தேடுதல்

Vatican News
அரசர் 8ம் ஹென்ரி, Aragonனின் கத்ரீன் அரசர் 8ம் ஹென்ரி, Aragonனின் கத்ரீன்  

சாம்பலில் பூத்த சரித்திரம்:கிறிஸ்தவமும் சீர்திருத்தமும் பகுதி 4

இங்கிலாந்து அரசர் 8ம் ஹென்ரி அவர்கள், தனது சொந்த வாழ்வு மற்றும் அரசியல் ஆர்வத்தில், கத்தோலிக்கத்திலிருந்து பிரிந்து, ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபையை உருவாக்கினார்.

மேரி தெரேசா – வத்திக்கான்

16ம் நூற்றாண்டில், ஜெர்மனியின் மார்ட்டின் லூத்தர், பிரான்சின் ஜான் கால்வின், இங்கிலாந்தின் அரசர் 8ம் ஹென்ரி, மற்றும் சிலரால், திருத்தந்தையின் தலைமைத்துவத்திற்கு, சமய மற்றும் அரசியல் சவாலாக அமைந்த சமயப் புரட்சி, முப்பது ஆண்டுகாலப் போருக்கும், மாற்று சீர்திருத்தத்திற்கும் வித்திட்டது. இதுவே கிறிஸ்தவத்தின் மூன்று முக்கிய கிளைகளில் ஒன்றான, பிரிந்த கிறிஸ்தவ சபை உருவாக அடித்தளமாகும். ஜெர்மனி நாட்டவரும், அகுஸ்தீன் சபை துறவியுமான மார்ட்டின் லூத்தர் அவர்கள், 1517ம் ஆண்டு அக்டோபரில் கத்தோலிக்கத்திலிருந்து பிரிந்து உருவாக்கிய, பிரிந்த கிறிஸ்தவ சபை, சீர்திருத்த சபை என்ற பெயரில், 16ம் நூற்றாண்டின் மத்திய பகுதியில், வட ஐரோப்பாவில் ஆதிக்கம் செலுத்தியது. மேலும், அச்சமயத்தில், கிழக்கு ஐரோப்பாவில், அரசர்கள் வலிமைகுன்றியும், பிரபுக்கள் வலிமை நிறைந்தும், நகரங்கள் குறைந்த எண்ணிக்கையிலும் இருந்ததால், அப்பகுதியில், பிரிந்த கிறிஸ்தவ சபை, தீவிர மாற்றங்களுடன் வேகமாக வளர்ந்தது. அதேநேரம், இஸ்பெயினும், இத்தாலியும், கத்தோலிக்கத்தில், சீர்திருத்தத்திற்கு எதிராக இருந்ததால், அவ்விரு நாடுகளிலும், பிரிந்த கிறிஸ்தவ சபை தனது வலுவான செல்வாக்கை ஒருபோதும் பதிக்க இயலவில்லை.

ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபை

பாவம், பாவத்திற்கு மனம் வருந்துதல், பாவமன்னிப்பு, தவம் மற்றும் மீட்பின் இயல்பு பற்றிய திருஅவையின் நிலைப்பாடு பற்றி, லூத்தர் கேள்வி எழுப்பி பிரிந்தார். அச்சமயத்தில் இங்கிலாந்தை ஆட்சிசெய்த 8ம் ஹென்ரி அவர்கள் (1509-1547), கத்தோலிக்க விசுவாசத்தை ஆழமாக ஆதரித்தார். திருஅவையின் ஏழு திருவருள்சாதனங்களை ஆதரித்ததை வைத்து, திருத்தந்தை பத்தாம் லியோ அவர்கள், 1521ம் ஆண்டில், இங்கிலாந்து அரசர் 8ம் ஹென்ரி அவர்களை, “விசுவாசத்தின் காவலர்” எனப் பெயர் சூட்டினார். இது நடந்து பத்தாண்டுகள் சென்று, அரசர் 8ம் ஹென்ரி அவர்களின் முக்கிய கவனம், அரசியல் பக்கம் திரும்பியது. பக்தியுள்ள கத்தோலிக்கராகிய இவர், இஸ்பெயின் நாட்டின் 5ம் சார்லஸ் அவர்களின் நெருங்கிய உறவினரான, Aragonனின் கத்ரீன் என்பவரை மணமுடித்திருந்தார். இத்தம்பதியருக்கு ஆறு குழந்தைகள் பிறந்தனர். அவர்களில் மேரி Tudor என்ற பெண் குழந்தையைத் தவிர, எல்லாரும் குழந்தைப் பருவத்திலேயே இறந்துவிட்டனர். இந்த திருமணத்தில் ஏதோ குறை உள்ளது என்றும், தனக்கு ஆண்வாரிசு வேண்டுமென்றும் விரும்பிய அரசர், தனது திருமணத்தை இரத்து செய்யுமாறு கத்தோலிக்கத் திருஅவையிடம் விண்ணப்பித்தார். திருத்தந்தை 7ம் கிளமென்ட் அவர்கள், அதற்கு அனுமதி தரவில்லை. எனவே, திருத்தந்தையின் தீர்மானத்தைப் புறக்கணித்து, 1533ம் ஆண்டில், ஏற்கனவே தன்னால் கருத்தரித்திருந்த Anne Boleyn என்பவரை, இரகசியமாகத் திருமணம் செய்தார் அரசர் ஹென்ரி. இதனால், அரசர் 8ம் ஹென்ரியை, கத்தோலிக்கத் திருஅவைக்குப் புறம்பாக்கினார், திருத்தந்தை 7ம் கிளமென்ட். இதற்குப் பதிலடியாக, இங்கிலாந்திலுள்ள திருஅவைக்கு, திருத்தந்தை அல்ல, தானே உயரிய, ஒரே தலைவர் என அறிவித்தார் அரசர் 8ம் ஹென்ரி. இதுவே, 1534ம் ஆண்டில், இங்கிலாந்தில் ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபை உருவாகக் காரணமானது. எனவே, இங்கிலாந்து அரசர் 8ம் ஹென்ரி அவர்கள், மார்ட்டின் லூத்தர் போன்று இறையியல் சார்ந்த கேள்விகளை எழுப்பாமல், தனது சொந்த வாழ்வு மற்றும் அரசியல் ஆர்வத்தில், கத்தோலிக்கத்திலிருந்து பிரிந்து, ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபையை உருவாக்கினார். இவர், திருவழிபாடுகள், பொதுவான செப நூல் போன்றவற்றை, ஆங்கிலத்தில் தயார் செய்தது உட்பட, ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபையிலும் பெரும் மாற்றங்களைக் கொணர்ந்தார். ஏனைய பிரிந்த சீர்திருத்த சபைகளின் சில மாற்றங்களையும் இவர் ஏற்றுக்கொண்டார். ஆயினும், ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபை ஏற்படுத்திய மாற்றங்கள், கத்தோலிக்கப் பாரம்பரியக் கோட்பாடுகள் மற்றும் திருவழிபாடுகளுக்கு மிக நெருக்கமாகவே உள்ளன.  

அரசர் 8ம் ஹென்ரி

கத்தோலிக்கத் திருஅவையிலிருந்து பிரிந்து, இங்கிலாந்தில் ஆங்லிக்கன் சபையை உருவாக்கிய, அரசர் 8ம் ஹென்ரி அவர்கள், சில கடும் நடவடிக்கைகளையும் எடுத்தார். துறவு இல்லங்களை மூடினார். அவர்களின் சொத்துக்களை அபகரித்தார். திருஅவை சொத்துக்கள், இங்கிலாந்து அரசில், மூன்றில் ஒரு பகுதியைக் கொண்டிருந்ததால், அரசரின் இந்நடவடிக்கைக்கு மக்களிடமிருந்து அவ்வளவாக அப்போது எதிர்ப்புக் கிளம்பவில்லை. ஒவ்வொரு பங்கும், ஆங்கிலத்தில் திருவிவிலியத்தை வைத்திருக்க வேண்டும் என, அரசர் ஆணையிட்டார். 1526ம் ஆண்டில் Tyndale என்பவர், புதிய ஏற்பாட்டையும், 1535ம் ஆண்டில் Coverdale என்பவர், முழு விவிலியத்தையும் மொழி பெயர்த்தனர். அதேநேரம், தனது கொள்கையை ஏற்காதவர்களைத் தூக்கிலிட்டு தலை வெட்டப்படச் செய்தார் அரசர் 8ம் ஹென்ரி. முதலில், 1534ம் ஆண்டு ஏப்ரல் 20ம் தேதி, 28 வயது அருள்சகோதரி Elizabeth Barton அவர்கள், தூக்கிலிட்டு தலை வெட்டுண்டு இறந்தார். மறைசாட்சிகளான புனிதர்கள் தாமஸ் மூர், ஜான் ஃபிஷர் உட்பட பலரும் இவ்வாறு இறந்தனர்.

