்கள், குண்டுவெடிப்பில் இறந்தார். தீவிரவாதி, கோவிலுக்குள் சென்றிருந்தால், இன்னும் பல உயிர்கள் பலியாகியிருக்கும். ரமேஷ் ராஜு அவர்கள், தன் உயிரைத் தந்து, கோவிலில், வழிபாட்டில் இருந்த அவரது மனைவி, மகள், மகன் உட்பட, பலரைக் காப்பாற்றியுள்ளார்.

மே 5, கடந்த ஞாயிறன்று, இரஷ்ய விமானம் ஒன்று, அவசரமாகத் தரையிறக்கப்பட்டபோது தீப்பிடித்ததால், அதில் பயணம் செய்த 78 பேரில், 41 பேர் உயிரிழந்தனர். இது வேதனையான செய்தி என்றாலும், அந்த அழிவின் நடுவிலும், நல்லவர் ஒருவரைப் பற்றிய செய்தியும் வெளியானது. விமானத்தில் பணியாற்றிய மாக்ஸிம் மொய்செயேவ் (Maxim Moiseyev) என்ற இளையவர், பயணிகளைக் காக்கும் முயற்சியில், தன் உயிரை இழந்தார்.

1987ம் ஆண்டு, ஆகஸ்ட் 16ம் தேதி, அமெரிக்க ஐக்கிய நாட்டின் டிட்ராய்ட் (Detroit) நகர் விமான நிலையத்திற்கருகிலேயே நடைபெற்ற ஒரு விபத்தில், விமானத்தில் இருந்த 155 பேரில், 154 பேர் கொல்லப்பட்டனர். Cecelia Cichan என்ற 4 வயது சிறுமி மட்டும் உயிர் பிழைத்தார். முற்றிலும் எரிந்துபோயிருந்த அந்த விமானத்தில், அச்சிறுமி மட்டும் உயிர் பிழைத்தது, ஓர் அதிசயம் என்று கருதப்படுகிறது. விமானம் ஆபத்தில் உள்ளது என்பதை அறிந்த Ceceliaவின் அன்னை, Paula Cichan அவர்கள், தன் இருக்கையைவிட்டு எழுந்து, Ceceliaவின் இருக்கைக்கு முன் முழந்தாள்படியிட்டு, தன் மகளை இறுக அணைத்துக்கொண்டார் என்றும், அவரது அணைப்பினால், சிறுமி Cecelia உயிர் பிழைத்தார் என்றும் சொல்லப்படுகிறது. அந்த விபத்தில், Ceceliaவின் அம்மா, அப்பா, மற்றும், 6 வயதான அண்ணன் மூவரும் உயிரிழந்தனர்.

மற்றவர்களின் உயிரைக் காக்க தங்கள் உயிரை இழந்த இந்த மூவரைப்போல், வரலாற்றில் பல்லாயிரம் பேர் உயிர் துறந்துள்ளனர். இவர்கள் அடைந்தது, வீரமரணம் என்று பொதுவாகக் கூறப்படும். ஆனால், இவர்கள் அடைந்த மரணம், வீரத்திற்கும் மேலாக, அன்பை, பரிவை, கனிவை வெளிப்படுத்தியுள்ளது என்பதை மறுக்க இயலாது. இந்த அன்பு, பரிவு கனிவு, ஆகியவற்றைக் கொண்டாட, இந்த நல்லாயன் ஞாயிறு, அன்னை தினம், பாத்திமா அன்னை திருநாள் ஆகிய மூன்றும் நம்மை அழைக்கின்றன.

1963ம் ஆண்டு, புனிதத் திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், நல்லாயன் ஞாயிறை, இறையழைத்தலுக்காகச் செபிக்கும் உலக நாள் என்று உருவாக்கினார். இவ்வாண்டு, மே 12, இறையழைத்தலுக்காகச் செபிக்கும் 56வது உலக நாள் சிறப்பிக்கப்படும் வேளையில், புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 19 தியாக்கோன்களை, அருள்பணியாளர்களாகத் திருநிலைப்படுத்துகிறார். நல்லாயன் ஞாயிறு, இறையழைத்தல் ஞாயிறு, இளையோர், அருள்பணியாளர்களாக அருள்பொழிவு பெறும் ஞாயிறு என்ற எண்ணங்களை இணைக்கும்போது, திருஅவையின் இன்றையத் தலைவர்கள், நாளையத் தலைவர்கள் ஆகியோரைப்பற்றி சிந்தித்து, செபிக்க அழகியதொரு தருணத்தை இஞ்ஞாயிறு நமக்கு வழங்கியுள்ளது.

