தேடுதல்

'கிறிஸ்து வாழ்கிறார்' திருத்தூது அறிவுரை மடல் - திருத்தந்தை பிரான்சிஸ் 'கிறிஸ்து வாழ்கிறார்' திருத்தூது அறிவுரை மடல் - திருத்தந்தை பிரான்சிஸ் 

இளையோரில் திரு அவை நம்பிக்கை கொண்டிருக்க...

இளையோர் குறித்து திருத்தந்தை வழங்கும் கண்ணோட்டம், நம்பிக்கைத் தருவதாகவும், நேர்மறைக் கருத்துக்களை உள்ளடக்கியதாகவும் உள்ளது, என்கின்றனர் ஆஸ்திரேலிய ஆயர்கள்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

உலகின் இளையோர், குறிப்பாக திருஅவையின் ஓரங்களிலும், திருஅவையை விட்டு விலகியும் வாழும் இளையோர் மீது, திருஅவை, முழு மூச்சுடன் தன் சக்தியைச் செலவழிக்கவேண்டும் என்ற அழைப்பை, திருத்தந்தையின் ''கிறிஸ்து வாழ்கிறார்' என்ற அறிவுரை மடலில் காண முடிகிறதென, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய ஆயர் பேரவைகள் தங்கள் பாரட்டுக்களை வெளியிட்டுள்ளன.

திருஅவையின் பணிகளில் இளையோரின் முக்கிய இடத்தை அங்கீகரித்து, அவர்களை ஈடுபடுத்துவதில் முக்கிய கவனம் செலுத்தவேண்டிய நேரமிது என, இந்த ஏடு குறித்து கூறியுள்ள அமெரிக்க ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் டேனியல் டி நார்டோ அவர்கள், கலாச்சாரங்களுக்கிடையே மற்றும் தலைமுறைகளுக்கு இடையே இன்று காணப்படும் பல்வேறு சூழல்களில், மறைப்பணி சீடர்களாகச் செயல்பட, இளைய தலைமுறையிடமிருந்து திருஅவை கற்றுக்கொள்ள முடியும் என கூறினார்.

திருத்தந்தையின் அறிவுரை மடல் குறித்து தன் வரவேற்பையும் வாழ்த்தையும் வெளியிட்டுள்ள இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்கள், இளைஞர்களின் உயிர்துடிப்பான செயலாக்கம், திருஅவை, மற்றும், ஆயர்கள் மீது அவர்கள் கொண்டுள்ள அன்பு, சவால்களை எதிர்நோக்கும் துணிச்சல், செபத்தின் மீதும் இயேசுவின் மீதும் அவர்கள் கொண்டுள்ள உறவு போன்றவற்றை இம்மடலில் விரிவாக வெளிக்கொணர்ந்துள்ளதற்கு, திருத்தந்தைக்கு நன்றியை வெளியிடுவதாகத் தெரிவித்துள்ளனர்.

இளையோர் குறித்து இம்மடலில் திருத்தந்தை வழங்கியுள்ள கண்ணோட்டம், நம்பிக்கைத் தருவதாகவும், நேர்மறைக் கருத்துக்களை உள்ளடக்கியதாகவும் உள்ளது என தங்கள் கருத்துக்களை பதிவுச் செய்துள்ளனர் ஆஸ்திரேலிய ஆயர்கள்.

இயேசுவுடன் நட்புணர்வை வளர்க்கவும், குடும்பத்தில் ஈடுபாட்டைக் கொண்டிருக்கவும், சமூகத்தில் உறவுகளைக் கட்டியெழுப்பவும், மற்றவர்களோடு இணைந்து ஏழைகளுக்கு உதவவும், இளையோருக்கு ஊக்கமளிப்பதாக இந்த அறிவுரை மடல் உள்ளது என, ஆஸ்திரேலிய ஆயர்கள், மேலும் கூறியுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 April 2019, 16:05