ஆங்கிலக்கன் சபைக்கு எதிர்ப்பு

இலண்டனிலிருந்து புதிய மதம் அறிவிக்கப்பட்டபோது, 1536ம் ஆண்டு அக்டோபர் முதல் நாளன்று, Lincolnshireலுள்ள Louthல் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி, மாற்றங்களை இரத்து செய்யுமாறு வலியுறுத்தினர். இராணுவ அடக்குமுறை இடம்பெறும் என அரசர் மக்களை அச்சுறுத்தினார். முடிவில், அந்த நகரின் புனித ஜேம்ஸ் பங்குத்தள அருள்பணியாளர் Nicholas Melton என்பவர் உட்பட முன்னின்று போராட்டம் நடத்திய பலர் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து Yorkshire, Durham, Northumberland, மற்றும் Lancashire பகுதிகளிலிருந்து நாற்பதாயிரம் பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆயினும் இவர்களுக்கு எதிரான அடக்குமுறையில், ஏறத்தாழ 250 பேர், அதே பாணியில்  கொல்லப்பட்டனர். Salisbury நகரின் பிரபுகுலத்தவரான 68 வயது நிரம்பிய Margaret Pole அவர்களும் எவ்வித விசாரணையுமின்றி 1541ம் ஆண்டில் கொல்லப்பட்டார். இவ்வாறு தொடர்ந்து கத்தோலிக்கர் வதைக்கப்பட்டனர்.

1547ம் ஆண்டில் அரசர் 8ம் ஹென்ரி இறந்தார். அவருக்குப பின், அவரின் மகன் 6ம் எட்வர் (1547–53,Jane Seymourனின் மகன்), முதலாம் மேரி (1553–8, Aragon கத்ரீன் மகள்) மற்றும் முதலாம் எலிசபெத் (1558–1603, Anne Boleyn மகள்) ஆகியோர் அடுத்தடுத்து அரியணையில் அமர்ந்தனர். அரசர் ஹென்ரி இறந்தபோது 6ம் எட்வர்க்கு வயது ஒன்பதுதான். எனவே கான்டர்பரியின் பேராயர் Thomas Cranmer மற்றும் அரசவையினர், இங்கிலாந்தில், சீர்திருத்தத்திற்கு கதவுகளைத் திறந்தனர். 1549ம் ஆண்டில் திருப்பலி இரத்து செய்யப்பட்டது. பொதுவான செபம் நூல் என்ற பெயரில், ஆங்கிலத்தில் புதிய திருவழிபாடு அமல்படுத்தப்பட்டது. பேராயர் Cranmer அவர்கள் ஆங்லிக்கன் சபையில் பயன்படுத்திய செபமே, 20ம் நூற்றாண்டுவரை பயன்படுத்தப்பட்டது.

அரசர் 8ம் ஹென்ரி மற்றும் Aragon கத்ரீன் தம்பதியரின் மகளான Mary Tudor,  தனது தாயைப் போன்று பக்தியுள்ள கத்தோலிக்கராக இருந்தார். இவர் அரசியாக முடிசூட்டப்பட்டபோது, இங்கிலாந்தில், திருத்தந்தையின் தலைமைத்துவத்தின்கீழ், கத்தோலிக்கம் மீண்டும் இயங்குமாறு செய்தார். அப்போது, பிரிந்த கிறிஸ்தவ சபையினர் சித்ரவதைக்குள்ளாகினர். 1520க்கும், 1525ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில், அகுஸ்தீன் துறவு இல்லத்திலும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் மார்ட்டின் லூத்தரின் கொள்கைகள் கடைப்பிடிக்கப்பட்டு வந்தன. இதனால் கேம்பிரிட்ஜ் குழு 1525ம் ஆண்டில் பிரிந்தது. சிலர் நாடுகடத்தப்பட்டனர். கான்டர்பரியின் பேராயராக இருபது ஆண்டுகள் பணியாற்றிய பேராயர் Cranmer அவர்கள், பல ஆயர்கள் உட்பட 300 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். இந்தக் கொலைகளால் அதிர்ச்சியடைந்த மக்கள், அரசி Mary Tudor அவர்களை, இரத்த மேரி என அழைத்தனர். 1558ம் ஆண்டில், அரசர் 8ம் ஹென்ரி மற்றும் Ann Boleyn தம்பதியரின் மகளான, முதலாம் எலிசபெத் (1533-1603) முடிசூட்டப்பட்ட பின்னர், இங்கிலாந்தில் பிரிந்த கிறிஸ்தவ சபை மீண்டும் செல்வாக்கு பெற்றது. இவர் மனத்தளவில் பிரிந்த கிறிஸ்தவ சபையைச் சார்ந்திருந்தாரா என்பது உறுதிசெய்யப்படவில்லை. ஆயினும், இவர் அரியணையில் அமர, அச்சபையினரின் ஆதரவு தேவைப்பட்டுள்ளது எனச் சொல்லப்படுகின்றது.

இவ்வாறு இங்கிலாந்தில், ஆங்கிலக்கன் சபைக்கும், கத்தோலிக்கத்திற்கும் இடையே தொடர்ந்து பிரச்சனைகள் நிலவிய காலம் தற்போது இல்லை. இவ்விரு சபையினரும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இங்கிலாந்து ஆங்லிக்கன் பேராயரும், திருத்தந்தையரும் நல்லுறவிலே உள்ளனர்.

29 May 2019, 15:08