ஒரு தலைவனுக்குத் தேவையான பண்புகள் எவை என்ற கேள்வி எழுந்தால், நிரவாகத் திறமை, அறிவுக்கூர்மை, வீரம் என்ற பண்புகளையே முதலில் எண்ணிப்பார்ப்போம். இளகிய, மென்மையான மனம், மக்களுடன் தன்னையே இணைத்துக்கொள்ளும் குணம் போன்ற பண்புகளை நாம் எண்ணிப் பார்ப்பதில்லை. "எங்கத் தலைவருக்கு ரொம்ப இளகிய மனசு" என்று யாராவது சொன்னால், அதை, கேலி கலந்த ஒரு சிரிப்புத் துணுக்காகவே பார்ப்போம். உலகத் தலைவர்களிடம், பரிவு, கனிவு, மென்மை ஆகியப் பண்புகளை எதிர்பார்ப்பது வீணானது என்று எண்ணுகிறோம். உலகத் தலைவர்களைப்போலவே, ஆன்மீகத் தலைவர்களிடமும், நாம் கனிவு, பரிவு ஆகிய குணங்களுக்கு மேலாக, நிர்வாகத் திறமைகளை எதிர்பார்க்க ஆரம்பித்துள்ளோம் என்பது, கவலை தரும் ஒரு போக்கு. ஆபத்தான இந்தப் போக்கிற்கு ஒரு மாற்றாக, ஆன்மீகத் தலைவர்களிடம் நாம் எவ்வகைப் பண்புகளை எதிர்பார்க்கவேண்டும் என்பதைச் சிந்திக்க, நல்லாயன், அன்னை என்ற இரு உருவங்களை இணைத்துவரும் இஞ்ஞாயிறு, நமக்கு அழைப்பு விடுக்கிறது.

நல்லாயன் என்றதும், இயேசு, ஓர் ஆட்டுக்குட்டியை, தன் தோள்மீது, அல்லது, மார்போடு அணைத்து, சுமந்துசெல்லும் அழகான உருவம், நம் உள்ளங்களில், முதலில் பதிகின்றது. ஆனால், உண்மையான ஆயன், தன் ஆடுகளை அழைத்துச்செல்லும் வழியில் சந்திக்கும் ஆபத்துக்களை, அவ்வேளையில் ஆயனிடம் வெளிப்படும் உறுதியை, தியாகத்தை, இந்த ஓவியங்கள் நினைவுறுத்துவதில்லை.

அதேபோல், அன்னை என்றதும், குழந்தையை அணைத்தல், உணவூட்டுதல், தூளியில் தாலாட்டுதல் போன்ற உருவங்களே நம் உள்ளங்களில் முதலில் தோன்றும். அன்னையாக வாழ்வதற்கு, ஒரு பெண் மேற்கொள்ளவேண்டிய போராட்டங்களையும், அந்தப் போராட்டங்களில் பெண்கள் காட்டும் வலிமையையும் நாம் எண்ணிப்பார்ப்பதில்லை.

இத்தகைய வீரத்துவ, உறுதிமிக்க உணர்வுகளே, அன்னை தினம் உருவாக காரணமாக அமைந்தன என்பதை, இன்று நாம் கொண்டாடும் அன்னை தினத்தின் வரலாறு நமக்குச் சொல்லித் தருகின்றது. அன்னைக்கென வருடத்தின் ஒரு நாளை அர்ப்பணிக்கும் எண்ணத்தை, 19ம் நூற்றாண்டில் வித்திட்டவர், சமூக ஆர்வலரும், கவிஞருமான Julia Ward Howe. இவர் 1870ம் ஆண்டு, சக்திவாய்ந்த ஒரு கவிதையை எழுதினார். Mother's Day Proclamation, அதாவது, "அன்னைதின அதிகாரப்பூர்வ அறிவிப்பு"  என்ற பெயரில் அவர் வெளியிட்ட கவிதை, அன்னை தினத்தைக் கொண்டாடும் எண்ணத்திற்கு வித்திட்டது.

