தேடுதல்

Vatican News
தோமா இயேசுவைப் பார்த்து, "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!" என்றார். (யோவான் 20: 28) தோமா இயேசுவைப் பார்த்து, "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!" என்றார். (யோவான் 20: 28) 

இறை இரக்கத்தின் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

உயிர்த்த இறைவனின் தழும்புகளைத் தொட்டுணர அழைக்கும் இறை இரக்கத்தை, நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் உணர, குறிப்பாக, காயப்பட்டிருக்கும் இலங்கை மக்கள் உணர, புனித தோமையாரின் பரிந்துரையோடு வேண்டுவோம்.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

இறை இரக்கத்தின் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

"இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்" (யோவான் 20:27). இயேசு, உயிர்த்தெழுந்த பின், தன் காயங்களைத் தொடுவதற்கு, தன் சீடர் தோமாவுக்கு விடுத்த இவ்வழைப்பு, நம் ஆலயங்கள் அனைத்திலும், இன்றைய ஞாயிறு வழிபாட்டில் ஒலிக்கின்றது. இவ்வழைப்பு, தோமாவுக்கு மட்டுமல்ல, நம் ஒவ்வொருவருக்கும் விடப்படும் அழைப்பு.

உயிர்ப்புப் பெருவிழாவைத் தொடர்ந்துவரும் இறை இரக்கத்தின் ஞாயிறன்று நாம் வாசிக்கும் நற்செய்தியில் இடம்பெறும் இவ்வழைப்பு, ஒவ்வோர் ஆண்டிலும் நம்மை வந்தடைந்தாலும், இவ்வாண்டு, இது, கூடுதல் சிந்தனைகளை உருவாக்குகின்றது.

உயிர்த்த இயேசு தம் காயங்களை நமக்குக் காட்டுகிறார்; அவற்றைத் தொடுவதற்கு நம்மை அழைக்கிறார் என்ற எண்ணம், நம்மை, இலங்கையை நோக்கி அழைத்துச் செல்கின்றது. கடந்த ஒரு வாரமாக, நமது சிந்தனைகள், இலங்கையின் புனித அந்தோனியார், புனித செபஸ்தியார் மற்றும் சீயோன் ஆலயங்களைச் சுற்றிவந்த வண்ணம் உள்ளன.

ஏப்ரல் 21, கடந்த ஞாயிறு, உயிர்ப்பு ஞாயிறென உலகெங்கும் கொண்டாடப்பட்டாலும், அது, இலங்கை வாழ் மக்களுக்கு, குறிப்பாக, இலங்கை வாழ் கிறிஸ்தவர்களுக்கு, மீண்டும், பாடுகளின் வெள்ளிக்கிழமையாக மாறியது. உயிர்த்த இயேசுவை சந்திக்க ஆலயங்களுக்குச் சென்றவர்கள், மீண்டும், கல்வாரிச் சிலுவையில் அறையப்பட்டனர்.

கிறிஸ்மஸ், உயிர்ப்பு போன்ற முக்கியமானத் திருநாள்களில், கிறிஸ்தவக் கோவில்கள் தாக்கப்படுவது, இது முதல் முறையல்ல. 2016ம் ஆண்டு, உலகெங்கும் உயிர்ப்புப் பெருவிழா கொண்டாடப்பட்டபோது, பாகிஸ்தான், இலாகூர் பூங்காவில், கூடியிருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்பில், 75 பேர் கொல்லப்பட்டனர்.

2017ம் ஆண்டு, ஏப்ரல் 9, புனித வாரத்தின் முதல் நாளான குருத்தோலை ஞாயிறன்று, எகிப்து நாட்டின் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் கோவில்கள் இரண்டில், வழிபாட்டு நேரத்தில், நிகழ்ந்த தற்கொலை குண்டுவெடிப்பில், 47 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேலானோர் காயமுற்றனர். 2011ம் ஆண்டு, கிறிஸ்மஸ் நாளன்று, நைஜீரியாவின் இரு கிறிஸ்தவக் கோவில்களில் நடைபெற்ற தாக்குதல்களில், 30க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

இத்தகைய மதியற்ற வன்முறைகள் நிகழும்போது, நமக்கு மீண்டும் மீண்டும் சொல்லித்தரப்படும் வழிகள், மன்னிப்பு, மற்றும் செபம். இவ்விரண்டையும் இணைத்து, இயேசு கல்வாரியில் சொன்ன வார்த்தைகள், அடிக்கடி நமக்கு நினைவுறுத்தப்படுகின்றன. "தந்தையே இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை" (லூக்கா 23:34)

இறை இரக்கத்தின் ஞாயிறைக் கொண்டாடும்போது, கல்வாரியில், சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த இயேசு, தன் கொலைகாரர்களை மன்னிக்கும்படி தந்தையிடம் வேண்டிய சொற்களை, இந்த ஞாயிறு வழிபாட்டின்போது, அதிலும் சிறப்பாக, இலங்கையில் நிகழ்ந்த தாக்குதல்களுக்குப்பின், இந்த மன்னிப்பின் சக்தியைப் புரிந்துகொள்ள முயல்வோம்.

