தேடுதல்

Vatican News
தீ விபத்துக்கு உள்ளான பேராலயத்தை பார்வையிடச் சென்ற பிரான்ஸ் அரசியல் தலைவர்கள் தீ விபத்துக்கு உள்ளான பேராலயத்தை பார்வையிடச் சென்ற பிரான்ஸ் அரசியல் தலைவர்கள்  (ANSA)

நோத்ரு தாம் பேராலய தீ விபத்து – உலகத் தலைவர்கள் செய்தி

அழகு மிகுந்த நோத்ரு தாம் பேராலயம், பல கோடி மக்கள் கிறிஸ்துவைச் சந்திக்க உதவி செய்த ஒரு திருத்தலம் - கான்டர்பரி ஆங்கிலிக்கன் பேராயர் ஜஸ்டின் வெல்பி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஐரோப்பிய கிறிஸ்தவர்களின் நம்பிக்கைக்கு ஒரு மையமாக திகழும் நோத்ரு தாம் பேராலயம் தீக்கிரையானது உலகெங்கும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கி வருகின்றது என்று, இங்கிலாந்து கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ் அவர்கள் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

பாரிஸ் மாநகருக்கும், இன்னும் சொல்லப்போனால், கிறிஸ்தவ உலகிற்கும் இதயமாக விளங்கும் நோத்ரு தாம் பேராலயத்தை மீண்டும் கட்டியெழுப்ப அனைவரும் தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் வழங்க முன்வரவேண்டும் என்று, வியன்னா கர்தினால் கிறிஸ்டோப் ஷோன்போர்ன் அவர்கள் தன் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார்.

அழகு மிகுந்த நோத்ரு தாம் பேராலயம், பல கோடி மக்கள் கிறிஸ்துவைச் சந்திக்க உதவி செய்த ஒரு திருத்தலம் என்று தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள, கான்டர்பரி ஆங்கிலிக்கன் பேராயர் ஜஸ்டின் வெல்பி அவர்கள், தீயுடன் போராடிய பல தீயணைப்பு வீரர்களுக்காக நாம் செபிப்போம் என்று கூறியுள்ளார்.

பாரிஸ் உயர் மறைமாவட்டப் பேராயர், Michel Aupetit அவர்களுக்கு, தன் வருத்தங்களை வெளியிட்டு செய்தி அனுப்பியுள்ள இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை கிரில் அவர்கள், பாரம்பரியச் சின்னமாக விளங்கிய நொத்ரு தாம் பேராலயம், தன் பெருமை அனைத்தையும் பெறுவதற்கு, அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படவேண்டுமென தான் வாழ்த்துவதாகக் கூறியுள்ளார்.

அல்-அசார் இஸ்லாமியத் தலைவர், Ahmad Muhammad al-Tayyib அவர்கள் வெளியிட்ட ஒரு டுவிட்டர் செய்தியில், "வரலாற்றுச் சிறப்பும், கட்டடக்கலையின் உன்னத சின்னமுமாக விளங்கிய நோத்ரு தாம் பேராலயம், தீயினால் சிதைந்துள்ளது, பெரும் வேதனையை அளிக்கிறது. பிரான்ஸ் மக்களுக்கு நம் முழு அனுதாபங்களும் ஆதரவும் உண்டு" என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே, இத்தாலி, பெரு, ஹங்கேரி உட்பட, உலகின் பல்வேறு ஆயர் பேரவைகளிலிருந்தும், புனித பூமியிலிருந்தும், நிலநடுக்கத்தால் சிதைந்து, மீண்டும் கட்டப்பட்ட அசிசி நகர் புனித பிரான்சிஸ் திருத்தலத்திலிருந்தும், நோத்ரு தாம் உயர் மறைமாவட்டத்திற்கு, அனுதாபச் செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன. 

மேலும், நோத்ரு தாம் தீ விபத்தையொட்டி, இத்தாலிய அரசுத்தலைவர் செர்ஜியோ மத்தரெல்லா அவர்கள், பிரெஞ்சு அரசுத்தலைவர், மக்ரோன் அவர்களுக்கு அனுப்பிய செய்தியில், பல நூற்றாண்டுகளாக, பிரான்ஸ் நாடு பாதுகாத்து வந்த இந்தக் கருவூலம், ஐரோப்பாவிற்கும், உலகிற்கும் ஒரு கலைக் கருவூலமாகத் திகழ்ந்துவருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

17 April 2019, 15:48