தேடுதல்

Vatican News
50ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வெரித்தாஸ் வானொலி, ஆசியா 50ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வெரித்தாஸ் வானொலி, ஆசியா  

வெரித்தாஸ் வானொலியின் 50ம் ஆண்டு கொண்டாட்டங்கள்

ஜெர்மன் நாட்டு கத்தோலிக்கர்களின் நிதி உதவியோடு, Quezon நகரில் கட்டப்பட்ட கத்தோலிக்க வெரித்தாஸ் வானொலி நிலையம், 1969ம் ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி திறந்து வைக்கப்பட்டது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கத்தோலிக்கத் திருஅவையால் உருவாக்கப்பட்ட வெரித்தாஸ் வானொலி ஏப்ரல் 10ம் தேதி முதல் 21ம் தேதி, உயிர்ப்புப் பெருவிழா முடிய தன் 50ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.

வெரித்தாஸ் வானொலியின் 50ம் ஆண்டு விழா

FABC எனப்படும் ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள், மற்றும் ஏனைய திருஅவை அதிகாரிகள் கலந்துகொள்ளும் இந்த கொண்டாட்டங்கள், பிலிப்பீன்ஸ் நாட்டின் மணிலாவில் ஏப்ரல் 10, இப்புதனன்று துவங்கியது.

50 ஆண்டுகளுக்கு முன், வெரித்தாஸ் கத்தோலிக்க வானொலி குறித்த எண்ணங்கள், கருவாக தோன்றிய புனித தோமா பாப்பிறைப் பல்கலைக் கழகத்தில், FABC ஏற்பாடு செய்துள்ள ஒரு சமூக ஊடகக் கூட்டத்துடன் இந்த கொண்டாட்டங்கள் துவங்கின.

ஏப்ரல் 11, இவ்வியாழனன்று, Quezon நகரில் இயங்கிவரும் வெரித்தாஸ் வானொலி பதிவரங்கத்தில், திறந்து வைக்கப்படுவதுடன், இந்த வானொலிக்கு பல்வேறு வழிகளில் உறுதுணையாக இருந்த 50 பேர் கவுரவிக்கப்படுகின்றனர்.

இவ்வியாழனன்று நடைபெறும் இவ்விழாவின் ஓர் அங்கமாக, FABCயின் தலைவரான மியான்மார் கர்தினால் சார்ல்ஸ் போ அவர்களும், ஜெர்மனியின் Freiburg உயர் மறைமாவட்ட பேராயர் Stephan Burger அவர்களும் திருப்பலி நிறைவேற்றுகின்றனர்.

ஏப்ரல் 21, உயிர்ப்பு ஞாயிறன்று, வெரித்தாஸ் வானொலியின் 50ம் ஆண்டு நிறைவு விழாவின் இறுதியில் நிகழும் நன்றியதல் திருப்பலியை, பிலிப்பீன்ஸ் நாட்டின் திருப்பீடத் தூதர், Gabriele Giordano Caccia அவர்கள் தலைமையேற்று நடத்த, மணிலா பேராயர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் மறையுரை வழங்குவார்.

வெரித்தாஸ் வானொலியின் வரலாறு

1958ம் ஆண்டு, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா கண்டங்களிலிருந்து 100க்கும் அதிகமான ஆயர்கள் பிலிப்பீன்ஸ் நாட்டின் புனித தோமா பாப்பிறைப் பல்கலைக் கழகத்தில் கூடிய வேளையில், கத்தோலிக்க திருஅவையால் இயக்கப்படும் ஒரு வானொலி குறித்த கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

ஜெர்மன் நாட்டு கத்தோலிக்கர்களின் நிதி உதவியோடு, Quezon நகரில் கட்டப்பட்ட கத்தோலிக்க வெரித்தாஸ் வானொலி நிலையம், 1969ம் ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி, வத்திக்கான் பிரதிநிதியான கர்தினால் அந்தோனியோ சமோரே (Antonio Samore) அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

1970ம் ஆண்டு, புனிதத் திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், பிலிப்பீன்ஸ் நாட்டுக்கு பயணம் மேற்கொண்ட வேளையில், நவம்பர் 29ம் தேதி, வெரித்தாஸ் வானொலி நிலையத்திற்குச் சென்றபோது, "இந்த வானொலி, கிறிஸ்துவின் படிப்பினைகளை மக்கள் மனங்களில் எதிரொலிக்கச் செய்கிறது" என்று கூறினார்.

1981ம் ஆண்டு, புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், இந்த வானொலி நிலையத்திற்குச் சென்ற வேளையில், "ஆசிய கிறிஸ்தவத்தின் குரலொலியாக" இந்த வானொலி விளங்குகிறது என்று கூறினார்.

10 April 2019, 16:30