தேடுதல்

இயேசு தொழுநோயாளரைத் தொட்டு, அவரிடம், “நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!” என்றார். - மாற்கு 1:41 இயேசு தொழுநோயாளரைத் தொட்டு, அவரிடம், “நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!” என்றார். - மாற்கு 1:41 

ஒத்தமை நற்செய்தி புதுமை – தொழுநோயாளரைத் தொட்டு 2

இயேசு வாழ்ந்த காலத்தில், தொழுநோயுற்றோர் சமுதாயத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்களுடன் தொடர்பு கொள்வோரும் தீட்டுப்பட்டவர்களாக மாறுவர் என்று கருதப்பட்டது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

ஒத்தமை நற்செய்தி புதுமை – தொழுநோயாளரைத் தொட்டு - 2

பிப்ரவரி 11, இத்திங்களன்று, லூர்து நகர் அன்னை மரியாவின் திருநாளைக் கொண்டாடினோம். அதே நாளன்று, தாய் திருஅவை, உலக நோயாளர் நாளையும் சிறப்பித்தது. திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்கள், 1992ம் ஆண்டு உருவாக்கிய நாள் - உலக நோயாளர் நாள். பார்கின்சன்ஸ் (Parkinson's) நோயால் தான் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்த திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்கள், பல்வேறு நோய்களால், அதுவும், தீராத நோய்களால் பாதிக்கப்பட்டோருடன் தன்னையே இணைத்துக்கொள்ளவும், நோயுற்றோர் மீது, மனித சமுதாயம், குறிப்பாக, கத்தோலிக்கர்கள், தனி அக்கறை கொள்ளவேண்டும் என்பதை உணர்த்தவும், உலக நோயாளர் நாளை உருவாக்கினார். இவ்வாண்டு, 27வது உலக நோயாளர் நாள், புனித அன்னை தெரேசா பணியாற்றிய கொல்கத்தாவில் கொண்டாடப்பட்டது.

ஒவ்வோர் ஆண்டும், லூர்து நகர் அன்னை மரியாவின் திருநாளன்று, உலக நோயாளர் நாள் கொண்டாடப்படுவது, பொருத்தமாக உள்ளது. பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில் அமைந்துள்ள அத்திருத்தலத்திற்குச் செல்லும் கோடான கோடி நோயாளர்களில், பல்லாயிரம் பேர், அன்னை மரியாவின் பரிந்துரையால் நலமடைந்துள்ளனர் என்பது உலகம் அறிந்த உண்மை. அதிகாரப்பூர்வமாக, 69 புதுமைகளே இத்திருத்தலத்தால் அறிக்கையிடப்பட்டுள்ளன என்றாலும், பல்லாயிரம் திருப்பயணிகள், அன்னையின் பரிந்துரையால், மனதாலும், உடலாலும் குணம் அடைந்திருப்பர் என்பதை அனைவரும் அறிவோம். எனவே, இந்தத் திருநாளை, உலக நோயாளர் நாளாக புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் தேர்ந்ததில் வியப்பு ஏதுமில்லை.

நோயாளருக்கென ஒரு நாளா? என்று நம்மில் பலர் கேள்வி எழுப்பலாம். நோயைக் குறித்து நாம் கொண்டிருக்கும் எதிர்மறையான எண்ணங்களின் விளைவாக, நோயாளரையும் நாம் ஒதுக்கி வைக்கிறோம். நோயாளரைப்பற்றி நாம் கொண்டிருக்கும் எதிர்மறையான எண்ணங்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு, இயேசு, நோயுற்றோர் மீது பரிவுகொண்டு ஆற்றிய புதுமைகளைச் சிந்திப்பது, நமக்கு உதவியாக இருக்கும். ஒத்தமை நற்செய்திகள் மூன்றிலும் பதிவாகியுள்ள பொதுவானப் புதுமைகளில், தொழுநோயாளர் ஒருவரை இயேசு குணமாக்கும் புதுமையில் (மாற்கு 1:40-45) சென்ற வாரம் நம் தேடலைத் துவங்கினோம், இன்று தொடர்கிறோம்.