இயேசு வழங்கிய இந்த மன்னிப்பின் ஆழத்தைப் புரிந்துகொள்ள, இருவேறு மடல்கள் உதவியாக இருக்கும். முதல் மடல், முகநூல் வழியே கடந்த ஒரு வாரமாகப் பகிர்ந்துகொள்ளப்படும் மடல். இலங்கையில் தாக்குதல்களை மேற்கொண்டவர்களுக்கு, ஓர் அருள் சகோதரி எழுதியதாகக் கூறப்படும் இம்மடலிலிருந்து ஒரு சில வரிகள்:

உங்களை நான் பாராட்டுகிறேன். ஞாயிற்றுக் கிழமைகளில் எங்கள் கோவில்களில் மக்கள் கூடிவருவர் என்பதையும், எங்கள் வழிபாட்டு நேரங்களையும் நீங்கள் நன்கு அறிந்துவைத்திருந்ததற்காக உங்களை நான் பாராட்டுகிறேன்.

எங்கள் கோவில்களைத் தேடிவரும் அனைவரையும் நாங்கள் வரவேற்கிறோம் என்பதை நீங்கள் உலகறியச் செய்ததற்காக, உங்களை நான் பாராட்டுகிறேன்.

எங்கள் சமுதாயத்தை அழித்துவிட நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள், எங்கள் கிறிஸ்தவ நம்பிக்கையை இன்னும் வளர்த்துள்ளன; எங்களை இன்னும் நெருங்கிவரச் செய்துள்ளன; இனிவரும் நாள்களில் எங்கள் கோவில்களுக்கு வருவோரின் எண்ணிக்கை வளரும். இவற்றிற்காக உங்களை நான் பாராட்டுகிறேன்.

வெறுப்பை வளர்ப்பதற்காக இவ்வளவு தூரம் நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரப்போவதில்லை. கிறிஸ்தவர்களுக்கும், மற்ற மதத்தினருக்கும் இடையே பிளவை உருவாக்கப்போவதில்லை.

இலங்கையில் நிகழ்ந்த தாக்குதல்கள், கிறிஸ்தவர்களுக்கு மறைமுகமாக வழங்கியுள்ள நன்மைகளை இம்மடல் பட்டியலிட்டுள்ளது. ஆனால், மதியற்ற வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு, இம்மடல் வழியே, மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதா என்பது, தெளிவாகத் தெரியவில்லை.

இதிலிருந்து மாறுபட்ட மற்றொரு மடல், 1996ம் ஆண்டு ஒரு சிஸ்டர்சியன் (Cistercian) துறவியால் எழுதப்பட்டது. இஸ்லாமியத் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட Christian de Chergé என்ற அத்துறவி, தன் மரணத்திற்கு முன் எழுதிய மடல், இயேசு, கல்வாரியில், தன் மரணத்திற்குமுன் வழங்கிய மன்னிப்பை, பிரதிபலிப்பதுபோல் அமைந்துள்ளது.

இருபது ஆண்டுகளுக்கம் மேலாக, அல்ஜீரியா நாட்டில் பணியாற்றிய, அருள்பணி கிறிஸ்தியான் அவர்களும், அவரது துறவு இல்லத்தில் வாழ்ந்த 6 துறவிகளும், இஸ்லாமியத் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு, கொல்லப்பட்டனர். அல்ஜீரியாவில் பணியாற்றுவதற்கு கிறிஸ்தியான் அவர்கள் முடிவுசெய்தபோது, இஸ்லாமிய மதத்தையும், குர்ஆனையும் ஆழமாகப் படித்துத் தேர்ந்தார். இஸ்லாமிய மதத்தின் மீது பெரும் மதிப்பு கொண்டிருந்தார். இஸ்லாமியத் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட அருள்பணி கிறிஸ்தியான் அவர்களும், இன்னும் 18 பேரும், 2018ம் ஆண்டு, டிசம்பர் 8ம் தேதி அருளாளர்களாக உயர்த்தப்பட்டனர்.

