தேடுதல்

Vatican News
லாகூர் பேராயர் செபஸ்டியான் பிரான்சிஸ் ஷா லாகூர் பேராயர் செபஸ்டியான் பிரான்சிஸ் ஷா 

தவக்காலத்தில் ஸ்மார்ட் தொலைபேசிகள் நோன்பு

கத்தோலிக்கர் ஆலயத்திற்கு வரும்போது, சட்டைப் பைகளில் ஸ்மார்ட் தொலைபேசிகளை வைத்திருப்பது, சோதிக்கும் சாத்தானை அங்கு வைத்திருப்பதாகும் - பேராயர் ஷா.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவுக்குத் தயாரிக்கப்படும் தவக்காலத்தில், ஸ்மார்ட் தொலைபேசிகள் பயன்படுத்துவது குறைக்கப்படுமாறு, பாகிஸ்தான் பேராயர் ஒருவர், கத்தோலிக்கரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

பாகிஸ்தானின் லாகூர் பேராயர் செபஸ்டியான் பிரான்சிஸ் ஷா அவர்கள், லாகூர் இயேசுவின் திருஇதயப் பேராலயத்தில் கத்தோலிக்கருக்கு ஆற்றிய உரையில், தவக்காலத்தில் ஞாயிறு திருப்பலிகளிலும், சிலுவைப்பாதை பக்தி முயற்சிகளிலும் பங்குகொள்கையில், கவனச்சிதைவைத் தவிர்ப்பதற்காக, ஒரு மணி நேரம் ஸ்மார்ட் தொலைபேசிகள் பயன்படுத்துவதைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

உலகின் ஏனைய இடங்களைப் போலவே, பாகிஸ்தானிலும் இளையோர் ஸ்மார்ட் தொலைபேசிகளுக்கு அடிமையாகியுள்ளனர் என்றுரைத்த பேராயர் ஷா அவர்கள், போதைப்பொருள் போன்று, ஸ்மார்ட் தொலைபேசிகளுக்கு அடிமைகளாய் இருப்பதற்கெதிராய் எச்சரித்தார்.

பாகிஸ்தானில் இளையோர் செபித்துக்கொண்டிருக்கும்போதுகூட தொடர்ந்து செய்திகளை அனுப்புவது கவலை தருகின்றது என்றுரைத்த பேராயர் ஷா அவர்கள், இளையோர் இந்த தவக்காலத்தில் தங்கள் வாழ்வைப் பரிசோதித்து, இந்தச் சோதனையில் விழாமல் இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

பாகிஸ்தானில் குறைந்தது 15 கோடியே 54 இலட்சம் ஸ்மார்ட் தொலைபேசிகள் பயன்படுத்தப்படுகின்றன. அதேநேரம் நாட்டில் 63 விழுக்காட்டினருக்கு இணையதளம் பற்றிய அறிவே இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. (AsiaNews)

12 March 2019, 15:30