அமெரிக்காவின் உள்நாட்டுப் போர் நடந்த காலத்தில் எழுதப்பட்ட அக்கவிதையில் கூறப்பட்டுள்ள தாய்மைப் பண்புகள், இன்றைய உலகிற்கு மிகவும் தேவையானப் பாடங்களைச் சொல்லித்தருகின்றன. அன்னை, அல்லது, அம்மா என்றதும், வீட்டுக்குள், அடுப்படியில் முடங்கிக்கிடக்கும் பெண்ணாக, அவர்களை எண்ணிப்பார்த்த காலத்தைக் கடந்து, சமுதாயத்தில், நல்ல முடிவுகளை எடுக்க, குறிப்பாக, உலக அமைதியை முன்னிறுத்தி, முடிவுகள் எடுக்க, பெண்கள், வீட்டைவிட்டு வெளியேற வேண்டும்; அவர்களது மென்மை கலந்த உறுதி, உலகின் பிரச்சனைகளைத் தீர்க்கும் என்று, அக்கவிதை முழங்குகிறது. இதோ, அக்கவிதையின் சில வரிகள்:

மகளிரே, இன்று எழுந்து நில்லுங்கள்! இதயமுள்ள மகளிரே, எதிர்த்து நில்லுங்கள்!

உங்களது திருமுழுக்கு, தண்ணீரால் நடந்திருந்தாலும், கண்ணீரால் நடந்திருந்தாலும் சரி... இப்போது எழுந்து நில்லுங்கள், எதிர்த்து நில்லுங்கள்.

உறுதியாகச் சொல்லுங்கள்: “வாழ்வின் மிக முக்கியமானக் கேள்விகளுக்கு, விடைகளைத் தீர்மானிக்கும் உரிமையை, குடும்பத்துடன் சிறிதும் தொடர்பற்ற நிறுவனங்களுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம்.

சண்டைகளில், உயிர்களைக் கொன்று குவித்த கொலை நாற்றத்துடன் வீடு திரும்பும் கணவர்கள், எங்கள் ஆரவார வரவேற்பையும், அரவணைப்பையும் பெறுவதற்கு, நாங்கள் இணங்கமாட்டோம்.

பிறரன்பு, கருணை, பொறுமை என்று நாங்கள் சொல்லித்தரும் பாடங்களை மாற்றி, அவற்றிற்கு எதிரான பாடங்களைச் சொல்லித்தரும் நிறுவனங்களிடம் எங்கள் குழந்தைகளை ஒப்படைக்க மாட்டோம்.

அன்னையரின் ஒருமித்த தீர்மானங்களை, இவ்வாறு, தெளிவுடன் வெளியிடும் இவ்வறிக்கை, தொடர்ந்து, அமைதிக்காக ஏங்கி, ஒவ்வொரு நாளும் அலறும் பூமித்தாயுடன், அன்னையரின் குரல்களை இணைக்கிறது.

நிர்மூலமாக்கப்பட்ட இந்தப் பூமியின் அடிவயிற்றிலிருந்து எழும் ஓர் ஓலம், எங்கள் குரல்களுடன் இணைகிறது. அது சொல்வது இதுதான்: "ஆயுதங்களைக் களையுங்கள்! ஆயுதங்களைக் களையுங்கள்! உயிர் குடிக்கும் வாள், ஒருநாளும், நீதியை நிலைநாட்டும் தராசு ஆகாது!" என்பதே, பூமியின் அடிவயிற்றிலிருந்து எழும் அந்த ஓலம்.

போர்க்கள அழைப்பைக் கேட்டு, தங்கள் நிலங்களையும், தொழிற்சாலைகளையும் விட்டுச்சென்றுள்ள ஆண்களைப் போல், பெண்களும், தங்கள் இல்லங்களை விட்டு வெளியேறட்டும். போரில் ஈடுபடும் ஒவ்வொரு நாட்டிலும் நல்ல முடிவுகள் உருவாக, பெண்களும், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறட்டும்.

உலகின்மேல், சீசரின் உருவத்தைப் பதிக்காமல், கடவுளின் உருவத்தைப் பதிப்பது எவ்விதம் என்பதை, பெண்கள், இவ்வுலகிற்குச் சொல்லித் தரட்டும்.

