தேடுதல்

Vatican News
இலங்கை தாக்குதல்களில் இறந்தோர், காயமடைந்தோர், மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக நியூஸிலாந்தில் பிரார்த்தனை இலங்கை தாக்குதல்களில் இறந்தோர், காயமடைந்தோர், மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக நியூஸிலாந்தில் பிரார்த்தனை  (AFP or licensors)

இறை இரக்க ஞாயிறில் இலங்கை மக்களுக்காக சிறப்பு செபம்

இறை இரக்க ஞாயிறன்று நிறைவேற்றப்படும் திருப்பலிகளுடன், மெழுகு திரிகள் ஏந்திய பவனிகளையும், திரு நற்கருணை ஆராதனைகளையும் இலங்கை மக்களுக்காக மேற்கொள்ளுமாறு இந்தியத் திருஅவை வேண்டுகோள்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஏப்ரல் 28, வருகிற ஞாயிறன்று, இந்தியாவில் உள்ள அனைத்து, இலத்தீன் வழிபாட்டு முறை கத்தோலிக்க ஆலயங்களிலும், இலங்கை மக்களுக்காக சிறப்பான செபங்களை மேற்கொள்ளுமாறு, இலத்தீன் வழிபாட்டு முறை இந்திய ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் Felipe Neri Ferrao அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

கோவா மற்றும் டாமன் உயர் மறைமாவட்டத்தின் பேராயர், Ferrao அவர்கள், இந்த விண்ணப்பத்தை, அனைத்து இலத்தீன் வழிபாட்டு முறை மறைமாவட்டங்களுக்கும், துறவியர் இல்லங்களுக்கும், இப்புதனன்று அனுப்பியுள்ளார்.

இறை இரக்கத்தின் ஞாயிறென சிறப்பிக்கப்படும் ஏப்ரல் 28ம் தேதி வழிபாட்டில், இலங்கை தாக்குதல்களில் இறந்தோர், காயமடைந்தோர், மற்றும் அவர்களது குடும்பத்தினரை, இறைவனின் இரக்கத்தில் ஒப்படைத்து செபிக்குமாறு பேராயர் Ferrao அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

இஞ்ஞாயிறன்று நிறைவேற்றப்படும் திருப்பலிகளுடன், மெழுகு திரிகள் ஏந்திய பவனிகளையும், திரு நற்கருணை ஆராதனைகளையும் மேற்கொள்ளுமாறு, பேராயர் Ferrao அவர்கள் தன் மடலில் பரிந்துரைத்துள்ளார்.

ஏப்ரல் 21, உயிர்ப்பு ஞாயிறன்று இலங்கையில் நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்களில், இதுவரை, 359 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், மேலும் 500க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்றும் ஊடகங்கள் கூறியுள்ளன.

25 April 2019, 14:57