தேடுதல்

Vatican News
அன்னை தெரேசா அன்னை தெரேசா 

வட மாசிதோனியப் பயணம் குறித்து Skopje ஆயர்

விளிம்புகளில் வாழும் நாடுகளைத் தேடிச்செல்வது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தனித்துவமான அடையாளமாக உள்ளது - Skopje ஆயர் Kiro Stojanov

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கிறிஸ்தவ மறை தோன்றிய காலம் முதல், மாசிதோனியாவின் பெயர் இவ்வரலாற்றில் இடம்பெற்றுள்ளது என்றும், இந்நாட்டின் வழியே, ஐரோப்பாவுக்கு கிறிஸ்தவ மதம் கொண்டுசெல்லப்பட்டது என்றும், Skopje ஆயர் Kiro Stojanov அவர்கள் கூறியுள்ளார்.

இவ்வாண்டு மே மாதம் 7ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வட மாசிதோனியாவுக்கு திருத்தூதுப் பயணம் மேற்கொள்வதையொட்டி, அந்நாட்டின் கத்தோலிக்க இணையதள செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.

"நீர் மாசிதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவி செய்யும்" என்று மாசிதோனியர் ஒருவர், புனித பவுலின் கனவில் தோன்றி (தி.ப. 16:9) கூறியதாக நாம் திருத்தூதர் பணிகள் நூலில் வாசிக்கிறோம் என்று தன் பேட்டியில் சுட்டிக்காட்டிய ஆயர் Stojanov அவர்கள், இத்திருஅவை என்ற தோட்டத்தில் இறுதியாகப் பூத்த மலர், புனித அன்னை தெரேசா என்று எடுத்துரைத்தார்.

வத்திக்கானில் வாழும் திருத்தந்தையர், கடந்த நூற்றாண்டிலிருந்து உலகின் பல நாடுகளுக்கு திருத்தூதுப் பயணங்கள் மேற்கொண்டு வருகின்றனர் என்பதைச் சிறப்பாகக் குறிப்பிட்டு பேசிய ஆயர் Stojanov அவர்கள், விளிம்புகளில் வாழும் நாடுகளைத் தேடிச் செல்வது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தனித்துவமான அடையாளமாக உள்ளது என்பதையும் தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

வட மாசிதோனிய அரசுத்தலைவரும் தானும் விடுத்த அழைப்பை ஏற்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ரொமேனியா, பல்கேரியா நாடுகளில் மேற்கொள்ளும் பயணங்களின் ஒரு பகுதியாக தங்கள் நாட்டுக்கு வருவது பெரும் மகிழ்வைத் தருகிறது என்று ஆயர் Stojanov அவர்கள், கூறினார்.

இப்பயணம் குறித்து பல்வேறு வகையில் தயாரிப்புக்கள் நிகழ்ந்தாலும், அனைத்திற்கும் மேலாக, ஆன்மீக தயாரிப்புக்கள் இப்பயணத்தில் முதலிடம் பெறுகின்றன என்பதை, ஆயர் Stojanov அவர்கள், தன் பெட்டியில் வலியுறுத்திக் கூறினார்.

"சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்சவேண்டாம்" என்ற விருதுவாக்கு, இப்பயணத்தைக் குறித்து மிகுந்த நம்பிக்கையும் ஆறுதலும் வழங்குகிறது என்று கூறிய ஆயர் Stojanov அவர்கள், இப்பயணத்திற்கென உருவாக்கப்பட்டுள்ள இலச்சினையில், நாட்டுக் கொடி, திருத்தந்தையின் ஆசீர் வழங்கும் உருவம், மற்றும் அன்னை தெரேசாவின் துறவு சபையின் அடையாளமாக இருக்கும் நீல நிறக் கோடுகள் வரையப்பட்டுள்ளன என்று விளக்கிக் கூறினார்.

24 April 2019, 15:20