சண்டைகளில் உயிர்களைக் கொன்று குவித்த கொலை நாற்றத்துடன் வீடு திரும்பும் கணவர்கள் என்று, இக்கவிதையில் சித்திரிக்கப்பட்டுள்ள காட்சி, நமக்கு வேதனை தருகிறது. கண்மூடித்தனமான வெறியுடன், தீவிரவாதக் குழுக்கள், உலகில் பரப்பிவரும் கொலை நாற்றத்தை, இறுதியாக, இலங்கையில் நாம் உணர்ந்தோம். உலகெங்கும் பரவிவரும் கொலை நாற்றத்தைப் போக்க, பல்வேறு நாடுகளில், அரசுகள் மேற்கொள்ளும் இராணுவ முயற்சிகள், தகுந்த பதில்தானா என்பது தெரியவில்லை. பழிக்குப் பழி என்ற தீயை, மன்னிப்பு என்ற மழையே தணிக்கமுடியும். அப்போதுதான், இந்தக் கொலை நாற்றம் இவ்வுலகிலிருந்து முற்றிலும் நீங்கும். மன்னிப்பு மழையைச் சுமந்துவரும் கருணை மேகங்களாக இவ்வுலகில் வலம்வருவது, அன்னையரே என்பதை, யாரும் மறுக்கமுடியாது.

Julia Ward அவர்கள் எழுதிய கவிதையின் இறுதி வரிகள், மே 12, இஞ்ஞாயிறு நாம் கொண்டாடும் அன்னை தினத்தையும், மே 13, இத்திங்களன்று, நாம் கொண்டாடவிருக்கும் பாத்திமா அன்னை திருநாளையும் இணைக்க உதவியாக உள்ளன. உலகின்மேல், சீசரின் உருவத்தைப் பதிக்காமல், கடவுளின் உருவத்தைப் பதிப்பது எவ்விதம் என்பதை, பெண்கள், இவ்வுலகிற்குச் சொல்லித் தரட்டும்.

அதிகாரமும், ஆணவமும் நிறைந்த, சீசரின் உருவம், உலகின் மேல் பதியப் பதிய, மென்மேலும் போர்களாலும், வன்முறைகளாலும் இந்த உலகம் சிதைந்து வருகிறது என்பதை நன்கு அறிவோம். சீசரின் உருவைப் பதிப்பதற்குப் பதிலாக, அன்பான, ஆறுதலான கடவுளின் உருவைப் பதிப்பது எப்படி என்பதை, அன்னை மரியா, தான் வாழ்ந்த காலத்தில் மட்டும் சொல்லித் தரவில்லை. அவர் விண்ணகம் சென்றபின்னரும், பல இடங்களில் தோன்றி, இந்தச் செய்தியைப் பகிர்ந்தார். சிறப்பாக, பாத்திமா நகரில் அவர் தோன்றியபோது, உலகைச் சூழ்ந்திருந்த போரைக் குறித்தும், உலக அமைதிக்காக மக்கள் செபங்களை எழுப்பவேண்டும் என்பது குறித்தும், சிறப்பான செய்திகளைக் கூறினார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவ்வப்போது கூறிவருவதுபோல், மூன்றாம் உலகப்போரை சிறு, சிறு துண்டுகளாகச் சந்தித்து வரும் இன்றைய உலகில், அன்னை மரியா, பாத்திமா நகரில் கூறிய அச்செய்தி, மீண்டும் ஓர் அழைப்பாக நமக்கு ஒலிக்கிறது.

போர்களாலும், வன்முறைகளாலும், தொடர்ந்து காயப்பட்டு வரும் நமது உலகிற்கு, தாய்மை, பெண்மை, கனிவு, பரிவு, பொறுமை, ஆகிய குணமளிக்கும் குணங்கள் அதிகம் தேவைப்படுகின்றன. தாயின் பரிவோடு தன் ஆடுகளை வழிநடத்தும் நல்லாயனின் திருநாள், அன்னை தினம், பாத்திமா அன்னை மரியாவின் திருநாள் ஆகிய மூன்று கொண்டாட்டங்களும், நம் ஒவ்வொருவரிலும் உள்ள தாய்மையை வெளிக்கொணரும் ஒரு நாளாக, அதன் வழியாக, உலகின் அமைதிக்கு உறுதியான அடித்தளமிடும் ஒரு நாளாக இருக்க வேண்டுமென்று, சிறப்பாக வேண்டிக்கொள்வோம்.

11 May 2019, 14:42