தீவிரவாதிகள் பிடியில் சிக்கியிருந்தபோது, அருளாளர் கிறிஸ்தியான் அவர்கள், எழுதிய ஒரு மடல், உலகில் நிலவும் வன்முறைகளைப் புரிந்துகொள்ளவும், அவற்றிற்கு நம் பதிலிறுப்பு எவ்விதம் அமையவேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ளவும் உதவியாக இருக்கும். இதோ, அருளாளர் கிறிஸ்தியான் அவர்கள், எழுதிவைத்த இறுதி சாசனம்:

எந்நேரமும் எனக்கு மரணம் வரலாம். தீவிரவாதத்தின் பலிகடாவாக நான் மாறும்போது, என் துறவுக் குடும்பம், என் உறவினர் அனைவரும் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன். என் வாழ்வு, இறைவனுக்கும், இந்நாட்டுக்கும் முற்றிலும் வழங்கப்பட்டது என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். என்னைப் போலவே, கொடூரமான மரணங்களைச் சந்தித்து, மறக்கப்பட்ட பலரை நினைவில் கொள்ளுங்கள்.

என் மரணம் நெருங்கிவரும் வேளையில், என்னை மன்னிக்கவேண்டும் என்று இறைவனிடம் வேண்டுவதற்கு எனக்கு நேரம் கிடைக்கவேண்டும். அதேவண்ணம், என்னைக் கொல்பவர்களுக்கு மன்னிப்பு வேண்டவும் எனக்கு வாய்ப்பு கிடைக்கவேண்டும். என் கொலைக்குக் காரணம் இவர்களே என்று, கண்மூடித்தனமாக, இவர்கள்மீது குற்றம் சாட்டப்பட்டால், அது, எனக்கு மகிழ்வளிக்காது. பொதுப்படையாக எழும் இவ்விதக் குற்றச்சாட்டுகளால், அல்ஜீரிய மக்களையும், இஸ்லாமியரையும் சந்தேகத்தோடு, மரியாதையின்றி பார்க்கக்கூடிய சூழல் உருவாகும்.

இறைவன் விரும்பினால், என் இறுதி நேரத்தில் நான் செய்ய விழைவது இதுதான். தந்தையாம் இறைவன், இஸ்லாமியர் அனைவரையும், தன் அன்புக் குழந்தைகளாகப் பார்ப்பதுபோல், நானும் அவர்களைப் பார்க்கும் வரம் வேண்டுகிறேன். என் இறுதி நேரத்தை நிர்ணயிக்கும் அந்த ஒருவருக்கு நான் நன்றி சொல்கிறேன். இறைவனின் சாயலை உம்மில் காண்கிறேன். இறைவனுக்கு விருப்பமானால், நாம் இருவரும், 'நல்ல கள்வர்களைப்' போல், விண்ணகத்தில் சந்திப்போம். ஆமென்.

"நாம் இருவரும், 'நல்ல கள்வர்களைப்' போல், விண்ணகத்தில் சந்திப்போம்" என்று அருளாளர் கிறிஸ்தியான் அவர்கள் கூறியிருப்பது, நம் நினைவுகளில், கல்வாரிக் காட்சியைக் கொணர்கிறது. அங்கு, இயேசு 'நல்ல கள்வனை' தன்னுடன் விண்ணகத்திற்கு வருமாறு அழைத்தார். அதே அழைப்பை அவர் மற்றொரு கள்வனுக்கும் விடுத்திருப்பார். அவ்விரு கள்வர்களை மட்டுமல்லாமல், சிலுவையைச் சுற்றி நின்று, தாங்கள் இழைத்த கொடுமைகளை இரசித்துக் கொண்டிருந்த அனைவரையும் விண்ணகத்திற்கு தன்னுடன் அழைத்துச்செல்ல இயேசு விழைந்திருப்பார். அந்த ஆசையே, "தந்தையே இவர்களை மன்னியும்" என்ற வேண்டுதலாக இயேசுவிடமிருந்து எழுந்தது என்பதை நாம் உறுதியாக நம்பலாம்.

