தேடுதல்

Vatican News
இலங்கையில் தாக்குதலுக்கு உள்ளான புனித அந்தோனியார் ஆலயத்திற்கு இராணுவப் பாதுகாப்பு இலங்கையில் தாக்குதலுக்கு உள்ளான புனித அந்தோனியார் ஆலயத்திற்கு இராணுவப் பாதுகாப்பு  (AFP or licensors)

இலங்கையில் ஞாயிறு திருப்பலிகள் நிறுத்தப்பட்டுள்ளன

இலங்கையில், ஏப்ரல் 21, உயிர்ப்புப் பெருவிழாவன்று நடத்தப்பட்ட பயங்கரவாதக் குண்டுவெடிப்புக்குப்பின், புதிய தாக்குதல்கள் இடம்பெறக்கூடும் என்ற அச்சத்தில், ஞாயிறு திருப்பலிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

இலங்கையில் குண்டுவெடிப்புகள் மேலும் இடம்பெறக்கூடும் என்ற எச்சரிக்கை செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கும்வேளை, நாட்டின் அனைத்து கத்தோலிக்க ஆலயங்களிலும் ஞாயிறு திருப்பலிகளை நிறைவேற்ற வேண்டாமென்றும், விசுவாசிகள் வீடுகளிலே இருக்குமாறும், இலங்கை தலத்திருஅவை தலைவர், கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

வழிபாட்டுத்தலங்கள் மற்றும் விசுவாசிகளுக்கு முழு பாதுகாப்புக்கு உறுதியளிக்கப்படும் வரை, பொது இடங்களில் திருப்பலி நிறைவேற்ற வேண்டாமென, அருள்பணியாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார், கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித்.

மேலும், ஏப்ரல் 27, இச்சனிக்கிழமை காலையில் தன்னைச் சந்தித்து அனுதாபம் தெரிவிக்க வந்திருந்த, இஸ்லாமிய நாடுகளின் அரசியல் தூதர்கள் கழகத்தினரிடம், இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவன்று நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு, இலங்கை இஸ்லாமிய சமுதாயம், எந்த வகையிலும் பொறுப்பில்லை என்று தெரிவித்தார்.

இந்த தகவலை வெளியிட்டுள்ள ஆசியச் செய்தி ஊடகம், இலங்கையில் இடம்பெற்றுள்ள பயங்கரவாத தாக்குதல்கள், அரசியலோ, மதமோ சார்ந்தது அல்ல, மாறாக, தவறாக வழிநடத்தப்பட்ட சிலரின் செயல்களாகும் என, கர்தினால் இரஞ்சித் அவர்கள் தெரிவித்ததாகக் கூறியுள்ளது.

முஸ்லிம் உலகினரின் ஒருமைப்பாட்டுணர்வையும், ஆதரவையும் கத்தோலிக்கருக்குத் தெரிவிக்க வந்திருந்த அந்த கழகத்தினருக்கு நன்றி தெரிவித்த கர்தினால் இரஞ்சித் அவர்கள், இந்த பயங்கரவாதத்தை நடத்தியவர்களின் பின்னால், பிற சக்திகள் இருக்கக் கூடும், ஆயினும், அவர்கள், இஸ்லாத்தோடு எவ்விதத் தொடர்பும் இல்லாதவர்கள் என்றும் கூறியுள்ளார். (AsiaNews)

இதற்கிடையே, இலங்கையில் தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு வாரம் ஆன நிலையிலும் இன்னும் பல இடங்களில் வெடி குண்டுகள், வெடி பொருள்கள் போன்றவை கைப்பற்றப்பட்டு வருகின்றன. இலங்கை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரவு எட்டு மணி முதல் காலை நான்கு மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

27 April 2019, 16:10