தேடுதல்

Vatican News
பிலிப்பீன்ஸ் நாட்டில் குண்டுவெடிப்பில் பலியானவர் பிலிப்பீன்ஸ் நாட்டில் குண்டுவெடிப்பில் பலியானவர்  (AFP or licensors)

வழிபாட்டு நிகழ்வுகளுக்கு குறிக்கப்பட்டுள்ள தொகைகள் இரத்து

வழிபாட்டு நிகழ்வுகளுக்கு, குறிப்பிட்ட தொகையை வசூலிக்கும் முறையை இரத்து செய்ய, பிலிப்பீன்ஸ் நாட்டு ஆயர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருமணம், உறுதிப்பூசுதல், அடக்கம் ஆகியவற்றை நிறைவேற்றும் வழிபாட்டு நிகழ்வுகளுக்கு, குறிப்பிட்ட தொகையை வசூலிக்கும் முறையை மாற்ற, பிலிப்பீன்ஸ் நாட்டு ஆயர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று அந்நாட்டு ஆயர் பேரவையின் அறிக்கை ஒன்று கூறுகிறது.

பிலிப்பீன்ஸ் நாட்டின் பலாங்கா மறைமாவட்ட ஆயர் ரூபெர்த்தோ சாந்தோஸ் அவர்கள் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், இவ்வாண்டு, ஏப்ரல் 21ம் தேதி, உயிர்ப்புத் திருநாள் துவங்கி, பலாங்கா மறைமாவட்டத்தில் திருப்பலி மற்றும் வழிபாட்டு நிகழ்வுகளுக்கு குறிக்கப்பட்டுள்ள தொகைகள் இரத்து செய்யப்படுவதாகக் கூறியுள்ளார்.

தங்கள் உறவுகளை இழந்து ஏற்கனவே துயரத்தில் ஆழ்ந்துள்ள மக்களிடம், அடக்கத் திருப்பலிக்கு குறிப்பிட்டத் தொகைகளைத் தரும்படி வற்புறுத்துவது சரியல்ல என்று, ஆயர் சாந்தோஸ் அவர்கள் கூறியுள்ளார்.

திருப்பலி மற்றும் வழிபாட்டு நிகழ்வுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகைகளை, 2015ம் ஆண்டு முதல் நிறுத்தியவர், லிங்காயென்-தாகுபான் உயர் மறைமாவட்ட பேராயர் சாக்ரடீஸ் வியேகாஸ் என்று, ஆசிய செய்தி கூறியுள்ளது.

பிலிப்பீன்ஸ் நாட்டில் கிறிஸ்தவம் அறிமுகப்படுத்தப்பட்டதன் 500ம் ஆண்டு, 2021ம் ஆண்டு சிறப்பிக்கப்படவிருக்கும் வேளையில், அந்நாட்டின் அனைத்து மறைமாவட்டங்களும், தங்கள் வழிபாடுகளுக்கென நிர்ணயிக்கப்பட்ட தொகைகளை இரத்து செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று ஆசிய செய்தி மேலும் கூறியுள்ளது.

திருஅவைக்கும், அருள்பணியாளர்களுக்கும் ஆதரவு தரும் வண்ணம் மக்கள் மனமுவந்து தரும் நன்கொடைகளை பெறுவதே சரியான முறை என்றும், தற்போதைய நிலவரம், அருளடையாளங்களுக்கும், வழிபாட்டிற்கும் விலை குறிப்பதுபோல் அமைந்துள்ளது என்றும், மணிலா உயர் மறைமாவட்ட தொடர்புத் துறை பொறுப்பாளர் அருள்பணி ராய் பெல்லென் அவர்கள் ஆசிய செய்தியிடம் கூறினார்.  (AsiaNews/CBCP)

14 March 2019, 15:59