ஒரு கற்பனைக் காட்சியைக் காண முயல்வோம். நாம் விண்ணகத்தை அடையும்போது, அங்கு, பிலாத்து, ஏரோது, தலைமைக்குருக்கள், பரிசேயர்கள், உரோமைய வீரர்கள், யூதாஸ்... என்று, அனைவரையும் நாம் சந்தித்தால், நம் மனநிலை எவ்வாறு இருக்கும்? அதிர்ச்சியில் உறைந்து போவோமா? அல்லது, மகிழ்வில் நிறைவோமா?

நமது கற்பனை உண்மையாகவேண்டும் என்பதை உறுதிசெய்வதே, உண்மையான கிறிஸ்தவ மன்னிப்பின் வலிமை. அதுவே, இறைவனின் நிபந்தனையற்ற அன்புக்கும், இரக்கத்திற்கும் சாட்சி. வெறுப்பைத் தூண்டிவிடும் ISIS போன்ற மதத் தீவிரவாதிகளுக்கு நாம் வழங்கக்கூடிய பதில் இதுதான்: "நாம் இருவரும், 'நல்ல கள்வர்களைப்' போல், விண்ணகத்தில் சந்திப்போம்"

அருளாளர் கிறிஸ்தியான் அவர்கள் எழுதியுள்ள இம்மடல், காயங்களைத் திறப்பதற்குப் பதில், அந்தக் காயங்களிலேயே மீட்பைக் காண்பதற்கு அழைப்பு விடுக்கிறது. அத்தகைய ஓர் அழைப்பை இயேசு அன்று தோமாவுக்கும், ஏனைய சீடர்களுக்கும் விடுத்தார். கல்வாரியில் காயப்பட்டது போதாதென்று, சீடர்களின் சந்தேகத்தாலும், நம்பிக்கையிழந்த நிலையாலும், இயேசு, மீண்டும் காயப்படுகிறார். இருப்பினும், அந்தக் காயங்களைத் தொடுவதற்கு தன் சீடர்களை அன்று அழைத்ததுபோல், இன்று, நம்மையும் அழைக்கிறார். காயங்களைத் தொடுவது, மீண்டும் வலியை உருவாக்கும். ஆனால், அன்புடன், நம்பிக்கையுடன் தொடும்போது, காயங்கள் குணமாவதற்கும் வழிபிறக்கும். இதுதான், அன்று, இயேசுவுக்கும், தோமாவுக்கும் இடையே நிகழ்ந்த அந்த உன்னத நிகழ்வு.

தன் காயங்களைத் தொடுவதற்கு இயேசு விடுத்த அழைப்பை ஏற்று, தோமா, இயேசுவைத் தொட்டாரா என்பதை நற்செய்தி தெளிவாகச் சொல்லவில்லை. தன் விரலால், தோமா, இயேசுவைத் தொட்டிருக்கலாம், தொடாமல் போயிருக்கலாம். ஆனால், இந்த அழைப்பின் வழியே, தோமாவின் மனதை, இயேசு, மிக ஆழமாகத் தொட்டார். எனவே அந்த மிக ஆழமான மறையுண்மையை, தோமா கூறினார். "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!" (யோவான் 21: 28) இயேசுவை, ‘கடவுள்’ என்று அறிக்கையிட்ட முதல் மனிதப்பிறவி, தோமாதான்.

காயப்பட்ட கடவுளைத் தொடுவதற்கு நம்மை அழைக்கும் இறை இரக்கத்தின் ஞாயிறன்று, காயப்பட்டிருக்கும் இலங்கை மக்களை இறைவனின் பாதங்களில் சமர்ப்பிப்போம். மதியற்ற இந்த வன்முறையில் மரணமடைந்தோர், இறைவனின் நிறையமைதியில் இணைய வேண்டும் என்றும், உறவுகளை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு இறைவன் ஆறுதல் அளிக்க வேண்டும் என்றும், காயமடைந்தோர் நலமடையவேண்டும் என்றும் செபிப்போம்.

பல ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் இலங்கை மக்களை, அமைதியான, வளமான, நலமான வாழ்வை நோக்கி இரக்கம் நிறைந்த இறைவன் அழைத்துச் செல்லவேண்டும் என்று உருக்கமாக மன்றாடுவோம்.

உயிர்த்த இறைவனின் தழும்புகளைத் தொட்டுணர அழைக்கும் இந்த இறை இரக்கத்தை, நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் உணர, குறிப்பாக, காயப்பட்டிருக்கும் இலங்கை மக்கள் உணர, ‘சந்தேகத் தோமா’ என்றழைக்கப்படும் புனித தோமையாரின் பரிந்துரையோடு வேண்டுவோம்.

27 April 2019, 14:26