நம் உடலில் உருவாகும் பல நோய்களில், தோலுக்கு மேல் உருவாகும் நோய்கள், பெரும் சங்கடங்களை உருவாக்குகின்றன. தோலின் மீது நோய் கண்டவர்கள், உடல் அளவில் படும் வேதனைகளைக் காட்டிலும், உள்ளத்தளவில் உணரும் வேதனைகள் அதிகம். இந்நோய்கள் உடையவர்களைக் கண்டு, மக்கள் விலகிச்செல்வது, பெரும் வேதனையாக மாறுகிறது. தோல்மீது தோன்றும் நோய்களிலேயே, தொழுநோய், இன்றளவும், பெரும் பாதிப்புக்களை உருவாக்கி வருகின்றது.

இயேசுவின் காலத்தில், 'தொழுநோய்' என்ற சொல், தோலில் உண்டாகும் பல்வேறு குறைபாடுகளைக் குறிக்க பொதுவான ஒரு சொல்லாக மாறியிருந்தது. இந்நோய்க்கு குணம் கிடையாது, இந்நோய் விரைவில் மற்றவருக்கும் பரவும் என்ற பல்வேறு அச்சங்கள் மக்கள் நடுவே நிலவி வந்ததால், இந்நோய் உள்ளவர்கள், சமுதாயத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டனர். தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், பின்பற்றவேண்டிய விதிமுறைகள், மோசே தந்த சட்டங்களாக, லேவியர் நூலில் காணப்படுகின்றன.

லேவியர் நூல் 13:45-46

தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் கிழிந்த உடை அணிந்து, தலை வாராமல் மேலுதட்டை மறைத்துக்கொண்டு, தீட்டு, தீட்டு, என குரலெழுப்ப வேண்டும். நோயுள்ள நாளெல்லாம் அவர் தீட்டுள்ளவர். எனவே தீட்டுள்ள அவர் பாளையத்துக்கு வெளியே தனியாகக் குடியிருப்பார்.

மேலும், பழைய ஏற்பாட்டின் ஒரு சில நிகழ்வுகளில், இறைவனின் கோபத்திற்கு உள்ளானவர்களுக்கு, அவர், தொழுநோயை, தண்டனையாக வழங்கினார் என்றும் கூறப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, மோசேக்கு எதிராக ஆரோனும், மிரியாமும் பேசியபோது, இறைவனின் கோபம் அவர்கள் மீது திரும்பியது என்று, எண்ணிக்கை நூலில் கூறப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, அங்கு நிகழ்ந்ததை, நாம் இவ்வாறு வாசிக்கிறோம்.

எண்ணிக்கை 12:9-10

மேலும் ஆண்டவரின் சினம் அவர்கள்மேல் மூண்டது; அவர் அகன்று சென்றார். கூடாரத்தின் மேலிருந்து மேகம் அகன்றதும் மிரியாமை பனிபோன்ற வெண்மையான தொழுநோய் பீடித்தது; ஆரோன் மிரியாம் பக்கம் திரும்பவே, அவள் தொழுநோயாளியாயிருக்கக் கண்டார்.

எருசலேமில் 52 ஆண்டுகள் ஆட்சி செய்த மன்னன் அசரியாவின் மீது ஆண்டவரின் கோபம் எழுந்ததால், அவரும் தொழுநோயால் தண்டிக்கப்பட்டார் என்பதை, அரசர்கள் 2ம் நூலில் நாம் காண்கிறோம்:

2 அரசர்கள் 15:3-5

அசரியா, தன் தந்தை அமட்சியா செய்ததுபோலவே, எல்லாவற்றிலும் ஆண்டவர் திருமுன் நேர்மையாக நடந்தான். ஆயினும், அவன் தொழுகை மேடுகளை அழிக்கவில்லை. மக்கள் இன்னும் அம்மேடுகளில் பலியிட்டும் தூபம் காட்டியும் வந்தனர். எனவே, ஆண்டவர் அவ்வரசனைத் தண்டித்து அவன் இறக்குமட்டும் அவனைத் தொழுநோயாளன் ஆக்கினார். அவனும் ஒரு ஒதுக்குப்புறமான வீட்டில் வாழ்ந்து வந்தான்.

