தேடுதல்

அடக்கச் சடங்கை நிறைவேற்றும் கர்தினால் இரஞ்சித் அவர்கள் அடக்கச் சடங்கை நிறைவேற்றும் கர்தினால் இரஞ்சித் அவர்கள் 

புனித செபஸ்தியார் ஆலய அடக்கச் சடங்கில் கர்தினால் இரஞ்சித்

"உயிரை வழங்கும் இறைவனுக்கு மட்டுமே உயிரை எடுத்துக்கொள்ள உரிமை உண்டு. வெறிமிகுந்த கொள்கைகளை அடைவதற்கு, மக்களைக் கொல்வதை நிறுத்துங்கள்" - கொழும்பு பேராயர், கர்தினால் மால்கம் இரஞ்சித்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

"உயிரை வழங்குவது இறைவன் மட்டுமே. அவருக்கு மட்டுமே உயிரை எடுத்துக்கொள்ள உரிமை உண்டு. அப்பாவி மக்களைக் கொல்வதால் என்ன பயனை பெறமுடியும்? வெறிமிகுந்த கொள்கைகளை அடைவதற்கு, மக்களைக் கொல்வதை நிறுத்துங்கள்" என்று கொழும்பு பேராயர், கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள், ஏப்ரல் 23, இச்செவ்வாயன்று நிறைவேற்றிய அடக்கச் சடங்கில் கூறினார்.

இலங்கையின் நீர்கொழும்புவில் அமைந்துள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தில், உயிர்ப்பு ஞாயிறு காலை நடைபெற்ற குண்டுவெடிப்பில் இறந்தவர்களில் 15 பேரின் அடக்கச் சடங்கை, ஏப்ரல் 23, இச்செவ்வாயன்று நிறைவேற்றிய கர்தினால் இரஞ்சித் அவர்கள், இந்தக் கொடுமைக்குக் காரணமானவர்களின் மனசாட்சி அவர்களுக்கு உண்மையைக் கூறியிருக்கும் என்று கூறினார்.

நீர்கொழும்புவின் கட்டுவபிட்டியா புனித செபஸ்தியார் ஆலயத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 102 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், இவர்களில் 86 பேரின் அடையாளம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், இவ்வாலயத்தின் பங்கு அருள்பணியாளர், சிரிலால் பொன்சேக்கா அவர்கள் கூறியுள்ளார்.

இறந்தவர்களில், 15 பேரின் பொதுவான அடக்கம், பெரும் பாதுகாப்புடன் நடைபெற்ற வேளையில், இந்த அடக்கச்சடங்கை தலைமையேற்று நடத்திய கர்தினால் இரஞ்சித் அவர்கள், இந்தத் தாக்குதல்களில் உயிரிழந்தோர் மறைசாட்சிகள் என்று தான் நம்புவதாகக் கூறினார்.

இறந்தோரின் அடக்க ஏற்பாடுகள் குறித்துப் பேச, ஏப்ரல் 22, இத்திங்களன்று, புனித செபஸ்தியார் ஆலய பங்குத்தந்தை பொன்சேக்கா அவர்கள் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில், கொழும்பு துணை ஆயர் அன்டன் ஜெயக்கொடி, அமைச்சர் சஜித் பிரமதாஸா, இலங்கை இயேசு சபை மாநிலத் தலைவர், டெக்ஸ்டர் கிரே, மற்றும் காவல் துறை அதிகாரிகள் பங்கேற்றனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 April 2019, 15:17