தேடுதல்

Vatican News
பாகிஸ்தான் கராச்சி பேராலயத்திற்கு முன் விளையாடும் இளையோர் பாகிஸ்தான் கராச்சி பேராலயத்திற்கு முன் விளையாடும் இளையோர்  (AFP or licensors)

2020ம் ஆண்டு - பாகிஸ்தானில் இளையோர் ஆண்டு

நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும், இளையோர், நாட்டில் ஒன்றிப்புக்கும் இணக்க வாழ்வுக்கும் உழைக்க முன்வரவேண்டும் - பேராயர் அர்ஷத்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

2020ம் ஆண்டு, பாகிஸ்தான் நாட்டு தலத்திருஅவையில் இளையோர் ஆண்டாக சிறப்பிக்கப்படும் என அறிவித்துள்ளார் அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் ஜோசப் அர்ஷத்.

வத்திக்கானில் இடம்பெற்ற இளையோர் குறித்த உலக ஆயர் பேரவை முன்வைத்த சவால்களின் துணையுடன், பல்வேறு கலாச்சாரம், இனம் மற்றும் மதங்களைச் சார்ந்த இளையோருடன் இணைந்து, கத்தோலிக்க இளையோர், அமைதி, நட்பு, மற்றும் ஒன்றிப்பின் நற்செய்தியை பரப்பமுடியும் என்ற நோக்கத்தில் வரும் ஆண்டை சிறப்பிக்க உள்ளதாகக் கூறினார் பேராயர் அர்ஷத்.

நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும், மற்றும், மாற்றங்களைக் கொணரும் இளையோர், நாட்டில் ஒன்றிப்புக்கும் இணக்க வாழ்வுக்கும் உழைக்க அழைப்பு விடப்படுகின்றனர் என்று கூறிய பேராயர் அர்ஷத் அவர்கள், இளையோரின் வாழ்வில் கல்வி என்பது முக்கிய இடம் வகிக்கவேண்டும் என்பது இச்சிறப்பு ஆண்டில் வலியுறுத்தப்படும் என்றார்.

சமுதாயத்தில் அமைதியைக் கொணரவும், அநீதியையும் இலஞ்ச ஊழலையும் எதிர்த்துப் போராடவும், கல்வியின் உதவி இன்றியமையாதது என்பதை வலியுறுத்தியும், அனைத்து மதத்தினரும் அமைதியில் ஒன்றிணைந்து வாழமுடியும் என்பதை அனைவருக்கும் எடுத்துக்காட்டும் விதமாகவும் இளையோருக்கு பயிற்சி வழங்கப்படும்  எனவும் மேலும் கூறினார், இஸ்லாமாபாத் பேராயர் அர்ஷத்.

02 April 2019, 16:15