விவிலியத்தில் பரிசுத்தம், புனிதம் என்ற வார்த்தைகளும், நலம் அல்லது சுகம் என்ற வார்த்தைகளும் ஒரே அடிப்படை வார்த்தையிலிருந்து வந்தவை. ‘கடோஷ்’ (Kadosh) என்ற எபிரேயச் சொல்லுக்கு, இறைமை, முழுமை என்ற அர்த்தங்கள் உண்டு. எதெல்லாம் முழுமையாக, நலமாக உள்ளனவோ, அவையெல்லாம் பரிசுத்தமானதாக, புனிதமானதாகக் கருதப்பட்டன. இந்த அடிப்படையில், நலம் இழந்தோரை, இறைவனிடமிருந்து பிரிந்தவர்கள், எனவே பாவிகள் என்று தீர்மானித்தனர், யூதர்கள். அதிலும் தொழுநோய், இறைவன் ஒருவருக்கு நேரடியாக வழங்கும் தண்டனை என்ற கருத்து மக்களிடையே மிக ஆழமாகப் பரவியிருந்தது. எனவே, தொழுநோயுற்றோர் சமுதாயத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்களுடன் தொடர்பு கொள்வோரும் தீட்டுப்பட்டவர்களாக மாறுவர் என்று கருதப்பட்டது.

இத்தகைய ஒரு பின்னணியுடன், இன்று நாம் தேடலை மேற்கொண்டுள்ள புதுமையின் அறிமுக வரிகளுக்குச் செவிமடுப்போம்.

மாற்கு நற்செய்தி 1: 40-42

ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, “நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என்று முழந்தாள்படியிட்டு வேண்டினார். இயேசு அவர்மீது பரிவுகொண்டு, தமது கையை நீட்டி, அவரைத் தொட்டு, அவரிடம், “நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!” என்றார். உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.

இயேசுவைச் சுற்றி எப்போதும் கூட்டம் இருந்தது. அத்தகைய ஒரு சூழலில், அங்கு வந்த தொழுநோயாளியின் மனதில், பெரும் போராட்டம் நிகழ்ந்திருக்கவேண்டும். அந்தக் கூட்டத்தின் நடுவே சென்றால், அவர்களைத் தீட்டுப்படுத்திவிட்டதாக, அவர்கள் கோபம் கொள்ளலாம், அந்த கோபம் வெறியாக மாறினால், கல்லால் எறியப்பட்டு சாகவும் நேரிடும் என்ற எண்ணங்கள் அந்தத் தொழுநோயாளியின் உள்ளத்தை நிறைத்திருக்கவேண்டும். இந்த ஆபத்தை உணர்ந்திருந்தாலும், அந்தத் தொழுநோயாளி இயேசுவின் மீது அளவற்ற நம்பிக்கை கொண்டிருந்ததால், அவரிடம் வந்தார்.

அவரைக் கண்டதும், கூட்டத்தினர், பயந்து, அலறி இயேசுவின் பக்கம் திரண்டிருக்க வேண்டும். அவர்களில் பலர், கோபத்தில், அங்கிருந்த கற்களைத் திரட்டியிருக்க வேண்டும். இவை எதுவும், இயேசுவைப் பாதிக்கவில்லை. அவர், அந்தக் கூட்டத்திலிருந்து வெளியேறி, தொழுநோயாளரை நோக்கிச் சென்றார்.

இயேசு தொழுநோயாளரை குணமாக்கிய முறை, அங்கிருந்தோர் பலருக்கு அதிர்ச்சியை அளித்திருக்கும். இயேசு, அவரை குணமாக்கிய முறையையும், அதைத் தொடர்ந்து, நிகழ்ந்தவற்றையும் நாம் அடுத்தத் தேடலில் சிந்திப்போம். அதுவரை... தொழுநோயாளர்களை, பொதுவாக, நோயாளர்களை இன்னும் பரிவான உள்ளத்துடன் அணுகிச்செல்லும் வரத்தை இறைவன் நமக்கு வழங்குமாறு, லூர்து நகர் அன்னையின் பரிந்துரையோடு மன்றாடுவோம்.

இத்திங்களன்று நாம் சிறப்பித்த 27வது உலக நோயாளர் நாளுக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வெளியிட்ட செய்தியில் அவர் கூறியுள்ள ஒரு கருத்துடன் இன்றைய நம் தேடலை நிறைவு செய்வோம். "நாம் ஒவ்வொருவரும் வறியோராய், தேவையுள்ளவராக இருக்கிறோம். நாம் பிறக்கும்போது, பெற்றோரின் பராமரிப்பு நமக்குத் தேவை. வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் நாம் அடுத்தவரைச் சார்ந்தே இருக்கிறோம். இந்த உண்மையை நாம் பணிவுடன் ஏற்றுக்கொண்டால், தேவையில் இருப்போர் அனைவருடன் நம்மையே ஒருங்கிணைக்க முடியும்"

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 February 2019, 15:04